மு.க.ஸ்டாலின்

“தி.மு.க என்ற தனிப்பட்ட கட்சியின் ஆட்சியாக இல்லாமல், அது மக்களாட்சியாக அமையும்” - மு.க.ஸ்டாலின் உறுதி!

“அசாம் மாநிலத்தில் ஆட்சியில் உள்ள பா.ஜ.க. அரசு வரியைக் குறைத்து பெட்ரோல் - டீசல் விலையைக் குறைத்தது போல், அந்தக் கூட்டணியில் உள்ள முதலமைச்சர் பழனிசாமி தமிழகத்தில் செய்யாதது ஏன்?”

“தி.மு.க என்ற தனிப்பட்ட கட்சியின் ஆட்சியாக இல்லாமல், அது மக்களாட்சியாக அமையும்” - மு.க.ஸ்டாலின் உறுதி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

“சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணையின் விலை குறைந்தாலும், பெட்ரோல் - டீசல் விலையைக் குறைக்காமல் உயர்த்தி, மக்களுக்கு தினந்தோறும் சாட்டையடி தருகிறது மத்திய பா.ஜ.க. அரசு” என தி.மு.கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் சாடியுள்ளார்.

இன்று (22-02-2021) காலை, திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் அவர்கள், ‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக திருப்பூரில் இருந்து ஈரோடு மாவட்டம் கோபி பகுதி மொடச்சூர் ஊராட்சிப் பகுதியைக் கடந்து செல்லும் வழியில், 100 நாள் வேலைத்திட்டத்தில் பணியாற்றி வந்த பெண் தொழிலாளர்களுடன் கலந்துரையாடிக் குறைகளைக் கேட்டறிந்தார்.

அப்போது பேசிய தொழிலாளர்கள், இந்த ஆட்சியில் தங்களுக்கு முறையான பணிகளைத் தருவதில்லை என்றும் கூலியைக் குறைத்துத் தருவதாகும் பல்வேறு குற்றச்சாட்டுகளைத் தெரிவித்தனர். கழக ஆட்சியில் அவர்களது குறைகள் தீர்க்கப்படும் என கழகத் தலைவர் அவர்கள் உறுதியளித்தார். இந்நிகழ்வின்போது, மொடச்சூர் தி.மு.க. ஊராட்சி மன்ற தலைவர் சரவணக்குமார், அப்பகுதி மக்கள் மற்றும் ஏராளமான பெண்கள் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

இதன் பின்னர், கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின், ஈரோடு மாவட்டம், அந்தியூர் – பங்களாபுதூர், பி.என்.பாளையம் ஒன்றியம் – புஞ்சை துரையம்பாளையம் ஊராட்சி, சத்தி – அத்தானி சாலை அருகில் நடைபெற்ற, ஈரோடு வடக்கு மாவட்டக் கழகத்திற்குட்பட்ட சட்டமன்றத் தொகுதிகளுக்கான “உங்கள் தொகுதியில் ஸ்டாலின்” என்ற மக்களின் குறைகேட்கும் தேர்தல் பரப்புரை நிகழ்ச்சியில் பங்கேற்று, மக்கள் அளித்த கோரிக்கை மனுக்களைப் பெற்றுக் கொண்டு, அவர்களிடம் நேரிலும் குறைகளைக் கேட்டறிந்தார்.

‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ நிகழ்ச்சியின் நிறைவாக கழகத் தலைவர் அவர்கள் ஆற்றிய உரை விவரம்:

அந்தியூர் என்றாலே மாட்டுச் சந்தையும், குதிரைச் சந்தையும் தான் அனைவருக்கும் நினைவுக்கு வரும். மாடு என்றால் செல்வம். குதிரை என்றால் கம்பீரம். செல்வமும் கம்பீரமும் நிறைந்த ஊர் தான் இந்த அந்தியூர்.

மாட்டுச் சந்தை கூட, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வருகிறது. ஆனால் குதிரைச் சந்தை என்பது தென்னிந்தியாவில் நடக்கும் ஒரே இடம் இந்த அந்தியூர் தான். சுல்தானியர்களின் ஆட்சி காலத்தில் குதிரைப்படை வீரர்கள் அதிகமாக வாழ்ந்த வீரம் மிகுந்த பகுதிதான் இந்த அந்தியூர் பகுதியாகும்.

