
ஐ.பி.எல் 2027 கிரிக்கெட் தொடர் மார்ச் 10 ஆம் தேதி தொடங்கவுள்ள நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ்.தோனி தனது ஓய்வை அறிவித்துள்ளது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இருந்தும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஆலோசகராக நீடிப்பார் என சிஎஸ்கே நிர்வாகம் தெரிவித்துள்ளது சற்று ரசிகர்களுக்கு நிம்மதியை கொடுத்துள்ளது.
இந்நிலையில் புதிய இன்னிங்ஸை தொடங்க இருக்கும் எம்.எஸ்.தோனிக்கு தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூகவலைதள பதிவில், ”எம்.எஸ்.தோனி சென்னைக்கு அதிக கோப்பைகளை வென்று கொடுத்துள்ளார். அவர் தலைமுறைகளை ஒன்றிணைத்து, கிரிக்கெட்டையும் தாண்டிய ஒரு பந்தத்தை நமக்குள் உருவாக்கி இருக்கிறார்.
தமிழ்நாட்டின் அன்பிற்குரிய மகனுக்கு, அவர் தகுதியான ஒரு பிரியாவிடை கொடுப்பதற்கான ஒரு கடைசி வாய்ப்பு நமக்குக் கிடைத்திருக்கலாமே என்று மட்டுமே நாம் ஏங்குகிறோம்.
மறக்க முடியாத மகிழ்ச்சியான தருணங்கள், புகழ்பெற்ற வெற்றிகள் மற்றும் நாம் என்றும் நெஞ்சில் போற்றும் நினைவுகளுக்காக நன்றி,CSK அணியின் ஆலோசகராக உங்களது புதிய இன்னிங்ஸ் சிறப்பாக அமைய வாழ்த்துகள்” என தெரிவித்துள்ளார்.

அதேபோல் எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின், ”IPL வரலாற்றில், தமிழ்நாடு முழுவதும் உள்ள லட்சக்கணக்கான மக்களுக்கு எண்ணற்ற மறக்க முடியாத நினைவுகளைப் பரிசளித்த ஒரு மாமனிதர் இப்போது ஆடுகளத்தை விட்டு வெளியேறுகிறார்.
CSK ரசிகர்களாகிய நாம், அவரது புகழ்பெற்ற ஹெலிகாப்டர் ஷாட்டுகளையும், மின்னல் வேக ஸ்டம்பிங்குகளையும், வியக்க வைக்கும் கேப்டன்சியையும், இக்கட்டான சூழ்நிலைகளைத் தங்களுக்குச் சாதகமாக மாற்றிப் பெற்ற வெற்றிகளையும், அவரது அமைதியையும் நிச்சயமாக மிஸ் செய்வோம்.
தமிழ்நாட்டின் இதயத்தில், குறிப்பாகச் சென்னையின் மனதில் உங்களுக்கு எப்போதும் ஒரு தனி இடம் உண்டு.சிஎஸ்கே அணியின் ஆலோசகராக நீங்கள் ஏற்கும் புதிய பொறுப்பிற்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள் " என தெரிவித்துள்ளார்.






