மு.க.ஸ்டாலின்

“கொள்ளையடிப்பதும், கொத்தடிமையாக இருப்பதுதான் பழனிசாமிக்கு தெரியும்” - மு.க.ஸ்டாலின் கடும் குற்றச்சாட்டு!

“தமிழகத்தைச் சீரழித்த பழனிசாமி அரசின் வீழ்ச்சி, அடிப்படை வசதிகள் கூட நிறைவேற்றப்படாத அவரது சொந்தத் தொகுதியான எடப்பாடி மண்ணில் இருந்து தொடங்குகிறது” என மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

“கொள்ளையடிப்பதும், கொத்தடிமையாக இருப்பதுதான் பழனிசாமிக்கு தெரியும்” - மு.க.ஸ்டாலின் கடும் குற்றச்சாட்டு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

“அண்ணாவின் பெயரால் கட்சி நடத்தும் பழனிசாமிக்கு சுயாட்சியும் செய்யத் தெரியாது; கூட்டாட்சித் தத்துவமும் புரியாது. அவருக்குத் தெரிந்ததெல்லாம், மாநிலத்தைக் கொள்ளையடிப்பது; மத்திய அரசுக்குக் கொத்தடிமையாக இருப்பது மட்டும்தான்”

- கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் உரை.

இன்று (22-02-2021) மாலை, திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் அவர்கள், சேலம் மாவட்டம், மேட்டூர் – மேச்சேரி ஒன்றியம், ஓலைப்பட்டி ஊராட்சியில் நடைபெற்ற, சேலம் மேற்கு மாவட்டக் கழகத்திற்குட்பட்ட சட்டமன்றத் தொகுதிகளுக்கான “உங்கள் தொகுதியில் ஸ்டாலின்” என்ற மக்களின் குறைகேட்கும் தேர்தல் பரப்புரை நிகழ்ச்சியில் பங்கேற்று, மக்கள் அளித்த கோரிக்கை மனுக்களைப் பெற்றுக் கொண்டு, அவர்களிடம் நேரிலும் குறைகளைக் கேட்டறிந்தார்.

‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ நிகழ்ச்சியில் நிறைவாக கழகத் தலைவர் அவர்கள் ஆற்றிய உரை விவரம்:

தமிழகத்தின் பெருமை மிகு மேட்டூர் அணை இருக்கும் இந்தப் பகுதியில் உங்களை எல்லாம் சந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். காவிரி ஆற்றின் குறுக்கே 1924 ஆம் ஆண்டு கட்டப்பட்ட இந்த மேட்டூர் அணை 1934 ஆம் ஆண்டு திறக்கப்பட்டது. இந்த அணையால் கடந்த நூறு ஆண்டு காலத்தில் தமிழகம் அடைந்த பயன் என்பது வார்த்தைகளால் வர்ணிக்க முடியாதது. மக்களை வாழ வைத்த, வாழ வைத்துக் கொண்டு இருக்கும் நீர் தேவதையாக இந்த மேட்டூர் அணை இருக்கிறது.

சேலம் மாவட்டத்தில் இருந்தாலும் சுற்றிலும் உள்ள 12 மாவட்டத்து மக்களுக்கும் நிலப்பரப்புக்கும் மேட்டூர்தான் நம்பிக்கை ஒளிவிளக்காக அமைந்துள்ளது. ஒரு அணை கட்டினால், அது எத்தனை தலைமுறைகள் தாண்டியும் பயன்படும் என்பதற்கான கம்பீரமான உதாரணமாக மேட்டூர் அணை இருக்கிறது. இதனை உணர்ந்த காரணத்தால் தான் கழக ஆட்சியில், கலைஞரின் ஆட்சியில் ஏராளமான அணைக்கட்டுகள் கட்டப்பட்டன.