அத்தகைய வீரமும் துடிப்பும் கொண்ட பகுதிக்கு நான் இன்று வந்திருக்கிறேன். “மு.க.ஸ்டாலின் ஆகிய நான், தமிழ்நாட்டு மக்களாகிய உங்கள் முன்னிலையில் ஒரு உறுதியை அளிக்கிறேன். உங்கள் பிரச்சினைகளைத் தீர்ப்பதே எனது முதல் பணி. எனது அரசின் முதல் 100 நாட்கள், போர்க்கால அடிப்படையில் உங்கள் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்காக அர்ப்பணிக்கப்படும். இதற்கு நான் பொறுப்பு” - என்ற உறுதிமொழியை உங்களுக்கு வழங்குவதற்காக வந்திருக்கிறேன்.

இத்தகைய உறுதிமொழியை வழங்கும் என் மீது நம்பிக்கை வைத்து நீங்களும் வருகை தந்துள்ளீர்கள். இன்னும் மூன்றே மாதத்தில் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் நடக்க இருக்கிறது. அப்போது அமைய இருக்கும் ஆட்சி என்பது உங்களது கோரிக்கைகளை நிறைவேற்றும் ஆட்சியாக நிச்சயம் அமையும். திராவிட முன்னேற்றக் கழகம் என்ற தனிப்பட்ட கட்சியின் ஆட்சியாக இல்லாமல், அது மக்களாட்சியாக அமையும் என்ற உறுதிமொழியையும் உங்களுக்கு நான் வழங்கக் கடமைப்பட்டுள்ளேன்.

இப்போது நான் இந்த மேடையில் நின்று கொண்டு இருந்தாலும் - தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் லட்சக்கணக்கான கழகத் தொண்டர்கள் பெட்ரோல், டீசல், சிலிண்டர் விலை உயர்வைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்திக் கொண்டு இருக்கிறார்கள். இன்றைக்கு நாடு முழுவதும் மிகப்பெரிய பிரச்சினையாக மாறி இருப்பது பெட்ரோல் விலை உயர்வு, டீசல் விலை உயர்வு, சிலிண்டர் விலை உயர்வு ஆகும்.

மத்திய அரசாங்கம் தினந்தோறும் மக்களுக்கு சாட்டையடி தண்டனை தருவதைப் போல பெட்ரோல் விலையையும் டீசல் விலையையும் உயர்த்திக் கொண்டு வருகிறது. கச்சா எண்ணெய் விலை உயர்ந்தால் பெட்ரோல், டீசல் விலை உயரும் என்று இதுவரை சொல்லி வந்தார்கள். ஆனால் இப்போது கச்சா எண்ணெய் விலை குறைந்தாலும் பெட்ரோல், டீசல் விலை குறைவது இல்லை. இதுதான் மோடி அரசு.

மத்திய - மாநில அரசு போடும் வரிகளின் காரணமாகத்தான் இந்தளவுக்கு விலை உயர்ந்து வருகிறது. பெட்ரோலுக்கு கடந்த 2014 ஆம் ஆண்டு மத்திய அரசின் வரி என்பது ரூபாய் 10.39 ஆக இருந்தது. இப்போது ரூபாய் 32.98 ஆக உள்ளது. மாநில அரசு போட்ட வரி என்பது 2014 ஆம் ஆண்டு ரூபாய் 11.90 ஆக இருந்தது. இப்போது ரூபாய் 19.90 ஆகிவிட்டது. டீசலைப் பொறுத்தவரை, மத்திய அரசு போட்ட வரி 2014 ஆம் ஆண்டு ரூபாய் 4.50 ஆக இருந்தது. இன்று 31.83 ஆகிவிட்டது. மாநில அரசின் வரி 2014 ஆம் ஆண்டு 6.61 ஆக இருந்தது. இப்போது ரூபாய் 11.22 ஆக இருக்கிறது.

