தமிழ்நாடு

இந்தியாவிலேயே முதல் முறையாக ‘மக்களை தேடி மருத்துவம்’ திட்டத்தை தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!

மலைவாழ் மக்கள் பயனடையும் வகையில் ஒரு 108 அவசரகால ஆம்புலன்ஸ் சேவை, கர்ப்பிணி தாய்மார்க்கு “HBS Ag" என்ற மஞ்சள் காமாலை நோய்க்கான விரைவு பரிசோதனை திட்டத்தை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

இந்தியாவிலேயே முதல் முறையாக ‘மக்களை தேடி மருத்துவம்’  திட்டத்தை தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

"மக்களைத் தேடி மருத்துவம் திட்டம்” மற்றும் "ஒரு இலட்சம் தொழிலாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் திட்டம் " ஆகிய திட்டங்களை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரியில் தொடங்கி வைத்தார்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (5.8.2021) கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி ஊராட்சி ஒன்றியம், சாமனப்பள்ளி கிராமத்தில், மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தை தொடங்கி வைத்தார். பொதுமக்களின் வீட்டிற்கே நேரடியாக சென்று தொற்றா நோய்களுக்கான பரிசோதனைகளை செய்தல், தேவைப்படும் மருந்துகளை வழங்குதல், இயன்முறை சிகிச்சை, இயலா நோயாளிகளுக்கு வழங்கக் கூடிய வலி நிவாரணம், ஆதரவு சிகிச்சை ஆகியவற்றை உள்ளடக்கிய மருத்துவ சேவைகள் அளிக்கப்படும்.

இத்திட்டத்தின் கீழ், மாநிலத்தில் தொற்றா நோய்களின் சுமையை எதிர்கொள்ளும் விதமாக நோயாளிகளின் இல்லங்களுக்கே சென்று சில அத்தியாவசியமான சுகாதாரச் சேவைகள் வழங்கப்பட வேண்டும் என்ற மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் நோக்கத்தினை செயல்படுத்தும் வகையில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை மூலம் "மக்களைத் தேடி மருத்துவம்" என்ற புதிய திட்டம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

இந்தியாவிலேயே முதல் முறையாக ‘மக்களை தேடி மருத்துவம்’  திட்டத்தை தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!

இத்திட்டத்தினை தொடங்கி வைத்து, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், இரண்டு பயனாளிகளின் இல்லங்களுக்கு நேரில் சென்று, மருத்துவ சேவை அளிப்பதை பார்வையிட்டு அவர்களுக்கு மருந்துகளை வழங்கினார்.

மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் மூலம், பரிசோதனை செய்து பட்டியலிடப்பட்ட நோயாளிகளில் 45 வயதும் அதற்கு மேற்பட்டவர்கள் மற்றும் இயலாமையில் உள்ள நபர்களுக்கு உயர் இரத்த அழுத்தம் / நீரிழிவு நோய்க்கான மருந்துகளை களப்பணியாளர்கள் இல்லங்களுக்கே சென்று வழங்குதல், நோய் ஆதரவு சேவைகள், இயன்முறை மருத்துவ சேவைகள், சிறுநீரக நோயாளிகளை பராமரித்தல், அத்தியாவசிய மருத்துவ சேவைகளுக்கான பரிந்துரை, குழந்தைகளின் பிறவிக் குறைபாடுகளை கண்டறிந்து தெரிவித்தல் போன்ற ஒரு குடும்பத்திற்கு தேவையான அனைத்து சுகாதார தேவைகளையும் வழங்குவதுடன் தொடர்ந்து கண்காணிக்கவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. மேலும், சமுதாய நலப் பதிவேட்டில் ஒவ்வொரு நோயாளியையும் பதிவு செய்து தொடர்ந்து கண்காணித்து வகைப்படுத்துவது இத்திட்டத்தின் மற்றொரு முக்கிய அம்சமாகும்.

