
பீகாரில் 243 சட்டசபை தொகுதிகளுக்கு 2 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக அரசியல் கட்சி தலைவர்கள் வேட்பாளர்களுக்கு ஆதரவாக தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர்.
முதல்கட்டமாக 121 தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. முதல்கட்ட தேர்தலில் மொத்தம் ஆயிரத்து 192 ஆண்கள், 122 பெண்கள் என ஆயிரத்து 314 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
2-ம் கட்டமாக 123 தொகுதிகளுக்கு 11-ம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. இரண்டு கட்ட தேர்தலிலும் பதிவாகும் வாக்குகள் நவம்பர் 14-ம் தேதி எண்ணப்பட உள்ளது.
இந்நிலையில் மோதிஹரி பகுதியில், நடைபெற்ற தேர்தல் பரப்புரையில் பிரியங்கா காந்தி பங்கேற்று பேசினார். அப்போது பேசிய அவர், ” NDA கூட்டணி தலைவர்கள் மதத்தின் பெயரை பயன்படுத்தி வாக்கு கேட்கிறார்களே தவிர வளர்ச்சிக்காக அல்ல. இந்த தேர்தல் நியாயமாக நடந்தால் NDA கூட்டணியை பீகார் மக்கள் தூக்கி எறிவார்கள்.
பீகார் மாநிலத்தின் உள்கட்டமைப்பு மிகவும் மோசமாக உள்ளது. கடந்த 3 ஆண்டுகளில் 27 பாலங்கள் இடிந்து விழுந்துள்ளன. ஏழைகள், பெண்கள், இளைஞர்களுக்கு ஏற்ற ஒரு அரசாங்கம் அமையும்” என தெரிவித்துள்ளார்.