இப்படி எல்லாமே பல மடங்கு விலை உயர்ந்து விட்டது. இதை வைத்துப் பார்க்கும் போது, பெட்ரோல், டீசல் விலை என்பது கச்சா எண்ணெய்யின் விலையைப் பொறுத்தது அல்ல. அது மத்திய, மாநில அரசுகளின் மக்கள் விரோதக் குணாம்சத்தைப் பொறுத்ததாக உள்ளதை உணர முடிகிறது. பெட்ரோல், டீசல் விலை உயர்வு என்பது ஒரு சங்கிலித் தொடர் போன்றது!

இதனுடைய விலை உயரும் போது விலைவாசி உயர்கிறது. அதாவது உயர் வகுப்பினர், நடுத்தர வர்க்கத்தினர், ஏழைகள் என அனைவரையும் பாதிக்கக் கூடியதாக இருக்கிறது. இதனால் பேருந்து கட்டணம் கூடும். உணவுப்பொருட்கள் விலை கூடும். மளிகை பொருட்கள் விலை கூடும். காய்கறிகள் விலை கூடும். எனவே தான் பெட்ரோல் - டீசல் விலை உயர்வைக் கடுமையாகக் கண்டிக்க வேண்டி உள்ளது. அதனால் தான், “வரிகளைக் குறைத்து பெட்ரோல், டீசல் விலை உயர்வைத் தடுத்திடுக" என்று நான் அறிக்கை வெளியிட்டேன்.

பெட்ரோல், டீசலுக்கு அதிகப்படியான வரியைப் போட்டு இதன் விலையைக் கூட்டி வரும் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள், இதற்குக் காரணம் மன்மோகன்சிங் தான் என்று குற்றம் சாட்டுகிறார். இன்னும் எத்தனை ஆண்டு காலத்துக்கு முந்தைய அரசாங்கத்தையே குறை சொல்வீர்கள்? 2014-ஆம் ஆண்டு முதல் அதாவது ஏழு ஆண்டுகளாக ஆட்சியில் இருக்கும் கட்சி, இன்னமும் முந்தைய ஆட்சியையே குறை சொல்கிறது என்றால் என்ன அர்த்தம்? இவர்கள் தான் உண்மையான குற்றவாளிகள் என்று அர்த்தம்?

எதிர்க்கட்சியாக இருக்கும் போது வரிகளைக் குறை என்று சொன்னது பாஜக. ஆளும்கட்சியாக ஆனதும் வரிகளைக் கூட்டி மக்களை வதைப்பதும் அதே பாஜக தான். இன்றைக்கு உலக அளவில் அதிகமான அளவுக்கு விலையை உயர்த்தி விற்கும் நாடு இந்தியா. விற்பனை செய்யும் பிரதமர் நரேந்திர மோடி. இவர் தன்னை ஏழைத்தாயின் மகன் என்று சொன்னால் எப்படி ஏற்க முடியும்?

இந்த விலை உயர்வுக்கும் தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பதைப் போல பழனிசாமி நடமாடி வருகிறார். பெட்ரோல் விலை உயர்வுக்கு மோடி அரசு மட்டும் தான் காரணம் என்று நினைத்துக் கொள்ளாதீர்கள். பழனிசாமி அரசும் தான் காரணம். இன்னும் சொன்னால் பெட்ரோல், டீசல் விலை இந்தளவுக்கு உயர்ந்ததற்கு காரணமே பழனிசாமிதான்.

2006 முதல் 2011 வரை கழக ஆட்சி தமிழகத்தில் இருந்தது. கலைஞர் அவர்கள் முதலமைச்சராக இருந்தார். இரண்டு முறை தமிழக அரசின் வரியை குறைத்தார். அவர் தான் கலைஞர். 2006 ஆம் ஆண்டு பெட் ரோல் மீது போடப்பட்டு இருந்த 30 சதவிகித வரியை 27 சதவிகிதமாகக் குறைத்தவர் முதலமைச்சர் கலைஞர் அவர்கள்.