இத்திட்டத்தில் தமிழ்நாடு மகளிர் நல மேம்பாட்டு நிறுவனத்தின் பயிற்சி பெற்ற பெண் சுகாதாரத் தன்னார்வலர்கள், இடைநிலை சுகாதாரச் சேவையாளர்கள், இயன்முறை மருத்துவர்கள், நோய் ஆதரவுச் செவிலியர் ஆகியோர் பங்கு பெறுவர். பொது சுகாதார துறையின் களப்பணியாளர்கள் இக்குழுவினரின் செயல்பாடுகளைக் கண்காணித்து வழிநடத்துவார்கள். ஒவ்வொரு வட்டாரத்திலும் இத்திட்டத்திற்கென சிறப்பாக வடிவமைக்கப்பட்ட வாகனங்கள் பயனாளிகளின் சேவைக்காக ஈடுபடுத்தப்படும்.

இத்திட்டத்தின் முதற்கட்ட இலக்கான 30 இலட்சம் குடும்பங்களைச் சேர்ந்த சுமார் ஒரு கோடி மக்கள் பயன்பெறுவதன் மூலம், ஆண்டு இறுதியில் மாநில அளவில் 'அனைவருக்கும் நலவாழ்வு' என்ற உயரிய இலக்கை அடைய இந்த திட்டம் வழிவகுக்கும்.

இத்திட்டம் சூளகிரியில் தொடங்கி வைக்கப்பட்ட அதே நேரத்தில் மதுரை, கோயம்புத்தூர், சேலம், தஞ்சாவூர், திருச்சி, திருநெல்வேலி மற்றும் சென்னை ஆகிய 7 மாவட்டங்களிலும் காணொலிக் காட்சி வாயிலாக மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தொடங்கி வைத்தார்.

இந்தியாவிலேயே முதல் முறையாக ‘மக்களை தேடி மருத்துவம்’  திட்டத்தை தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!

மேலும், மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் சிகிச்சை வழங்கவிருக்கும் செவிலியர் மற்றும் இயன்முறை சிகிச்சையாளர்களின் பயன்பாட்டிற்காக 3 புதிய வாகனங்களின் சேவைகளை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இன்று கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

அதனைத் தொடர்ந்து, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் கால்களை இழந்த 2 நபர்களுக்கு 4 இலட்சம் ரூபாய் மதிப்பிலான செயற்கை கால்கள்,

சிறுநீரகங்கள் செயலிழந்த ஒரு நபருக்கு வயிற்றினுள் டயாலிசிஸ் செய்யப்படும் முறைக்கான மருத்துவ உபகரணங்கள், கெலமங்கலம் ஊராட்சி ஒன்றியம், உனிசெட்டி ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு உட்பட்ட பெட்டமுகுளாலம் பகுதி மலைவாழ் மக்கள் பயனடையும் வகையில் ஒரு 108 அவசரகால ஆம்புலன்ஸ் ஊர்தி ஆகியவற்றை வழங்கியதோடு, கர்ப்பிணி தாய்மார்க்கு “HBS Ag" என்ற மஞ்சள் காமாலை நோய்க்கான விரைவு பரிசோதனை திட்டத்தை தொடங்கி வைத்தார்.

இவ்விழாவில், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கேட்டர்பில்லர் நிறுவனம், டாடா நிறுவனம், ஓலா நிறுவனம், பைவிலி நிறுவனம், மிண்டா நிறுவனம், லுமினியஸ் பவர் டெக்னாலஜிஸ் நிறுவனம், டிவிஎஸ் நிறுவனம், செய்யார் சீஸ் நிறுவனம், மைலான் நிறுவனம், எக்சைடு நிறுவனம், பஸ்ட் ஸ்டெப் பேபிவியர் நிறுவனம், நீல்கமல் நிறுவனம் மற்றும் செப்லர் ஆகிய நிறுவனங்களில் பணிபுரியும் ஒரு இலட்சம் தொழிலாளர்களுக்கு பெரு நிறுவனங்களின் சமூக பொறுப்புணர்வு நிதியின் கீழ் தனியார் மருத்துவமனைகள் மூலம் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணியினை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இன்று தொடங்கி வைத்தார்.

banner

Related Stories

Related Stories