
பீகார் சட்டமன்ற தேர்தல் 2025, இந்திய அளவில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிற தேர்தலாக அமைந்துள்ளது.
20 ஆண்டுகால பா.ஜ.க கூட்டணி ஆட்சிக்கு முடிவுகட்டுகிற முனைப்புகொண்ட தேர்தலாகவும், இத்தேர்தல் அமைந்துள்ளது.
தேர்தல் நெருங்கும் நேரத்திலேயே பா.ஜ.க.விற்கு எதிரான மனநிலையை பீகார் மக்கள் அடைந்துவிட்டார்கள் என்பதை உணர்ந்த பா.ஜ.க கூட்டணி அரசோ, மறைமுகமாக தேர்தல் ஆணையத்துடன் கைகோர்த்து வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை மேற்கொண்டது.

இதனால், லட்சக்கணக்கான தகுதிவாய்ந்த வாக்காளர்கள், தங்களது வாக்குரிமையை இழக்க நேரிட்டது. அதே வேளையில், துணை முதல்வர் விஜய் சின்ஹா உள்ளிட்டோருக்கு இரு வாக்காளர் அட்டைகள் வழங்கியதும் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தத்தின் விளைவாக அமைந்தது.
இப்படியான சூழலில், பல்வேறு சமூகத்தை வாக்களிக்க விடாதது, போக்குவரத்தை தடை செய்ததுமான பல்வேறு குளறுபடிகளைக் கடந்து பீகார் தேர்தலின் முதற்கட்ட வாக்குப்பதிவு இன்று (நவ.06) நிறைவடைந்துள்ளது.
இந்த வாக்குப்பதிவின்போது, டெல்லி தேர்தலில் வாக்களித்தவர்கள், பீகார் தேர்தலிலும் வாக்களித்தது கூடுதல் சர்ச்சைக்கு வழிவகுத்துள்ளது.

121 தொகுதிகளில் இன்று (நவ.06) வாக்குப்பதிவு நடைபெற்ற நிலையில், மீதமுள்ள 122 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு வருகிற நவ.11 அன்று நடைபெறுகிறது.
முதற்கட்ட தேர்தலில், இந்தியா கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் தேஜஸ்வி, தற்போதைய NDA முதலமைச்சர் நிதிஷ் குமார் உள்ளிட்டோர் தங்களது வாக்குகளை பதிவு செய்தனர்.
முதற்கட்ட தேர்தல் வாக்குப்பதிவில் மாலை 5 மணி நிலவரப்படி, ஒட்டுமொத்தமான 60.18 விழுக்காடு வாக்குகள் பதிவாகியுள்ளன.
இரண்டு கட்டத் தேர்தல்களும் நிறைவடைந்த பிறகு, வருகிற நவ.14 அன்று தேர்தல் முடிவுகள் வெளியாகும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.