* உப்பாறு - ஆழியாறு அணை

* உப்பாறு - சோலையாறு அணை

* சோலையாறு அணை

* இராமநதி அணை

* பொன்னியாறு அணை

* பில்லூர் அணை

* பரப்பனாறு அணை

* மஞ்சளாறு அணை

* மணிமுடிதாங்கி அணை

* கீழ் கொடையாறு அணை

* பிளவுக்கல் - பெரியாறு நீர்த்தேக்கம்

* பிளவுக்கல் - கோவிலாறு நீர்த்தேக்கம்

* கடானா நீர்த்தேக்கம்

* இராமநதி நீர்த்தேக்கம்

* கருப்பாநதி நீர்த்தேக்கம்

* சித்தாறு நீர்த்தேக்கம்

* மேல் நீராறு நீர்த்தேக்கம்

* கீழ் நீராறு நீர்த்தேக்கம்

* பெருவாரி பள்ளம் நீர்த்தேக்கம்

* சின்னாறு

* மருதாநதி நீர்த்தேக்கம்

* சின்னாறு நீர்த்தேக்கம்

* குண்டேரிப்பள்ளம் நீர்த்தேக்கம்

* வறட்டுப்பள்ளம் நீர்த்தேக்கம்

* பாலாறு பொரந்தலாறு நீர்த்தேக்கம்

* வரதமாநதி நீர்த்தேக்கம்

* பரப்பலாறு நீர்த்தேக்கம்

* மோர்தானா நீர்த்தேக்கம்

* ராஜாதோப்பு நீர்த்தேக்கம்

* பொய்கையாறு நீர்த்தேக்கம்

* இருக்கன்குடி அணை

* மாம்பகத்துடையாறு அணை

* நல்லதங்காள் அணை

* நாங்கியாறு அணை

* செண்பகத்தோப்பு அணை

* சோத்துப்பாறு அணை

- இப்படி ஏராளமான அணைகளை, நீர்த்தேக்கங்களை உருவாக்கிய அரசு தான் தி.மு.கழக அரசு.

“கொள்ளையடிப்பதும், கொத்தடிமையாக இருப்பதுதான் பழனிசாமிக்கு தெரியும்” - மு.க.ஸ்டாலின் கடும் குற்றச்சாட்டு!

இருபதாம் நூற்றாண்டில் இத்தகைய மாபெரும் சாதனைகளை நிகழ்த்திய நவீன கரிகால் சோழன் தான் நம்முடைய தலைவர் கலைஞர் அவர்கள். இவை அனைத்தும் கழக அரசின் கம்பீரத்துக்கான சாட்சியங்களாக இன்று வரை இருக்கின்றன.

ஆனால் பழனிசாமி அரசு எத்தகைய அரசு என்பதை சமீபத்தில் பார்த்தோம். பழனிசாமியின் ஊழல் ஆட்சிக்கு உதாரணம் இந்த விழுப்புரத்தில் பெண்ணையாற்று தடுப்பணை உடைந்து விழுந்த காட்சி ஒன்று போதும். 25 கோடி மதிப்பில் கட்டப்பட்ட தடுப்பணை ஒரு மாத காலத்தில் உடைந்து விட்டது.

25 கோடி மதிப்பிலான அணையில் எத்தனை கோடி இவர்களால் சுருட்டப்பட்டது என்பது தெரியவில்லை. ஊழல் முறைகேடு காரணமாக அந்த அணை இடிந்து விழுந்தது. அந்த ஒப்பந்தகாரர் மீது இந்த அரசாங்கம் என்ன நடவடிக்கை எடுத்தது? சில அதிகாரிகளை சஸ்பெண்ட் செய்துள்ளார்கள். அவை கண்துடைப்பு நடவடிக்கைகள். சில வாரங்கள் ஆனதும் அவர்களுக்கும் மீண்டும் வேலை தரப்பப்பட்டு விடும். அந்த ஒப்பந்தகாரர் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது?

கிருஷ்ணகிரி அணையின் ஷட்டரை புதுப்பித்து 2016 ஆம் ஆண்டு இந்த அரசு ஒப்படைத்தது. ஆனால் ஒழுங்காக அமைக்காததால் ஷட்டர் உடைந்தது. கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே 35 கோடி செலவில் அணை கட்டப் போவதாக சொன்னார்கள். ஆனால் தடுப்பணை தான் கட்டினார்கள்.

