
ஈரான் நாட்டின் மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் தொடங்கிய போரானது, ஒட்டுமொத்த உலகத்தையும் பாதிப்புக்கு உள்ளாக்கி வருகிறது. இது மூன்று நாடுகளின் போராக முடியப்போவது இல்லை. உலகம் பாதிக்கும் முழுமையான போராகவே பரவி வருகிறது.
ஈரான் நாட்டில் 175க்கும் மேற்பட்ட பெண் குழந்தைகள், சிறுமிகளின் உடல்கள் வரிசையாகக் கிடத்தப்பட்டிருக்கும் கோரக் காட்சியானது, போர் கொடூரத்தின் அடையாளமாகச் சொல்லத் தக்கது ஆகும்.
ஈரான் அணு ஆயுதத் தயாரிப்பை நிறுத்த வேண்டும், அணு ஆயுதம் தயாரிக்கத் தேவையான யுரேனியத்தைச் செறிவூட்டுவதை நிறுத்த வேண்டும், நீண்ட தொலைவு சென்று தாக்கும் ஏவுகணைத் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்று அமெரிக்கா தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறது. இதை ஈரான் கேட்கவில்லை என்று சொல்லி அந்த நாட்டின் மீது அமெரிக்காவும், இஸ்ரேலும் போர் தொடுத்துவிட்டன.
ஈரான் தலைமை குரு அயதுல்லா அலி கமேனி இத்தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளார். 86 வயதான இவர் தான் ஈரான் நாட்டின் உச்சத் தலைவர் ஆவார். அவருடன் அவர் மகள், மருமகன், மருமகள் ஆகியோரும் இறந்து போயிருக்கிறார்கள். இவர் கொல்லப்பட்டுள்ளது ஈரானை அதிகப்படியான கோபத்துக்குத் தள்ளி இருக்கிறது. ஈரான் பாதுகாப்புக் கவுன்சில் கூட்டத்தைக் குறி வைத்து அமெரிக்கா தாக்குதல் நடத்தியதால் முக்கியத் தளபதிகள் கொல்லப்பட்டுள்ளார்கள்.
இதற்கான பதில் தாக்குதலை ஈரானும் தொடங்கி இருக்கிறது. வடக்கு இஸ்ரேல் பகுதிகள் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதலை நடத்தியது. பஹ்ரைனில் உள்ள அமெரிக்க கடற்படைத் தலைமையகம் தாக்கப்பட்டுள்ளது. குவைத்தில் உள்ள அமெரிக்க ராணுவ முகாம் மீதும் தாக்குதல் நடந்துள்ளது. வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ முகாம்களை இலக்கு வைத்து தாக்கி வருகிறது ஈரான்.

மேற்காசியாவில் நிலவும் போர் காரணமாக சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு கடுமையான தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. பதில் தாக்குதல் நடத்திவரும் ஈரான், மேற்காசியாவில் இருந்து கப்பல்கள் மூலம் கச்சா எண்ணெய், எரிவாயு கொண்டு செல்லப் பயன்படுத்தப்படும் ஹோர்முஸ் நீரிணை கடல் வழித்தடத்தை மூடிவிட்டது.
இந்தியாவுக்கு முக்கிய வழங்குநர் நாடான கத்தார், தனது திரவ இயற்கை எரிவாயு உற்பத்தியை முழுமையாக நிறுத்திவிட்டது. மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து எண்ணெய் வழங்கல் என்பது கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. எனவே எரிவாயு மற்றும் எண்ணெய் தட்டுப்பாடு என்பதை உருவாக்கிவிட்டது இந்தப் போர். உலக அளவில் எரிசக்தித் தட்டுப்பாடு என்பது சர்வதேசப் பொருளாதாரத்தை பெருமளவு பாதித்துள்ளது.
இந்தியாவுக்கு பல்வேறு தடைகளை தொடர்ந்து ஏற்படுத்தி வருகிறார் அமெரிக்க அதிபர் டிரம்ப். அதில் முக்கியமானது, ரஷ்ய நாட்டில் இருந்து கச்சா எண்ணெய் பெறக் கூடாது என்பது ஆகும். இது, மிகக் கொடூரமான சர்வாதிகார மனோபாவம் ஆகும்.
