
கன்னியாகுமரி மாவட்டம் ஆசாரிபள்ளம் அருகே மேலச்சூரங்குடியை சேர்ந்தவர் சகாயராஜா. இவருக்கு ஆன்சுலின் சுஜி என்ற மகள் இருக்கும் நிலையில், சுஜி பட்டப்படிப்பு முடித்து தனியார் வேலை பார்த்து வருகிறார். தனியார் வேலையில் இருந்தால் மற்றொரு புறம் அரசு வேலைக்கும் தன்னை தயார் செய்து வருகிறார் சுஜி.
இந்த சூழலில் தவெக ஆட்சி அமைந்த பிறகு, தவெகவை சேர்ந்த இவர்களது உறவினர் துவரங்காடு பகுதியை சேர்ந்த ராஜேஷ் மற்றும் டெய்சி பாய் ஆகியோர், ஆன்சிலின் சுஜிக்கு அரசு வேலை பெற்று தருவதாக கூறி சகாயராஜாவிடம் இருந்து ரூ.15 லட்ச பெற்றுள்ளனர். ஆளுங்கட்சி என்பதால் அரசு வேலை கிடைத்துவிடும் என்று அவர் உறுதியளித்ததையடுத்து, ஆன்சிலின் சுஜியும் பணத்தை ஆங்காங்கே புரட்டி கொடுத்துள்ளார்.

எனினும் பணம் கொடுத்து பல மாதங்கள் ஆன நிலையில், அரசு வேலை குறித்த எந்த விவரமும் தெரியவில்லை என்பதால் நம்பிக்கை இழந்த ஆன்சிலின் சுஜி, கொடுத்த பணத்தை கேட்டுள்ளார். எல்லா பக்கமும் சுற்றி இறுதியாக இந்த விவகாரம் தவெக மாவட்ட செயலாளர் மாதவனிடம் வந்துள்ளது.
இதனையறிந்த தவெக மாவட்ட செயலாளர் மாதவன், இதுகுறித்து நேரில் பேசுவதற்காக ஆன்சிலின் சுஜி மற்றும் அவரது குடும்பத்தினரை தவெக மாவட்ட அலுவலகத்திற்கு அழைத்துள்ளார். இதனால் பணம் கொடுத்த ஆன்சிலின் சுஜி, அவரது உறவினரும், தவெக நிர்வாகியுமான ராஜேஷ் ரூ.2 லட்சத்துடன் அங்கே சென்றுள்ளார். அங்கே சென்ற ராஜேஷ், "மாவட்ட செயலாளரிடம் பேசி ரூ.2லட்சத்தை கொடுத்து விட்டேன்.. ஆர்டர் விரைவில் வந்துவிடும்.. மீதி தொகையை அமைச்சர் ராஜ்மோகனுக்கு கொடுத்துள்ளேன்.." என ஆன்சிலின் சுஜியிடம் தெரிவித்துள்ளார்.

இந்த நிகழ்வு நடந்து பல நாட்களான நிலையில், சொன்னபடி அரசு வேலைக்கான உத்தரவு வரவில்லை என்பதை அறிந்த ஆன்சிலின் சுஜி, அவரது உறவினர் ராஜேஷ் மற்றும் டெய்சி பாயிடம் பணத்தைக் கேட்டு நெருக்கடி கொடுத்துள்ளார். இதனால் வேறு வழியின்றி "அமைச்சர் ராஜ்மோகனில் நேரில் சென்று பார்த்து வருவோம்" என ஆன்சிலின் சுஜியை சென்னைக்கு அழைத்து வந்துள்ளார் ராஜேஷ்.
சென்னை சென்றதும் "அமைச்சர் பிசியாக உள்ளார். அவரை பார்க்க முடியாது என கூறி அவரது உதவியாளர் ஐயப்பன் வந்துள்ளார். அவரும் உங்களுக்கு ஒரு வாரத்தில் வேலைக்கான உத்தரவு வந்துவிடும்" என சென்றுள்ளார். நாட்கள் பல கடந்தும் வேலை கிடைக்காததால் ஏமாற்றம் அடைந்த ஆன்சிலின் சுஜி மற்றும் சகாயராஜா இன்று நாகர்கோவிலில் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் இதுகுறித்து புகார் அளித்துள்ளார்.
ஊழலற்ற ஆட்சி என வார்ததைக்கு வார்த்தை பொய்யாக பிரச்சாரம் செய்து, மக்களை தொடர்ந்து ஏமாற்றி வரும் தவெக அரசின் ஒவ்வொரு ஊழலும், ஒவ்வொன்றாக வெளி வருகிறது. இந்த விவகாரத்தில் அமைச்சர் ராஜ்மோகனுக்கும் தொடர்பு இருப்பதாக பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரால் மேலும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.