2015 ஆம் ஆண்டு அடித்த வெள்ளத்தில் தடுப்பணையே உடைந்துவிட்டது. இப்போது அதை சரி செய்ய 20 கோடியை ஒதுக்கி இருக்கிறார்கள். புதிதாக 8 அணைகளைக் கட்டப் போவதாக 2019 ஆம் ஆண்டு அறிவித்தார்கள். இதுவரை அதற்கான எந்த முயற்சியும் எடுக்கவில்லை. இதுதான் பழனிசாமி அரசின் 'வெற்றி நடைபோடும் தமிழகம்'.

இது வெற்றி நடை போடும் தமிழகம் அல்ல. இற்றுவிழும் தமிழகம். உடைந்து நொறுங்கும் தமிழகம். ஏதோ சாதனை செய்து கிழித்துவிட்டதாக பக்கம் பக்கமாக விளம்பரம் தரும் பழனிசாமி, கடந்த பத்தாண்டு காலத்தில் உருவாக்கப்பட்ட நீர்ப் பாசனப் பணிகள் குறித்து விளக்கம் அளிக்கத் தயாரா?

காவிரி காப்பான், பொன்னியின் செல்வன் என்று பட்டம் போட்டுக் கொண்டால் போதுமா? பச்சைத் துண்டு போட்டுக் கொண்டால் போதுமா? காவிரி நதியில் நம்முடைய உரிமை பறிபோனதற்கு காரணமே பழனிசாமிதான். உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புப்படி, நிலத்தடி நீரைக் கணக்கில் எடுக்கக் கூடாது.

குடிநீரைப் பற்றி பேசக் கூடாது. ஆனால் இந்த இரண்டு காரணங்களையும் காட்டி கர்நாடக மாநிலம் தனக்கு வேண்டிய அளவு நீரை பெற்றுக் கொண்டது. ஆனால் இதே காரணத்தை தமிழகத்தின் சார்பில் சொல்லி உரிமையை நிலைநாட்டாத அரசு தான் பழனிசாமியின் அரசு. அவரால் தான் பதினான்கே முக்கால் டி.எம்.சி. தமிழகத்துக்கு குறைந்தது. இந்த நிலையில் கூச்சம் இல்லாமல் காவிரி காப்பான் என்று பட்டம் போடுவதற்கு உங்களுக்கு வெட்கமாக இல்லையா?

இப்படி ஒவ்வொரு விஷயத்திலும் தமிழகத்துக்கான உரிமையை பறி கொடுத்தவர்தான் பழனிசாமி. வேளாண் சட்டங்களை ஆதரித்ததால் விவசாயிகளின் உரிமை பறி போனது. குடியுரிமைச் சட்டத்தை ஆதரித்ததால் சிறுபான்மையினர் உரிமை பறி போனது. புதிய கல்விக்கொள்கையை ஆதரிப்பதால் கல்வி உரிமை பறிபோனது. நீட் தேர்வை எதிர்க்காததால் உயர்கல்வி மருத்துவ உரிமை பறிபோனது. மத்திய அரசைக் கேள்வி கேட்க முடியாததால் நிதி வரத்து குறைந்தது. இப்படி ஒட்டு மொத்தமாக தமிழகத்தை எழுதிக் கொடுத்துவிட்டார்.

அவர் பாஜகவுக்கு அடிமையாக இருக்கட்டும். ஆனால் தமிழகத்தை அடமானம் வைக்க பழனிசாமிக்கு உரிமை இல்லை. இந்த கொத்தடிமை ஆட்சிக்கு விரைவில் முற்றுப்புள்ளி வைத்தாக வேண்டும்.

அண்ணா வழியில் அயராது உழைப்போம்.

ஆதிக்க மற்ற சமுதாயம் அமைத்தே தீருவோம்.

இந்தித் திணிப்பை என்றும் எதிர்ப்போம்.

வன்முறை தவிர்த்து வறுமையை வெல்வோம்.