முதலமைச்சர் கலைஞரால் 27 சதவிகிதமாகக் குறைக்கப்பட்ட வரியை 34 சதவிகிதமாக 6.3.2017 அன்று ஆக்கியவர் பழனிசாமி. இதுதான் கலைஞருக்கும் - பழனிசாமிக்குமான வித்தியாசம்.

2006 ஆம் ஆண்டு டீசல் மீதான வரியை 25 சதவிகிதத்தில் இருந்து 23.40 சதவிகிதமாகக் குறைத்தவர் முதலமைச்சர் கலைஞர். 2008 ஆம் ஆண்டு அதையே 21.40 சதவிகிதமாக குறைத்தவர் முதலமைச்சர் கலைஞர். பழனிசாமி என்ன செய்தார் தெரியுமா?

21.40 சதவிகிதமாக இருந்த வரியை 6.3.2017 அன்று 25 சதவிகிதமாக உயர்த்தினார். இந்த நாட்டு மக்களுக்கு பழனிசாமி செய்த மாபெரும் கெடுதல் இது! இதுதான் வெற்றிநடை போடும் தமிழகமா? மாநில அரசின் வரியைக் குறைத்து விலையைக் குறைத்த கலைஞர் எங்கே? வரியைக் கூட்டி விலையை அதிகமாக்கிய பழனிசாமி எங்கே?

அசாம் மாநிலத்தில் உள்ள பா.ஜ.க. அரசு வரியைக் குறைத்து, லிட்டருக்கு 5 ரூபாய் பெட்ரோல், டீசல் விலையைக் குறைத்திருக்கிறது. அந்தக் கட்சியுடன் கூட்டணியாக இருக்கும் முதலமைச்சர் பழனிசாமி தமிழகத்தில் பெட்ரோல் - டீசல் விலையைக் குறைக்க ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை?

“தி.மு.க என்ற தனிப்பட்ட கட்சியின் ஆட்சியாக இல்லாமல், அது மக்களாட்சியாக அமையும்” - மு.க.ஸ்டாலின் உறுதி!

இதேபோல் பெட்ரோல் விலை முன்பு உயர்ந்த போது கேரள மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் வரியைக் குறைத்தார். அதன்மூலம் பெட்ரோல் - டீசல் விலையையும் குறைத்தார். ஆகவே திரு. பழனிசாமி அவர்களும் கொரோனா காலத்தில் அவரே உயர்த்திய வரியையாவது இப்போது குறைத்து, பெட்ரோல் - டீசல் விலை உயர்வைக் குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். உங்கள் தேர்தல் அறிவிப்புக்கு இதையும் சேர்த்துச் செய்யுங்கள் முதலமைச்சர் அவர்களே!

டெண்டர்கள் கொடுப்பது, அதில் இருந்து கமிஷன் வாங்குவது ஆகியவற்றில் இருக்கும் அக்கறை இவர்களுக்கு மக்கள் பிரச்னைகளில் இருப்பது இல்லை. தானும் தனது குடும்பமும் பினாமிகளும் நன்றாக இருந்தால் போதும் என்று நினைப்பவர்களாகத்தான் பழனிசாமியும் அவரது அமைச்சர்களும் இருக்கிறார்கள்.

சில நாட்களுக்கு முன்னால் இந்த அமைச்சர்களின் சுயநலத்தை சென்னை உயர்நீதிமன்றம் அம்பலப்படுத்தி உள்ளது. அமைச்சர் தங்கமணியின் தொகுதிக்கு மட்டும் அதிக நிதி ஏன் என்று சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது. ''ஊரக வளர்ச்சிக்காக நிதி ஒதுக்கீடு என்பது மக்கள் நலனுக்காகத் தான் இருக்கவேண்டுமே தவிர, தேர்தலில் வாக்குப் பெறுவதற்காக இருக்கக் கூடாது" என்று அறிவுறுத்தி இருக்கிறார்கள்.

