தமிழ்நாடு

“அதிமுக அரசால் மாநிலம் முழுவதும் இந்த குறைபாடு இருக்கு” - விரைவில் களையப்படும் என முதலமைச்சர் உறுதி!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தை தொடங்கி வைத்து நிரூபர்களை சந்தித்து பேட்டி அளித்துள்ளார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

“அதிமுக அரசால் மாநிலம் முழுவதும் இந்த குறைபாடு இருக்கு” - விரைவில் களையப்படும் என முதலமைச்சர் உறுதி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

"மக்களைத் தேடி மருத்துவம் திட்டம்” மற்றும் "ஒரு இலட்சம் தொழிலாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் திட்டம் " ஆகிய திட்டங்களை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரியில் தொடங்கி வைத்தார்.

அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனும் நிரூபர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்தனர்.

அதன் விவரம் பின்வருமாறு:-

கேள்வி: மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தில் டயாலிசிஸ்-க்கு நோயாளிகள் மலை கிராமத்திலிருந்து மருத்துவமனைக்கு வருவதற்கு மிக சிரமமாக இருக்கிறது, அந்தத் திட்டத்தில் டயாலிசிஸ் நோயாளிகளுக்கு அங்கு சிகிச்சை அளிப்பதற்கு வாய்ப்பு இருக்கிறதா?

முதலமைச்சர் பதில்: அதுவும் செய்யப் போகிறோம், அதற்கான முயற்சியும் நடந்து கொண்டிருக்கிறது. Portable இயந்திரங்கள் மூலமாக அதையும் நிறைவேற்றுவதற்கான முயற்சியில் ஈடுபட்டிருக்கிறோம்.

கேள்வி: மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் மூலம் மலை கிராமங்கள் இருக்கக்கூடிய பகுதியான கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் அதிகம் இருக்கிறார்கள், குறிப்பாக, வனப்பகுதிகளில் ரத்தசோகை உள்ளவர்கள் அதிகளவில் இருக்கிறார்கள். இந்தத் திட்டம் அவர்களுக்கு எந்த அளவுக்கு பயனளிக்கும்? தமிழகம் முழுவதும் இந்தத் திட்டத்தை எப்படி செயல்படுத்தப் போகிறோம்?

முதலமைச்சர் பதில்: அதற்குத் தேவையான மருந்து, மாத்திரைகள் அனைத்தும் அதிக அளவில் கொடுத்து அதைக் கட்டுப்படுத்துவதற்கான முயற்சியில் நிச்சயம் ஈடுபடுவோம்.

கேள்வி: 1264 பெண் சுகாதார ஊழியர்களை ஈடுபடுத்தப்போவதாக கூறினீர்கள், நிறைய கிராமங்களில் Village Health Nurses இடங்கள் காலியாக இருக்கிறது, அவர்கள் முதலில் Grass Root Medical Intervention செய்து கொண்டிருந்தார்கள். அந்த உட்கட்டமைப்பை இதன் மூலமாக வலுப்படுத்துவோமா?

மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் பதில் : ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்களில் இருக்கும் செவிலியர்கள் மற்றும் துணை செவிலியர்கள் உட்பட அனைவருக்கும் ஏற்கனவே, வெளி முகமை மூலம் ஒப்பந்த அடிப்படையில் பணி நியமனம் செய்யப்பட்டு கடந்த 15 நாட்களாக இருந்து கொண்டிருக்கிறார்கள். இதில் தன்னார்வலர்களையும் பயன்படுத்தப் போகிறோம். இந்த செவிலியர்களுக்கு பணி நியமனம் மற்றும் கூடுதலாக பணி நியமனங்கள் அனைத்தும் இப்போது திட்டமிடப்பட்டிருக்கிறது.

இந்த மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தைப் பொறுத்தவரை, ஏறத்தாழ 25,000 மருத்துவம் சார்ந்த களப்பணியாளர்களை இந்த ஆண்டு இறுதிக்குள் பணியமர்த்த தமிழக முதலமைச்சர் உத்தரவிட்டிருக்கிறார். புதிய பணியிடங்கள், ஏற்கனவே இருக்கும் பணியாளர்கள் இவர்களைக் கொண்டு மொத்தம் 25 ஆயிரம் பேர் இந்தக் களப்பணியில் ஈடுபடவிருக்கிறார்கள்.