மத்தியில் கூட்டாட்சி, மாநிலத்தில் சுயாட்சி - என்று நமக்கு ஐம்பெரும் முழக்கங்களை உருவாக்கிக் கொடுத்துள்ளார் கலைஞர் அவர்கள். சுயாட்சி பெற்ற மாநிலம், கூட்டாட்சி கொண்ட மத்திய அரசு. இதுதான் கலைஞரின் கொள்கை. கலைஞரை உருவாக்கிய அண்ணாவின் கொள்கை. ஆனால் அண்ணாவின் பெயரால் கட்சி நடத்துகிற பழனிசாமிக்கு சுயாட்சி செய்யவும் தெரியாது. கூட்டாட்சித் தத்துவமும் புரியாது. அவருக்குத் தெரிந்தது எல்லாம், மாநிலத்தில் கொள்ளை அடிப்பது, மத்திய ஆட்சிக்கு கொத்தடிமையாக இருப்பது.

இதுதான் அவரது கொள்கை. தனிப்பட்ட பழனிசாமி எப்படி வேண்டுமானாலும் இருந்து கொள்ளட்டும். அது நமக்கு பொருட்டல்ல. ஆனால் ஒரு நாட்டின் முதலமைச்சர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமோ அதற்கான எந்த இலக்கணமும் இல்லாமல் - வெறும் தலைக்கனத்தோடு மட்டுமே செயல்படும் பழனிசாமியிடம் இருந்து மாண்புமிகு பதவியைப் பறிக்கும் தேர்தல் தான் இந்த தேர்தல். மாண்புமிகு மக்கள் இந்தக் கடமையை ஆற்ற வேண்டும்.

எடப்பாடி தொகுதியில் 42 ஆண்டுகளாக திமுக வெற்றி பெறவில்லை, இனியும் வெற்றி பெறாது என்று பழனிசாமி சொல்லி இருக்கிறார். அதுவே பொய். 2006 ஆம் ஆண்டு திமுக கூட்டணியில் இருந்த பாமக தான் வெற்றி பெற்றது. அதிமுக தோற்றது. எனவே நாற்பது ஆண்டுகளாக திமுக வெற்றி பெறவில்லை என்பதே பொய்.

நாற்பது ஆண்டுகளாக அதிமுகவே வெற்றி பெற்றது என்று சொல்லப்படும் எடப்பாடி தொகுதியை சொர்க்க பூமியாக மாற்றிவிட்டீர்களா என்பதுதான் என்னுடைய கேள்வி. எல்லா விஷயங்களிலும் தன்னிறைவு பெற்ற தொகுதியாக மாற்றிவிட்டீர்களா? ஒரு முதலமைச்சர் தொகுதி என்ற அடிப்படையில் இங்கு வாழும் மக்களுக்கு எந்தக் குறையும் இல்லை, அவர்களது அனைத்துத் தேவைகளையும் நான் பூர்த்தி செய்து விட்டேன் என்று பழனிசாமியால் சொல்ல முடியுமா?

மரவள்ளிக்கிழங்கு எடப்பாடியில் அதிகம் பயிரிடப்பட்ட பயிராகும். தனது பினாமிகள் மூலம் இந்த வர்த்தகத்தை முதலமைச்சர் தனது கட்டுப்பாட்டில் வைத்திருப்பதாக விவசாயிகள் புகார் சொல்கிறார்கள். இதனால் விவசாயிகளுக்கு உரிய விலை கிடைக்கவில்லை. விவசாயிகளிடமிருந்து குறைந்த விலையில் பினாமிகள் வாங்குகிறார்கள். அதிக விலைக்கு விற்கிறார்கள். இதனால் பாதிக்கப்படுவது எடப்பாடியை சேர்ந்த விவசாயிகள் தான்.

