
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (26.02.2026) தலைமைச் செயலகத்தில் குழந்தைகள் பாலின விகிதத்தை உயர்த்த சிறப்பாக செயலாற்றிய தென்காசி, கன்னியாகுமரி மற்றும் திருநெல்வேலி மாவட்ட நிர்வாகங்களின் சாதனைகளைப் பாராட்டி அம்மாவட்ட ஆட்சித்தலைவர்களுக்கு 2025-ஆம் ஆண்டிற்கான பெண் குழந்தைகள் பாதுகாப்பு தின மாநில அரசு விருதுகள், பரிசுத் தொகை மற்றும் பாராட்டு பத்திரங்களை வழங்கி சிறப்பித்தார்.
தமிழ்நாட்டில் பெண் குழந்தைகளின் பாதுகாப்பு, கல்வி மற்றும் நலனை உறுதிப்படுத்தி, பிறப்பு பாலின விகிதத்தை உயர்த்துவதில் சிறப்பாக செயலாற்றும் மாவட்ட நிர்வாகங்களை பாராட்டும் நோக்கில், தமிழ்நாடு அரசு ஆண்டுதோறும், பெண் குழந்தைகள் பாதுகாப்பு தினமான பிப்ரவரி 24-ஆம் நாள் மாநில அரசு விருதுகளை வழங்கி சிறப்பித்து வருகிறது.
அந்த வகையில், 2025-26 ஆம் ஆண்டிற்கான விருதிற்காக மாவட்டங்களின் செயல்பாடுகள் விரிவாக மதிப்பீடு செய்யப்பட்டன. பிறப்பு பாலின விகித உயர்வு, 5 வயதிற்குட்பட்ட குழந்தைகள் இறப்பு விகிதக் குறைப்பு, கருக்கலைப்பு விகிதக் குறைப்பு, கர்ப்பத்திற்கு முந்தைய மற்றும் பிரசவத்திற்கு முந்தைய நோயறிதல் நுட்பங்கள் சட்டம் 1994 (PCPNDT Act) வலுவான அமலாக்கம் உள்ளிட்ட பல்வேறு காரணிகள் ஆய்வு செய்யப்பட்டன.

அதன் அடிப்படையில், 2025 ஆம் ஆண்டில் குழந்தைகளின் பாலின விகிதத்தை உயர்த்த சிறப்பாக செயலாற்றிய முதல் மூன்று மாவட்ட நிர்வாகங்களாக முறையே தென்காசி, கன்னியாகுமரி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.
முதலமைச்சர் அவர்கள் இன்றையதினம் இம்மாவட்ட நிர்வாகங்களின் சாதனைகளைப் பாராட்டி, முதல் பரிசாக ரூ.1,00,000/- ரொக்கப்பரிசு மற்றும் பாராட்டுப் பத்திரத்தினை தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் ஏ.கே.கமல் கிஷோர், இ.ஆ.ப., அவர்களுக்கும், இரண்டாம் பரிசாக ரூ.75,000/- ரொக்கப்பரிசு மற்றும் பாராட்டுப் பத்திரத்தினை கன்னியாகுமரி மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி.ரா.அழகுமீனா, இ.ஆ.ப., அவர்களுக்கும், மூன்றாம் பரிசாக ரூ.50,000/- ரொக்கப்பரிசு மற்றும் பாராட்டுப் பத்திரத்தினை திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் டாக்டர் இரா.சுகுமார், இ.ஆ.ப., அவர்களுக்கும் வழங்கி சிறப்பித்தார்.
இம்மாவட்டங்களில் பெண் குழந்தைகளின் பாலின விகிதத்தை உயர்த்துவதில் முக்கிய பங்காற்றிய பங்குதாரர்கள் (Stakeholders) அனைவருக்கும் பாராட்டு சான்றிதழ்கள் மற்றும் புத்தகங்கள் வழங்குவதற்கும், குழந்தைகளின் பாலின விகிதத்தை உயர்த்துவதற்கு தேவையான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்துவதற்கும் இப்பரிசுத் தொகை பயன்படுத்தப்படும்.