கேள்வி : கர்ப்பிணிப் பெண்களுக்கு ஊட்டச்சத்து பரிசுப் பெட்டகம் என்று கொடுக்கிறோம், அது ஓசூரில் மட்டும் வருடத்திற்கு 3500 குழந்தைகள் பிறக்கிறது, ஆனால், 300 முதல் 400 பெட்டகம்தான் வருகிறது என்று சொல்கிறார்கள், பலருக்கு குழந்தையே பிறந்து விடுகிறது, ஆனால் அவர்களுக்குப் பெட்டகம் கிடைப்பதேயில்லை. ஏற்கனவே, பலருக்கு ஊட்டச்சத்து குறைபாடுகள் இருக்கிறது, தாய்க்கு கொடுப்பதற்காக அந்தத் திட்டம் கொண்டு வந்தார்கள், ஆனால் அந்தத் திட்டம் சேரவில்லை.

மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் பதில் : ஊட்டச்சத்து பரிசுப் பெட்டகத்தைப் பொறுத்தவரை கடந்த ஒன்றரை ஆண்டு காலமாக கொரோனா தொற்று ஏற்பட்ட நிலையில், கடந்த ஆட்சிக் காலத்தில் அதில் சுணக்கம் ஏற்பட்டது உண்மை. தமிழக முதலமைச்சர் இந்தத் துறையை ஆய்வு செய்தபோது, ஏற்கனவே செயல்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கும் திட்டமாக இருந்தாலும் அதைத் தொடர்ந்திட வேண்டுமென்று இந்தத் துறைக்கு கட்டளையிட்டிருக்கிறார்கள். அந்த வகையில்தான் கடந்த 10 நாட்களாக எல்லா மருத்துவமனைகளிலும் அந்தப் பெட்டகம் தருகின்ற பணி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

கேள்வி: ஓசூர் தாலுகாவில் இனாம் நிலங்கள் இருக்கிறது, கடந்த அதிமுக அரசு 7.11.2019ல் நில வரித்திட்ட அலுவலகம் என்று திறந்து வைத்து அதன் மூலமாக அந்த நிலத்தை வாங்கிய விவசாயிகளுக்கெல்லாம் பட்டா கொடுத்துவிடுவோம் என்று சொன்னார்கள். ஆனால் இன்று வரை பட்டா கொடுக்கவில்லை, அந்த விவசாயிகளிடமிருந்து பெரிய தொகை வசூல் செய்திருக்கிறார்கள், ஆனால் அது மறுபடி விவசாயிகளிடத்திலும் சேரவில்லை, அந்த அலுவலகம் செயல்படாமல் இன்னமும் இருக்கிறது, அந்த நிலமும் அப்படியே இருக்கிறது, அது சம்பந்தமாக நீங்கள் என்ன நடவடிக்கை எடுப்பீர்கள்?

முதலமைச்சர் பதில்: ஒரு வாரத்திற்கு முன்புதான் நீங்கள் சொல்கிற வேலை ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது. அதை விரைவுபடுத்தப்போகிறோம், உரிய வகையில் அதற்கு பரிகாரம் காணப்படும்.

கேள்வி : நீங்கள் 2000ம் ஆண்டில் கலைஞர் ஆட்சியில் ஓசூர் பகுதியில் உள்ளவர்களுக்கெல்லாம் பட்டா கொடுத்தார்கள், ஆனால் வருவாய்த் துறை ஆவணங்களில் பட்டா கொடுத்ததற்கான விவரங்கள் ஏற்றப்படவில்லை, வருவாய்த் துறை ஆவணங்களே இப்போது மாயமாகி விட்டன. பட்டா வாங்கியவர்களுக்கு பட்டா இருக்கிறதே தவிர, அந்தப் பட்டா Classification Change செய்து கொடுக்காததால், அதை பயன்படுத்த முடியாமலேயே இருக்கிறது, இதுபோன்று ஓசூர் தாலுகா, தேன்கனிக்கோட்டை தாலுகாவிலும் இருக்கிறது.

முதலமைச்சர் பதில்: இது ஓசூரில் மட்டுமல்ல, தமிழ்நாடு முழுவதும் நீங்கள் சொல்கின்ற இந்தக் குறைபாடுகள் இருக்கிறது. கடந்தகால ஆட்சியில் அதை முறைப்படுத்தவில்லை என்பது உண்மை. அதை முறைப்படுத்துவதற்கான முயற்சியில் இந்த அரசு முழுமையாக ஈடுபட்டிருக்கிறது.