எடப்பாடி தொகுதியில் உள்ள மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையங்கள் முழு வசதி உள்ளதாக இருக்கிறதா? இல்லை! பெரும்பாலான நேரங்களில் நோயாளிகள் அடிப்படை கவனிப்புக்காக கூட சேலத்திற்கு தான் அனுப்பப்படுகிறார்கள். பல இடங்களில் அம்மா கிளினிக்குகளைத் திறந்துள்ளார் பழனிசாமி. ஆனால் எடப்பாடி நகரத்தில் உள்ள மருத்துவமனைகளில் போதுமான மருத்துவர்கள் இல்லை. மருத்துவமனை வளாகத்தில் சரியான கழிப்பறைகள் இல்லை இதுதான் நிலைமை!

அனைத்து கூட்டுறவு சங்கங்களும் முதலமைச்சர் மற்றும் அவரது ஆட்களின் கட்டுப்பாட்டில் உள்ளன. அதிமுக முன்னாள் யூனியன் அவைத் தலைவர் நங்கவள்ளி கூட்டுறவு நிறுவனத்தில் சுமார் 15 கோடி ரூபாய் பணத்தை முறைகேடாகப் பயன்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டது. அதன்பிறகு அவர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். ஆனால் இந்த பணத்தை முழுமையாக மீட்டெடுக்கவில்லை.

கூட்டுறவு வங்கிகளில் கடன் பெறும் 10 பேரில் 7 பேர் அதிமுகவைச் சேர்ந்தவர்களாக இருக்கிறார்கள். அவர்களுக்குத்தான் கடன் தரப்படுகிறது. பழனிசாமியின் நெடுங்குளம் பஞ்சாயத்தில் அவரது சகோதரர் அரசாங்க அதிகாரிகளை தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளார். பலரும் மிரட்டப்படுகிறார்கள். தனக்கு வேண்டிய ஆட்களின் நிலங்களைப் பாதுகாக்க, குழாய் பதிப்பு திட்டத்தின் நீளத்தை 26 கி.மீ அதிகரித்துள்ளார்கள். ஆனால் இது ஆயிரக்கணக்கான விவசாயிகளை பாதிக்கிறது!

கடந்த தேர்தலில் ஜவுளி பூங்கா அமைக்கப்படும் என்று பழனிசாமி வாக்குறுதி அளித்திருந்தார். ஆனால் அதற்கான எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

ஊழல் வழக்குகளில் இருந்து தன்னைப் பாதுகாத்துக் கொள்ள, நெசவாளர்களின் வாழ்வாதாரத்தை சேதப்படுத்திய பாஜகவுடன் அவர் கூட்டணி வைத்துள்ளார். மாம்பழக்கூழ் தொழிற்சாலை அமைக்கவில்லை! ஜவுளி பூங்கா அமைக்கவில்லை! பூலம்பட்டி சுற்றுலா மையம் ஆக்கப்படவில்லை! - இதுதான் எடப்பாடி தொகுதியின் நிலைமை என்றால் கடந்த 43 ஆண்டுகளாக தொகுதியை வைத்துக் கொண்டு என்ன செய்தீர்கள் என்று தானே கேட்க முடியும்?

தமிழகத்தைச் சீரழித்த பழனிசாமி அரசின் வீழ்ச்சி இந்த எடப்பாடி மண்ணில் இருந்துதான் தொடங்கப்போகிறது. மக்களாகிய உங்களின் பேராதரவுடன் தமிழக வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில் திமுக கூட்டணி வெற்றி பெற்று சாதனை படைக்கப்போகிறது.

அதன் பிறகு அமையும் கழக அரசானது, தமிழர்களின் உரிமையைக் காக்கும் அரசாக, தமிழ்நாட்டை செழிக்க வைக்கும் அரசாக அமையும். அப்போது உங்கள் கவலைகள் யாவும் தீரக் கூடிய அரசாக அமையும். அதற்கு உங்கள் அத்தனைபேரின் ஆதரவும் வேண்டும் என்று அன்போடு கேட்டு விடைபெறுகிறேன். நன்றி வணக்கம்.” இவ்வாறு கழகத் தலைவர் அவர்கள் நிறைவுரை ஆற்றினார்.

banner

Related Stories

Related Stories