நாமக்கல் மாவட்டத்தில் குமாரபாளையம் தொகுதிக்கு மட்டும் அதிகமான நிதியைக் கொண்டு போய் இருக்கிறார் அமைச்சர் தங்கமணி என்று குற்றம் சாட்டி வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. முதலமைச்சர் பழனிசாமி அவரது தொகுதியில் மட்டும், சொந்த மாவட்டத்தில் மட்டும் அதிகமான நிதியை கொண்டு போய்விடுகிறார்கள். அமைச்சர் வேலுமணி, கோவைக்கு மட்டுமே மந்திரி என்று நினைத்துக் கொள்கிறார். அமைச்சர் எம்.சி.சம்பத் தனது தொகுதிக்கு வரவேண்டிய நிதியை தடுக்கிறார் என்று ஆளும்கட்சியின் இன்னொரு தொகுதி சட்டமன்ற உறுப்பினரே குறை சொன்னார்.

இப்படி ஒவ்வொரு அமைச்சர்களும் தங்கள் தொகுதிக்கு மட்டுமே மந்திரியாக நினைத்துக் கொண்டு தமிழ்நாட்டை மறந்துவிட்டார்கள். அந்த தொகுதிகளுக்கும் மக்களது கோரிக்கையை முழுமையாக நிறைவேற்றி இருக்கிறார்களா என்றால் அதுவும் இல்லை!

மக்கள் கேட்கும் இடத்தில் பாலம் கட்டித் தருவது இல்லை! ஏற்கனவே போட்ட சாலையை மறுபடியும் போடுவது! எப்போதோ கட்டிய கட்டடத்தை இப்போது கட்டியதாக கணக்கு எழுதுவது! என்று பொய்க்கணக்கு மந்திரி அமைச்சரவையாக இந்த ஆட்சி மாறிவிட்டது. திடீரென்று முதலமைச்சர் பழனிசாமிக்கு அருந்ததியர் சமூக மக்கள் மீது பாசம் வந்துள்ளது. மாவீரன் பொல்லானுக்கு சிலை மற்றும் மணிமண்டபம் அமைக்கப்படும் என்று இப்போது பழனிசாமி அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பை 9.2.2019 அன்று சங்ககிரியில் நடந்த ஆதித்தமிழர் பேரவை நடத்திய அருந்ததியர் மாநாட்டில் நான் அறிவித்தேன்.

உண்மையான அக்கறை பழனிசாமிக்கு இருக்குமானால் உடனடியாக அப்போதே அறிவித்து செயல்படுத்தி இருந்தால் இதற்குள் சிலையும் மணிமண்டபமும் அமைத்திருக்கலாம். அவருக்கு அக்கறை கிடையாது என்பதால்தான் தேர்தல் வர இரண்டு மாதம் இருக்கும் நிலையில் சொல்லி இருக்கிறார். சும்மா சொல்லி வைப்போம் என்று மக்களை ஏமாற்றுகிறார்.

இந்த மேடையில் நான் தலை நிமிர்ந்து நிற்பதற்குக் காரணம், அருந்ததியர் இன மக்களுக்கு இடஒதுக்கீட்டு சட்டத்தை தமிழ்நாடு சட்டமன்றத்தில் தாக்கல் செய்து நிறைவேற்றிக் கொடுத்தவன் என்ற வரலாற்றுப் பெருமை உங்களில் ஒருவனான இந்த ஸ்டாலினுக்கு உண்டு. அதனால் தான் நான் தலைநிமிர்ந்து இந்த மேடையில் நிற்கிறேன். சமூகநீதித் தத்துவமான இடஒதுக்கீட்டை சட்டபூர்வமாக ஆக்கியது திராவிட இயக்கத்தின் ஆட்சிதான். இன்றைக்கு தாழ்த்தப்பட்ட – பிற்படுத்தப்பட்ட - மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்கள், கல்வியில் வேலைவாய்ப்பில் முன்னேறி சமூக வாழ்க்கையிலும் முன்னேறி வருகிறார்கள் என்றால் அதற்கு இடஒதுக்கீடு முறைதான் காரணம் என்பதை மனச்சாட்சி உள்ளவர்கள் யாரும் மறக்க மாட்டார்கள்.

“தி.மு.க என்ற தனிப்பட்ட கட்சியின் ஆட்சியாக இல்லாமல், அது மக்களாட்சியாக அமையும்” - மு.க.ஸ்டாலின் உறுதி!