கேள்வி : தலைவருடைய ஆட்சிக் காலத்தில் கிருஷ்ணகிரி, தர்மபுரி மாவட்ட மக்களுக்காக ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டம் கொண்டு வந்தார்கள். ஆனால் இத்திட்டம் இன்னும் முழுமையாக இரு மாவட்டங்களுக்கும் சென்றடையவில்லை.

முதலமைச்சர் பதில் : அது திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி இருந்தபோது கொண்டுவந்து நிறைவேற்றப்பட்ட திட்டம். அது நூற்றுக்கு நூறு சதவீதம் முழுமையாக நிறைவேற முடியாத நிலையில், ஆட்சி மாற்றப்பட்டது. ஆனால் ஆட்சிக்கு வந்த கடந்த 10 ஆண்டு ஆட்சிக்காலத்தில் இந்தத் திட்டத்தை கிடப்பில் போட்டுவிட்டார்கள். இது திமுக கொண்டு வந்த திட்டம், கலைஞர் கொண்டு வந்த திட்டம், ஆகவே, இதைக் கேட்பாரற்ற நிலையில் போட்டுவிட்டார்கள்.

அதனால் பல இடங்களில் இன்னும் தண்ணீர் போகமுடியாத சூழ்நிலை இருந்தது. அதனால் கடந்த 10, 15 நாட்களுக்கு முன்பு அந்தத் துறையினுடைய அமைச்சராக இருக்கக்கூடிய மாண்புமிகு நேரு அவர்கள், அவருடைய அதிகாரிகளுடன் ஆய்வுப்பணிகளை மேற்கொண்டு அதன் அறிக்கையை முதலமைச்சருக்கும், அரசுக்கும் கொடுத்திருக்கிறார்கள். அதற்கான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு விரைவிலேயே அது முழுமை பெறும் என்பதை நான் உறுதியாக தெரிவித்துக்கொள்கிறேன்.

கேள்வி : தலைவர் ஆட்சிக்காலத்தில்தான் ஓசூர் பகுதியில் சிப்காட் தொடங்கப்பட்டது. இந்த மாவட்ட மக்களின் நீண்ட நாள் கோரிக்கை ரயில் சேவை வேண்டுமென்று கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். உதான் திட்டத்தில் ஓசூரிலிருந்து விமான சேவையை மத்திய அரசு அறிவித்தார்கள். ஆனால் அது செயல்படுத்தப்படவில்லை? இந்த மாவட்டத்தினுடைய மக்களின் கோரிக்கையாகவே இருக்கிறது?

முதலமைச்சர் பதில்: உங்களுடைய கோரிக்கை நிச்சயமாக பரிசீலிக்கப்படும்.

கேள்வி : தமிழ்நாட்டில் தடுப்பூசி தட்டுப்பாடு நிறைய இருக்கிறது. எப்போது இதற்கு தீர்வு காணப்படும்?

மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் பதில் : தடுப்பூசியைப் பொறுத்தவரை ஒன்றிய அரசின் சார்பில் வழங்கப்படுகிற அந்த 75 சதவீத தடுப்பூசி எல்லா மாநிலங்களுக்கும் பிரித்து தருகிறார்கள். மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களின் தொடர் வேண்டுகோள், பிரதமரிடத்தில் பேசியது, கடிதங்கள் எழுதியது போன்றவற்றின் விளைவாக கடந்த மாதம் 72 இலட்சம் என தொகுப்பிலிருந்து தருவதாகச் சொன்னார்கள். ஒரு மகிழ்ச்சியான விஷயம் என்னவென்றால் 19 இலட்சம் தடுப்பூசிகளை இந்தியாவிலேயே கூடுதலாக தமிழகத்திற்கு ஒன்றிய அரசு தந்திருக்கிறது. காரணம், இதில் தமிழ்நாட்டினுடைய செயல்திறன் நன்றாக இருக்கிறது என்று சொல்லி, அந்த வகையில் இந்த மாதத்திற்கு 79 இலட்சம் தருவதாக சொல்லி இருக்கிறார்கள். இதுவரையில் வந்திருப்பது

2 கோடியே 39 இலட்சம். இன்னும் 10 இலட்சத்திற்கும் மேற்பட்ட தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளது. இந்த வகையிலே தடுப்பூசிகள் எங்கும் தட்டுப்பாடு இல்லாமல் எல்லா இடத்திலும் போய்க் கொண்டிருக்கிறது."

இவ்வாறு பேசியுள்ளனர்.

banner

Related Stories

Related Stories