தமிழ்நாடு

"மக்களைத் தேடி மருத்துவம்" திட்டத்தின் முக்கிய உறுதிமொழியே இதுதான் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!

மக்களைத் தேடி மருத்துவம் செல்லும் என்ற காலத்தை இப்போது நாம் உருவாக்கத் தொடங்கியிருக்கிறோம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார்.

"மக்களைத் தேடி மருத்துவம்" திட்டத்தின் முக்கிய உறுதிமொழியே இதுதான் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (5.8.2021) கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி ஊராட்சி ஒன்றியம், சாமனப்பள்ளி கிராமத்தில் "மக்களைத் தேடி மருத்துவம்" திட்டத்தைத் தொடங்கி வைத்து, செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியளித்தார்.

அப்போது அவர் பேசியதாவது,

​”ஊடக நண்பர்கள் அனைவருக்கும் முதலில் என்னுடைய காலை வணக்கத்தை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். அதே நேரத்தில், பத்திரிகையாளர், ஊடகவியலாளர் சார்பில் கொரோனா நிதி வழங்கியதற்கும் அரசின் சார்பில் உங்களுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். ​

இன்றைக்கு இந்தியாவிற்கே ஒரு முன்னோடித் திட்டமாக விளங்கக்கூடிய வகையிலே "மக்களைத் தேடி மருத்துவம்" என்கின்ற ஒரு மகத்தான திட்டத்தை கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தொடங்கி வைத்திருக்கிறோம். கொரோனா பெருந்தொற்று காலத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையின் செயல்பாடுகள் மிகுந்த அர்ப்பணிப்போடு இருந்தது என்பது உங்கள் அனைவருக்கும் நன்றாகத் தெரியும். கொரோனாவினுடைய இரண்டாவது அலையைக் கட்டுப்படுத்துவதற்காக இந்தத் துறை எந்த அளவுக்கு செயல்பட்டது, அதில் குறிப்பாக, மருத்துவர்களுடைய தன்னலமற்ற பணியும், செவிலியர்களுடைய பணியும் ஒரு முக்கியமான காரணமாக அமைந்தது என்பது நாட்டுக்கே தெரியும்.

​அதனுடைய தொடர்ச்சியாகத்தான், இப்போது "மக்களைத் தேடி மருத்துவம்" என்ற ஒரு திட்டத்தை நம்முடைய அரசின் சார்பில் தொடங்கியிருக்கிறோம். மருத்துவமனைகளைத் தேடி வரக்கூடிய மக்கள், அந்தச் சூழலை மாற்றக்கூடிய வகையில், அதாவது மக்களைத் தேடி மருத்துவம் செல்லும் என்ற காலத்தை இப்போது நாம் உருவாக்கத் தொடங்கியிருக்கிறோம்.

நோயால் பாதிக்கப்பட்டவர்களுடைய வீட்டிற்கே சென்று, சில அவசியமான மருத்துவச் சேவைகளை இதன் மூலமாக நாம் வழங்கப் போகிறோம். 45 வயதிற்கு மேற்பட்டவர்கள் மற்றும் இயலாமையில் உள்ள நபர்களைக் கண்டறிந்து அவர்களுக்கு உடல்நலப் பரிசோதனை செய்யப்பட இருக்கிறது. குறிப்பாக, இரத்த அழுத்தம், நீரிழிவு, சிறுநீரகப் பிரச்சனை, இதர நோய்கள், குழந்தைகளினுடைய பிறவிக் குறைபாடுகள் இதையெல்லாம் கண்டறிந்து சிகிச்சை அளிப்பது இந்தத் திட்டத்தின் முக்கியப் பணியாக இருக்கப் போகிறது.

இதில் பொது சுகாதாரப் பணியாளர்கள், தன்னார்வலர்கள் பங்கெடுத்து அவர்களுடைய சேவையை ஆற்றவிருக்கிறார்கள். முதல் கட்டமாக, 1264 பெண் சுகாதார தன்னார்வலர்களும், 50 இயன்முறை Physiotherapy மருத்துவர்களும், 50 செவிலியர்களும் இல்லம் தேடி வரும் இந்தச் சேவையில் ஈடுபடுத்தவிருக்கிறார்கள். இது படிப்படியாக மாநிலம் முழுவதும் செயல்படுத்தப்படவிருக்கிறது.

இந்த ஆண்டு இறுதிக்குள் மாநிலம் முழுவதும் இது நிச்சயமாக விரிவுபடுத்தப்படும், அவர்களுக்கான கூடுதல் சிகிச்சைகளை மருத்துவமனைகளில் வழங்குவோம். இதற்காக முதல் கட்டமாக, 242 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது. முதல் கட்டமாக, 30 இலட்சம் குடும்பங்களைச் சேர்ந்த ஒரு கோடி மக்கள் இந்த ஆண்டு இறுதிக்குள் பயனடைவார்கள் என்று எதிர்பார்க்கிறோம்.

"ஸ்டாலினின் ஏழு உறுதிமொழிகள்" என்ற பத்தாண்டு தொலைநோக்குத் திட்டத்தில் "அனைவருக்கும் நல்வாழ்வு" என்பது ஒரு முக்கிய உறுதிமொழியாக இருக்கிறது. அதனை நிறைவேற்றுவதற்காகத்தான் மக்களைத் தேடி மருத்துவம் என்ற இந்தத் திட்டத்தை இந்தப் பகுதியில் நான் தொடங்கி வைத்திருக்கிறேன். இந்த நேரத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர், அரசு அதிகாரிகள், மருத்துவர்கள், செவிலியர்கள் என அனைவருக்கும் என்னுடைய நன்றியை நான் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். ​இந்தத் திட்டத்தின் நோக்கத்தை மக்கள் அனைவரும் உணர்ந்து, இந்த சேவையை நீங்கள் நல்ல வகையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று நான் கேட்டுக் கொள்கிறேன்.”

எனக் கூறியுள்ளார்.

banner

Related Stories

Related Stories