
அமைச்சர் ஒருவர் காவல் நிலையத்திற்குச் சென்று அமர்ந்துகொண்டு, பெண் எஸ்.பி.யைத் தொலைபேசியில் அழைத்து வரச் சொல்வதன் அர்த்தம் என்ன? அதேபோல், மாவட்ட ஆட்சியர் வகிக்கும் உயர்ந்த பதவியை மதிக்காமல், ஒரு பெண் என்ற கண்ணோட்டத்தில் இழிவாகப் பேசுவதும், கேலி செய்வதும் ஏன்? இதுபோன்ற செயல்கள் தமிழ்நாட்டிற்கு தலைகுனிவை ஏற்படுத்துகின்றன என முன்னாள் அமைச்சர் கீதா ஜீவன் விமர்சித்துள்ளார்.
தூத்துக்குடியில் செய்தியாளர்களை சந்தித்த கீதா ஜீவன், "தூத்துக்குடி மாவட்டம் சாயர்புரம் அருகே 16 வயது பள்ளி மாணவி கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் மிகவும் வருத்தமளிக்கிறது. இச்சம்பவத்திற்கு எனது ஆழ்ந்த வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். அந்த இளைஞர் சிறுமியைக் கத்தியால் குத்திவிட்டுத் தானும் தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
இளம் வயதினர் ஒருவரையொருவர் விரும்புவது தவறில்லை; ஆனால், 18 வயது நிறைவடைந்த பிறகு திருமணம் செய்து கொள்ளலாம். அதுவரை படிப்பில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும். காதல் விவகாரங்களில் பிடிவாதம் பிடித்து கொலை செய்யும் அளவுக்குச் செல்வது மிகுந்த கவலைக்குரியது.
இன்றைய சூழலில் குழந்தைகளுக்கும் இளைஞர்களுக்கும் மட்டுமின்றி, எந்த வயதினருக்கும் பாதுகாப்பற்ற நிலை நிலவுகிறது. குற்றம் செய்தால் தண்டனை கிடைக்கும் என்ற பயமும், காவல்துறையினர் மீதான அச்சமும் குறைந்து வருகிறது. ஆட்சியாளர்கள் இதனை இரும்புக்கரம் கொண்டு அடக்கி, சட்டம்-ஒழுங்கைச் சீராக நிலைநாட்ட வேண்டும்.
காவல்துறையின் செயல்பாடுகள் வேடிக்கையாக உள்ளன. காணாமல் போன குழந்தையைக் கண்டுபிடிக்க நடவடிக்கை எடுப்பதற்குப் பதிலாக, காவல்துறையினர் யாகம் வளர்த்துக் கொண்டிருக்கிறார்கள். தமிழகத்தின் வளர்ச்சி பின்னோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. காவல்துறையினர் தங்களது கடமையைச் செய்யாமல், பிரச்சினைகளைத் திசைதிருப்பும் ஆட்சி நடைபெறுகிறது.
நேற்று நடைபெற்ற நிகழ்வில், செருப்பு அணியாமல் செல்வதும், செல்லும் இடமெல்லாம் பூக்களைத் தூவுவதும் என அனைத்துமே சினிமா படப்பிடிப்பு நடத்துவது போன்றே உள்ளது. காவல்துறையின் செயல்பாடுகளைத் திசைதிருப்பும் வகையிலான இத்தகைய நடவடிக்கைகள் வருத்தமளிக்கின்றன.
அமைச்சர்கள் தங்களது நிலை மற்றும் கடமையை உணர்ந்து செயல்பட வேண்டும். மாலை 6 மணிக்கு மேல் ஒரு பெண்ணைக் காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லவோ, விசாரணை என்ற பெயரில் தங்க வைக்கவோ கூடாது எனச் சட்டம் உள்ளது. அப்படியிருக்கையில், அமைச்சர் ஒருவர் காவல் நிலையத்திற்குச் சென்று அமர்ந்துகொண்டு, பெண் எஸ்.பி.யைத் தொலைபேசியில் அழைத்து வரச் சொல்வதன் அர்த்தம் என்ன?
அதேபோல், மாவட்ட ஆட்சியர் வகிக்கும் உயர்ந்த பதவியை மதிக்காமல், ஒரு பெண் என்ற கண்ணோட்டத்தில் இழிவாகப் பேசுவதும், கேலி செய்வதும் ஏன் என்ற கேள்வி எழுகிறது. தமிழகத்தில் பெண்களை மதிக்கத் தெரியாத மனநிலை உருவாகி வருவது வேதனையளிக்கிறது. இதுபோன்ற செயல்கள் தலைகுனிவை ஏற்படுத்துகின்றன. பெண்களை மதிக்கத் தெரியாத தமிழக வெற்றிக் கழக ஆட்சி நடைபெறுகிறது. தமிழக முதலமைச்சருக்கு ஏதாவது அழுத்தமோ அல்லது உத்தரவோ வந்திருக்கலாம்; அதனால்தான் அவர் இதுபோன்ற விவகாரங்களில் வாய் திறக்காமல் இருக்கிறாரோ என்ற சந்தேகம் எழுகிறது.
தூத்துக்குடி மாவட்டத்தில் தொடர்ந்து கொலைச் சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. இதுகுறித்து மீண்டும் மீண்டும் பேசிப் பேசி எங்களுக்கே சலிப்பு ஏற்பட்டுவிட்டது. '30 நாட்களில் 16 கொலைகள் நடைபெற்றுள்ளன' என்று சுட்டிக்காட்டினால், 'கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு ஒரு கொலை குறைவுதான்' என்று அதிகாரிகளும் ஆட்சியாளர்களும் பதிலளிக்கிறார்கள். இத்தகைய பதில்களைக் கூறும் அதிகாரிகளையும் ஆட்சியாளர்களையும் வைத்துக்கொண்டு என்ன சொல்வது?” என தெரிவித்துள்ளார்.