ரஷ்ய நாட்டில் இருந்து 30 நாட்களுக்கு மட்டும் கச்சா எண்ணெய் வாங்கிக் கொள்ள இந்தியாவுக்கு அமெரிக்கா அனுமதி வழங்கியது. பின்னர் இந்தத் தடையையும் நீக்க டிரம்ப் பரிசீலனை செய்து வருவதாகச் செய்திகள் வெளியாகி உள்ளது. டிரம்ப் என்ன சொல்வார் என்று வாயைப் பார்த்துக் கொண்டிருக்கும் நிலைமை உருவாகி இருக்கிறது.

‘இந்தப் போர் பலகாலம் நீடிக்கலாம்’ என்று சொல்லி வந்த டிரம்ப், ‘ஈரான் போர் விரைவில் முடிவுக்கு வரலாம்’ என்று சொல்லி இருக்கிறார். ‘ஆனால் சர்வதேச கச்சா எண்ணை வழங்கலுக்கு ஈரான் தடை ஏற்படுத்தினால் அந்நாடு மிகக் கடுமையான தாக்குதலைச் சந்திக்க நேரிடும்’ என்றும் டிரம்ப் சொல்லி இருக்கிறார். ‘பல்லாண்டு காலப் போருக்குத் தயார்’ என்று ஈரான் சொல்லி இருக்கிறது. எனவே இப்போர் எப்போது முடியும் எனத் தெரியவில்லை.
‘மத்திய கிழக்கில் அமைதியைக் குலைக்கும் இத்தகைய ராணுவ நடவடிக்கைகள், அமெரிக்காவின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்குப் பதிலாக பலவீனப்படுத்தும்’ என்று ‘நியூயார்க் டைம்ஸ்’ நாளிதழ் எழுதி இருக்கிறது.
உலகம் மிகக்கடுமையான நெருக்கடிக்கு ஆளாகி வருகிறது. எரிசக்தித் தட்டுப்பாடும், அதன் மூலமாக பொருளாதாரப் பாதிப்பும், விலைவாசி உயர்வும் ஏற்படும். அரசுகள் இடையே அச்சமான நிலைமை ஏற்படும். மற்ற சிந்தனைகள், வளர்ச்சிகள் பாதிப்பை அடையும். எனவே போரை நிறுத்த அனைத்துவித நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டியது உலக நாடுகளின் கடமை ஆகும்.
உலக நாடுகள் அனைத்தும் இதில் தலையிட வேண்டும். ‘ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சில் ஒற்றுமை இல்லாத அமைப்பாக இருக்கிறது’ என்ற தகவல்களும் வருத்தமடையச் செய்கின்றன. ‘சர்வதேச ஒழுங்கு தோல்வி அடைந்திருப்பதன் அடையாளம்தான் இந்தப் போர் ‘ என்று கனடா அறிவித்துள்ளது.
‘சமரசம் செய்யத் தயார்’ என்று ரஷ்யா அறிவித்துள்ளது. ஆனால், ‘நீங்கள் முதலில் ரஷ்யா – உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டு வாருங்கள்’ என்று ரஷ்ய அதிபர் புதினிடம் அமெரிக்க அதிபர் டிரம்ப் சொல்லி இருக்கிறார். இப்படி இடக்கு மடக்கு ஆகி வருகிறது பிரச்சினை.
இது குறித்து எல்லாம் பிரதமர் மோடி கவலைப்படவில்லை. போரின் கொடூரத்தைக் கண்டிக்கவில்லை. போரை நிறுத்த அறிவுரை சொல்லவில்லை. இந்தியாவில் சிலிண்டர் கொந்தளிப்பு நடந்து வரும் போது அவர் திருச்சிக்கு வந்து பழைய பல்லவியையே பாடிச் சென்றுள்ளார். சிலிண்டர் தட்டுப்பாடு என்பது போரால் ஏற்பட்டது அல்ல என்று பிரதமர் மோடி நம்புவார். அவருக்கு வெளிநாடுகளுக்குச் செல்ல முடியாது என்ற ஒரு வருத்தம்தான் இருக்கும்.