2008ம் ஆண்டு ஜனவரி மாதம் 23ம் தேதி ஆளுநர் உரையில் அருந்ததியர் உள்ஒதுக்கீடு குறித்த அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக வந்தது. உடனடியாக நீதியரசர் எம்.எஸ்.ஜனார்த்தனம் தலைமையில் குழு அமைத்து இது தொடர்பாக அறிக்கை கொடுக்கச் சொன்னார் முதலமைச்சர் கலைஞர் அவர்கள். 2008ம் ஆண்டு நவம்பர் மாதம் நீதிபதி அவர்கள் தனது அறிக்கையை முதலமைச்சரிடம் கொடுத்தார். அறிக்கை தனது கைக்கு வந்த ஐந்தாவது நாளே அமைச்சரவைக் கூட்டத்தை முதலமைச்சர் கூட்டினார். அதில் ஒப்புதல் பெற்றார்.

இதற்கிடையில் கலைஞர் உடல்நிலை பாதிக்கப்பட்டு போரூர் ராமசந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதற்காக அருந்ததியர் உள்ஒதுக்கீடு சட்டம் தாமதம் ஆகிவிடக்கூடாது என்று கவலைப்பட்டார் கலைஞர் அவர்கள். துணை முதலமைச்சராக இருந்த என்னை அழைத்து, இந்த சட்டமுன் வடிவை சட்டமன்றத்தில் நீ தான் தாக்கல் செய்ய வேண்டும் என்று எனக்கு கட்டளையிட்டார்.

2009ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 26ம் தேதி தமிழ்நாடு சட்டமன்றத்தில் அருந்ததியர் உள்ஒதுக்கீடு சட்ட முன் வடிவை தாக்கல் செய்தேன். ஒரு மனதாக அந்த சட்டம் நிறைவேறியது. அடுத்த இரண்டு வாரத்துக்குள் இதற்கான அரசாணையையும் பிறப்பித்தோம். இந்த பத்து ஆண்டு காலத்தில் நூற்றுக்கணக்கான அருந்ததிய பிள்ளைகளின், இளைஞர்களின் வாழ்க்கையில் ஒளி ஏற்றப்பட்டுள்ளது என்றால் அதற்கு கலைஞர் கொண்டு வந்த சட்டம் தான் காரணம். அதனைக் கொண்டு வந்ததன் மூலமாக வரலாற்றில் எனது பெயரும் இடம்பெற்றுள்ளது என்ற மகிழ்ச்சியுடன்தான் இந்த இடத்தில் நான் நின்று கொண்டு இருக்கிறேன்.

கிராமசபைக் கூட்டமாக இருந்தாலும், இது போன்ற நிகழ்ச்சியாக இருந்தாலும், அங்கே வந்து பேசும் அருந்ததிய இளைஞர்கள் – சகோதரிகள், 'கலைஞரால் படித்தேன்' என்று சொல்லும் போது என் உள்ளம் அடையும் மகிழ்ச்சிக்கு அளவில்லை! கலைஞரின் மகன் என்ற உண்மையான பெருமையை அந்த நேரத்தில் நான் அடைகிறேன்.

“மகன்தந்தைக்கு ஆற்றும் உதவி இவன்தந்தை

என்நோற்றான் கொல்எனும் சொல்” - என்கிறார் திருவள்ளுவர். இவனை மகனாகப் பெறுவதற்கு இவன் தந்தை என்ன தவம் செய்தாரோ என்பதே உண்மையான புகழ் என்கிறார் திருவள்ளுவர். அத்தகைய மகனாக வாழ்ந்து காட்ட உறுதி ஏற்றிருப்பவன் நான்.

வாருங்கள்! நாம் அனைவரும் சேர்ந்து நமக்கான தமிழகத்தை நாளை அமைப்போம்! கழக ஆட்சி மலரும். உங்கள் கவலைகள் யாவும் தீரும்! நன்றி. வணக்கம்.

இவ்வாறு கழகத் தலைவர் அவர்கள் நிறைவுரை ஆற்றினார்.

banner

Related Stories

Related Stories