
சென்னை கிரீன்வேஸ் சாலையில் முதலமைச்சர் அலுவலகத்தின் வாயிலில் பத்திரிகையாளர்களுக்கு எதிரான காவல்துறையின் அத்துமீறலுக்குச் சென்னை பத்திரிகையாளர் மன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.
இது குறித்து சென்னை பத்திரிகையாளர் மன்றம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”சென்னை கிரீன்வேஸ் சாலை, பொதிகை வளாகத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ஜோசப் விஜய் அவர்களின் முகாம் அலுவலகத்தின் புதிப்பிப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்தப் பணிகளை பார்வையிடுவதற்காக முதலமைச்சர் இன்று மாலை 4 மணியிளவில் அங்கு வந்துள்ளார்.
இதுகுறித்து செய்தி சேகரிப்பதற்காக பத்திரிகையாளர்கள் பொதிகை வளாகத்திற்கு சென்றுள்ளனர். அப்போது காவல்துறையினர் பத்திரிகையாளர்களை பொதிகளை வளாகத்திற்குள் அனுமதிக்க மறுத்துள்ளனர். இதைத்தொடர்ந்து, பத்திரிகையாளர்கள் மக்கள் தொடர்புத்துறை அலுவலரை தொடர்புகொண்டு பேசியபோது, வளாகத்திற்குள் அனுமதிக்க முடியாது என்றும் வளாகத்திற்கு வெளியிலிருந்து செய்தி சேகரித்துக்கொள்ளலாம் என்றும் அவர் கூறியுள்ளார்.
செய்தியாளர்கள் மற்றும் ஒளிப்பதிவாளர்கள் அனைவரும், பொதிகை வளாகத்திற்கு வெளியே உள்ள சாலையின் எதிர்புறத்தில், காவல்துறையினர் பாதுகாப்பிற்காக அமைத்துள்ள தடுப்புகளுக்குப் பின்னால் சென்று நின்றுள்ளனர். அப்போது, அங்கு வந்த காவல் உதவி ஆணையர் திரு.தனசெல்வன் பத்திரிகையாளர்களை அந்த இடத்தில் நிற்கக்கூடாது என்று கூறியுள்ளார். செய்தி சேரிக்க விடாமல் ஏன் தடுக்கிறீர்கள் என்று பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். அதற்கு எந்த வித விளக்கமும் அளிக்காமல் பத்திரிகையளார்களை அங்கிருந்து புறப்படும்படி வற்புறுத்தியுள்ளார்.
பத்திரிகையாளர்கள் அங்கிருந்து நகராத நிலையில், உதவி ஆணையர் திரு.தனசெல்வன் மற்றும் அங்கிருந்து காவல்கள் பத்திரிகையாளர்களை வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தும் அராஜக நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
இதேபோல, தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்கள் கலந்துகொள்ளும் அரசி நிகழ்ச்சிகளிலும் பத்திரிகையாளர்கள் தடுத்து நிறுத்தப்படும் நிகழ்வுகள் தொடர்கதையாகியுள்ளது.
செய்தி சேரிகப்பது பத்திரிகையாளர்களின் உரிமை. அதை தடுத்து இடையூறு ஏற்படுத்துவது இந்திய அரசியல் சாசனம் வழங்கியுள்ள பத்திரிகை சுதந்திரத்தை மறுப்பதற்குச் சமமாகும்.
ஆகவே, பத்திரிகையாளர்களை பணி செய்யவிடாமல் தடுத்ததுடன், அவர்களை வலுக்கட்டாயமாக தள்ளிவிட்டு, கண்ணியக்குறைவாக நடத்திய காவல் உதவி ஆணையர் தனசெல்வன் மற்றும் காவல்களின் நடவடிக்கையை சென்னை பத்திரிகையாளர் மன்றம் வன்மையாக கண்டிக்கிறது.
அராஜகத்தில் ஈடுபட்ட காவல்துறையினர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை பத்திரிகையாளர் மன்றம் வலியுறுத்துகிறது.
அரசு விழாக்களில் பத்திரிகையாளர்களை செய்தி சேகரிக்க விடாமல் தடுப்பது மற்றும் அவர்ளை கண்ணியக்குறைவாக நடத்துவது போன்ற அநாகரீகமான செயல்களில் ஈடுபடக்கூடாது என்று காவல்துறையினருக்கும், அரசு அதிகாரிகளுக்கும் தமிழ்நாடு முதலமைச்சர் உத்தவிட வேண்டும் என்றும் சென்னை பத்திரிகையாளர் மன்றம் கேட்டுக்கொள்கிறது" என தெரிவித்துள்ளார்.






