ஜம்மு - காஷ்மீரின் பகல்காம் பகுதியில், நேற்று (ஏப்ரல் 23) சுற்றுலா பயணிகளை குறிவைத்து நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதலில், சுற்றுலாப் பயணிகள் சுமார் 25க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
இதனையடுத்து, இந்தியா - பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளுக்கும் இடையே பதற்றம் அதிகரித்துள்ளது. இந்தியாவிலிருந்து பாகிஸ்தானியர்களும், பாகிஸ்தானிலிருந்து இந்தியர்களும் வெளியேறுவதற்கான நடவடிக்கைகள் மும்முரப்படுத்தப்பட்டுள்ளன.
ஜம்மு - காஷ்மீரில் நடந்த தாக்குதல், இந்திய அளவில் மக்களை வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது. மறுபுறம், இதற்கான கண்டனங்களும் பெருகி வருகின்றன.
இந்நிலையில், ஜம்மு - காஷ்மீரின் காதுவா மாவட்டத்திற்குள்ளான பகுதியில், காஷ்மீர் தாக்குதலை கண்டித்து பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் பா.ஜ.க சட்டப்பேரவை உறுப்பினர்கள் தேவிந்தர் மன்யல், ராஜிவ், பாரத் பூஷண் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
அப்போது, போராட்டக்காரர்களிடம் தனியார் செய்தி நிறுவனத்தை சேர்ந்த செய்தியாளர் ஒருவர், “தாக்குதலுக்கு யார் காரணம்? ஒன்றிய அமைச்சகம் இதற்கு பொறுப்பேற்குமா?” என கேள்வி எழுப்பினார். ஆனால், அதற்கு பதலளிக்காமல், கேள்வி கேட்ட செய்தியாளரை பா.ஜ.க.வினர் கடுமையாக தாக்கினர்.
உடனடியாக அங்குள்ள காவல்துறை பா.ஜ.க.வினரை தடுத்து நிறுத்தி, செய்தியாளரை மருத்துவமனையில் அனுமதித்தனர். இதன் பிறகு, பா.ஜ.க.வின் அனைத்து நிகழ்வுகளையும் புறக்கணிக்க இருப்பதாக, செய்தித்துறை வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தாக்குதல் நடத்தியவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.