தமிழ்நாடு

ரோடு ஷோ - தமிழ்நாடு அரசின் வரைவு வழிகாட்டு நெறிமுறைகள் என்ன?

தமிழ்நாட்டில் பொதுக்கூட்டம், பரப்புரை நடத்த புதிய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது.

ரோடு ஷோ - தமிழ்நாடு அரசின் வரைவு வழிகாட்டு நெறிமுறைகள் என்ன?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

கரூர் துயர நிகழ்வுக்குப் பின்னர், பொதுக்கூட்டங்கள் மற்றும் பரப்புரை நிகழ்வுகளை நடத்துவதற்கு வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்க தமிழ்நாடு அரசு முடிவு செய்து நீதிமன்றத்தில் தெரிவித்தது. அதன்படி வழிகாட்டு நெறிமுறைகள் தொடர்பாக கருத்துக்களை பெறும் பொருட்டு அனைத்துக்கட்சி கூட்டம் நடத்தப்பட்டது. தலைமைச்செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில், அமைச்சர்கள் கே.என்.நேரு, ரகுபதி, மா.சுப்ரமணியம் ஆகியோர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகள் மற்றும் நாடாளுமன்ற, சட்டமன்றத்தில் பிரதிநிதித்துவம் உள்ள கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

திமுக சார்பில் ஆர்.எஸ்.பாரதி, என்.ஆர்.இளங்கோ, காங்கிரஸ் சார்பில் செல்வப்பெருந்தகை, ராஜேஷ்குமார், விடுதலை சிறுத்தை கட்சிகள் சார்பில் எஸ் எஸ் பாலாஜி, சிந்தனைச் செல்வன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் வீரபாண்டியன், மாரிமுத்து, மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் கே.பாலகிருஷ்ணன், நாகை மாலி, மதிமுக சார்பில் சதன் திருமலைக்குமார், பூமிநாதன், மனிதநேய மக்கள் கட்சி சார்பில் ஜவாஹிருல்லா, மற்றும் அதிமுக, பாஜக, பாமக, கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி, தமிழக வாழ்வுரிமை கட்சி, புரட்சி பாரதம் , நாம் தமிழர் கட்சி 20 கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

இதில் வரைவு வழிகாட்டு நெறிமுறைகள் அனைத்துக்கட்சி பிரதிநிதிகளுக்கு வழங்கப்பட்டு, நவம்பர் 10ம் தேதிக்குள் எழுத்துபூர்வமாக கருத்துக்களை தெரிவிக்க அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. அரசு வழங்கிய வரைவு வழிகாட்டு நெறிமுறைப்படி, வருவாய், காவல், சுகாதாரம், பொதுப்பணி, மின்சாரம், தீயணைப்புத் துறை மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் அடங்கிய நிகழ்ச்சி பாதுகாப்பு கண்காணிப்பு குழுக்களை மாவட்ட அளவிலும் வட்ட அளவிலும் அமைக்க வேண்டும். அங்கீகரிக்கப்பட்ட இடங்களில் நிகழ்ச்சிகளை நடத்த 10 நாட்கள் முன்பாகவும், 15 நாட்களுக்கு மிகாமலும் மனு அளிக்க வேண்டும்.

அங்கீகரிக்கப்படாத மாற்று இடத்திற்கு 21 நாட்களுக்கு முன்பாகவும், 30 நாட்களுக்கு மிகாமலும் மனு அளிக்க வேண்டும். பொதுக்கூட்டங்கள், பரப்புரைகள் என அரசியல் கட்சிகளின் நிகழ்வுகளுக்கு 3 மணிநேரம் மட்டுமே அனுமதி வழங்கப்படும், இத்தகைய நிகழ்வுகளை நடத்தும் அரசியல் கட்சிகள், நிகழ்ச்சிக்கு கூடும் உறுப்பினர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப காப்புத்தொகை செலுத்த வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன்படி, ஐந்தாயிரம் பேருக்கு மேல் பத்தாயிரம் பேர் வரை கூடும் நிகழ்வுகளுக்கு ஒரு லட்சம் ரூபாய் காப்புத்தொகை செலுத்த வேண்டும். பத்தாயிரம் பேருக்கு மேல் 20ஆயிரம் பேர் வரை கூடும் நிகழ்வுகளுக்கு 3 லட்சம் ரூபாயும், 20ஆயிரம் பேருக்கு மேல் 50 ஆயிரம் பேர் வரை கூடக்கூடிய நிகழ்வுகளுக்கு 8லட்சம் ரூபாயும் காப்புத்தொகை நிர்ணயிக்கவும் 50 ஆயிரம் பேருக்கு மேல் கூடும் நிகழ்வுகளுக்கு 20 லட்சம் ரூபாய் காப்புத்தொகை செலுத்தவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

மேலும், நிகழ்ச்சி நடத்தும் அரசியல் கட்சிகள், கூட்டத்திற்கு வரும்100 நபர்களுக்கு ஒருவர் என்ற விகிதத்தில், தன்னார்வலர்களை ஈடுபடுத்த வேண்டும். குடிநீர், சுகாதாரம், உணவு, நடமாடும் கழிவறை போன்ற அடிப்படை வசதிகள் தொடர்பாக திட்டம் வகுக்க வேண்டும், கூட்டத்தில் நிற்கும் ஒவ்வொரு 500 நபர்களுக்கும் அமர்ந்திருக்கும் ஒவ்வொரு ஆயிரம் நபர்களுக்கும் தடுப்பு பகுதிகளை அமைத்திட வேண்டும். முக்கிய நிர்வாகிகள் மற்றும் தன்னார்வலர்களை எளிதில் அடையாளம் காணும் வகையில் பேட்ச் அணிய வேண்டும். கூட்டம், பரப்புரை நடத்த

அங்கீகரிக்கப்பட்ட இடங்களை தேர்வு செய்து மாவட்ட ஆட்சியர் அறிக்கை அளிக்க வேண்டும். மேடை, பந்தலின் உறுதித்தன்மை. மின்சார உபகரணங்கள், ஒலிபெருக்கிகள் உள்ளிட்டவற்றின் பாதுகாப்பு மற்றும் உறுதித்தன்மை தொடர்பான சான்றிதழை மாவட்ட நிர்வாகத்தால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் பொறியாளரிடமிருந்து பெற்று நிகழ்ச்சிக்கு 4 மணி நேரத்திற்கு முன்பாக சமர்ப்பிக்க வேண்டும் ஆகிய அம்சங்கள் வரைவு வழிகாட்டு நெறிமுறையில் இடம்பெற்றுள்ளன. மேலும் அரசியல் கட்சிகள் தெரிவிக்கும் கருத்துகள் மற்றும் ஆலோசனைகளின் படி வழிகாட்டு நெறிமுறைகள் உருவாக்கப்படும் என்று தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

இதேபோல், ரோடு ஷோ நடத்த அனுமதி கோரும்போது, ரோடு ஷோ நடத்தவுள்ள வழித்தடம், உரை நிகழ்த்தவுள்ள இடம், துவங்கும் இடத்திற்கும் முடிவுறும் இடத்திற்கும் சிறப்பு விருந்தினர் வருகை தரக்கூடிய நேரம், உரை நிகழ்த்தும் இடத்திலும் வழித்தடத்திலும் எதிர்பார்க்கப்படும் கூட்டம் ஆகியவற்றை எழுத்துப்பூர்வமாக வழங்க வேண்டும் என்றும் தமிழ்நாடு அரசின் வரைவு வழிகாட்டு நெறிமுறையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories