
தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டுகளில் முக்கிய குற்றங்களின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்துள்ளதாக மாநில அரசு தெரிவித்துள்ளது. மாநிலத்தின் சட்டம் மற்றும் ஒழுங்கு நிலைமை குறித்து உண்மை நிலையை விளக்குவதற்காக இன்று (12.03.2026) சென்னை தலைமைச் செயலகத்தின் பிரதான கட்டடம் இரண்டாம் தளத்தில் உள்ள கூட்ட அரங்கில் அதிகாரிகள் பத்திரிகையாளர்களைச் சந்தித்து விளக்கம் அளித்தனர்.
இந்தச் சந்திப்பில் உள், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் தீரஜ் குமார், இ.ஆ.ப., காவல் துறை தலைமை இயக்குநர் ஜி. வெங்கடராமன், இ.கா.ப., பெருநகர சென்னை காவல் ஆணையர் ஆ. அருண், இ.கா.ப., ஆகியோர் கலந்து கொண்டனர்.
அப்போது பேசிய அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் தீரஜ் குமார், தமிழ்நாட்டில் கடந்த ஐந்து ஆண்டுகளின் கணக்குகளைப் பார்க்கும்போது பெரும்பாலான முக்கிய குற்றங்களிலும் பதிவாகும் வழக்குகளின் எண்ணிக்கை குறைந்து வருவதாக தெரிவித்தார். குறிப்பாக கொலை, கொள்ளை நோக்கத்துடன் செய்யப்படும் கொலை, கடத்தல், வழிப்பறி, பெண்களுக்கு எதிரான குற்றங்கள் மற்றும் பாலியல் வன்கொடுமை போன்ற வழக்குகளின் எண்ணிக்கையில் கணிசமான குறைவு ஏற்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
இதற்கான எடுத்துக்காட்டாக, 2021 ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் 1,597 கொலை வழக்குகள் பதிவாகியிருந்தன. அதன் பின்னர் இந்த எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து 2024 ஆம் ஆண்டில் 1,490 ஆகவும், 2025 ஆம் ஆண்டில் 1,461 ஆகவும் குறைந்துள்ளதாக அவர் தெரிவித்தார். அதேபோல் பாலியல் வன்கொடுமை வழக்குகளிலும் குறைவு ஏற்பட்டுள்ளதாக கூறிய அவர், 2021 ஆம் ஆண்டில் 422 வழக்குகள் பதிவாகிய நிலையில் 2025 ஆம் ஆண்டில் அது 401 ஆக குறைந்துள்ளதாக விளக்கினார்.

மாநிலத்தில் கோவில் திருவிழாக்கள் உள்ளிட்ட பெரிய பொதுநிகழ்வுகள் அமைதியாக நடைபெறுவதற்காக காவல்துறையும் அரசும் இணைந்து பல்வேறு நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
சமீப காலங்களில் சில ஊடகங்களில் உண்மை நிலைக்கு மாறான தகவல்கள் வெளியிடப்படுவதாகவும், அதனால் உண்மையான தரவுகள் மற்றும் கணக்குகளை விளக்குவதற்காகவே இந்தச் சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். மேலும் 2026 ஆம் ஆண்டிற்கான தற்போதைய கணக்குகளையும் பார்க்கும்போது குற்றங்கள் குறையும் போக்கே தொடர்கிறது என்றும் அவர் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய காவல் துறை தலைமை இயக்குநர் ஜி. வெங்கடராமன், கடந்த ஐந்து ஆண்டுகளில் கொலை மற்றும் கொள்ளை நோக்கத்துடன் செய்யப்படும் கொலை போன்ற முக்கிய குற்றங்கள் சற்றளவு குறைந்துள்ளதாக கூறினார். அதே நேரத்தில் சிறிய குற்றமாக இருந்தாலும் பெரிய குற்றமாக இருந்தாலும் ஒவ்வொரு குற்றத்தையும் காவல்துறை மிகுந்த தீவிரத்துடன் எடுத்துக் கொண்டு விசாரித்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
குழந்தைகள் மீதான பாலியல் குற்றங்களைத் தடுக்கும் சட்டம் மற்றும் பட்டியலிடப்பட்ட சாதி, பழங்குடியினருக்கான பாதுகாப்புச் சட்டம் ஆகியவற்றைப் பற்றிய விழிப்புணர்வை அதிகரிக்க அரசு பல துறைகளுடன் இணைந்து நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அவர் கூறினார். பள்ளிக் கல்வித்துறை, சமூக நலத்துறை, ஆதி திராவிடர் நலத்துறை உள்ளிட்ட பல துறைகள் இணைந்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி வருவதால் தற்போது மக்கள் தைரியமாக புகார்கள் அளித்து வருகின்றனர் என்றும் தெரிவித்தார்.

முன்னர் சில புகார்கள் மனுவாக மட்டும் வைத்துக் கொள்ளப்பட்டிருந்தாலும் தற்போது எந்த குற்றச்சாட்டு வந்தாலும் உடனடியாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும் என்ற அணுகுமுறையுடன் காவல்துறை செயல்பட்டு வருவதாகவும் அவர் கூறினார். புள்ளிவிவரங்களைப் பற்றி அதிக முக்கியத்துவம் கொடுப்பதை விட குற்றங்களை பதிவு செய்து விசாரணை நடத்துவதே முக்கியம் என்றும் அவர் வலியுறுத்தினார்.
சமீப காலங்களில் நிகழ்ந்த பெரும்பாலான குற்றங்களில் குற்றவாளிகள் கண்டறியப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளதாகவும், மிகச் சில வழக்குகள் மட்டுமே தற்போது விசாரணையில் உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
தமிழக காவல்துறையைப் பொறுத்தவரையில் சிறிய குற்றம், பெரிய குற்றம் என்ற வேறுபாடு இல்லாமல் ஒவ்வொரு குற்றத்தையும் தீவிரமாக எடுத்துக் கொண்டு உடனடி நடவடிக்கை எடுத்து வருவதாகவும், மக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதில் எந்தவித தளர்வும் இருக்காது என்றும் காவல் துறை தலைமை இயக்குநர் தெரிவித்தார்.






