விளையாட்டு

Bye Bye Mahi : IPL போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார் எம்.எஸ்.தோனி!

IPL தொடரிலிருந்து ஓய்வு பெறுவதாக எம்.எஸ்.தோனி அறிவித்துள்ளார்.

Bye Bye Mahi : IPL போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார் எம்.எஸ்.தோனி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

ஐ.பி.எல் 2027 கிரிக்கெட் தொடர் மார்ச் 10 ஆம் தேதி தொடங்கவுள்ள நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ்.தோனி தனது ஓய்வை அறிவித்துள்ளது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த சில சீசன்களாகவே எம்.எஸ்.தோனி தனது ஓய்வை அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவர் தொடர்ந்து மைதானத்தில் களம் இறங்கி, இளம் வீரர்களுக்கு உத்வேகம் அளித்தது மட்டுமல்லாமல், எதிரணியின் பந்து வீச்சுகளை மைதானத்திற்கு வெளியே பறக்கவிட்டு அதிரடி காட்டினார்.

அவர் களம் இறங்கும்போது எழும் "தோனி... தோனி..." என்ற ரசிகர்களின் விண்ணதிரும் முழக்கம் நம் காதுகளைக் குளிரச்செய்யும். "அவர் மைதானத்திற்கு வந்தால் மட்டும் போதும், அவரைப் பார்த்தாலே போதும்" என்றுதான் கடந்த சில தொடர்களாக அவரது ரசிகர்கள் கூறி வந்தனர்.

தோனி களம் புகுந்து விளையாட வேண்டும் என்பதற்காக, அவருக்கு முன்னதாக ஆடும் வீரர்கள் சீக்கிரம் ஆட்டமிழக்க வேண்டும் என்று ரசிகர்கள் விரும்புகிறார்கள் என்ற ஒரு குற்றச்சாட்டும் எழுந்தது. ஆனால், இதைப் பற்றியெல்லாம் யாரும் கவலைப்படவில்லை; 'தல' தரிசனம் கிடைத்தால் போதும் என்றுதான் ஒட்டுமொத்த மைதானமும் நினைத்தது.

கடந்த சில தொடர்களாக அனைத்துப் போட்டிகளிலும் விளையாடாமல், இளம் வீரர்களுக்கு தோனி தொடர்ந்து வாய்ப்பளித்து வந்தார். இந்நிலையில், ஐபிஎல் தொடரிலிருந்து முழுமையாக ஓய்வு பெறுவதாக எம்.எஸ்.தோனி தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். அதேநேரம், அவர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஆலோசகராக நீடிப்பார் என சிஎஸ்கே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

சிஎஸ்கே அணியை கேப்டனாக வழிநடத்தி 5 முறை (2010, 2011, 2018, 2021, 2023) சாம்பியன் பட்டம் வென்று தந்துள்ள தோனி, மொத்தம் 278 ஐபிஎல் போட்டிகளில் விளையாடி 5,439 ரன்களைக் குவித்துள்ளார்.

இனி தோனி மைதானத்தில் மஞ்சள் நிற உடையில் விளையாடுவதைப்பார்க்க முடியாது என்ற செய்தி, அவரது லட்சக்கணக்கான ரசிகர்களைப் பெருத்த சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories