
தமிழ்நாட்டின் தலைநகர் சென்னை உள்ளிட்ட மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் தொடர் மழை பெய்து வரும் வேளையில், சென்னையில் இயங்கி வந்த வானிலை கணிப்பு ரேடார் செயல்படவில்லை என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை ரேடார் இயங்காததால், வடகிழக்கு பருவமழைக் காரணமாக பெய்து வரும் மழை குறித்த தகவல்கள் உடனுக்குடன் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

இன்று (அக்.25) காலை முதலே கடலூர், புதுச்சேரி பகுதிகளில் கனமழை பெய்து வரும் நிலையில், ரேடார் செயல்படாததால், மக்களிடையே வானிலை குறித்த பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ளன.
காலை 7 மணி நிலவரப்படி, சென்னை, கடலூர், நாகப்பட்டினம், எண்ணூர், காட்டுப்பள்ளி, புதுச்சேரி, பாம்பன், தூத்துக்குடி, ராமேஸ்வரம் ஆகிய 9 துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
சென்னை, கடலூர், நாகப்பட்டினம் துறைமுகங்களில் அடுத்தக்கட்டமாக வானிலை மாற்றத்தைப் பொறுத்து 3 அல்லது 5-ஆம் கட்ட புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட வாய்ப்புள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.






