தமிழ்நாடு

ரேஷன் அரிசியில் மொய்க்கும் வண்டுகள்.. வாங்க மறுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்-திருச்சியில் பரபர!

திருச்சியில் ரேஷன் கடையில் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் விநியோகிக்கப்படும் அரிசியில் வண்டுகள் இருப்பதாக பொதுமக்கள் புகாரளித்துள்ளனர்.

ரேஷன் அரிசியில் மொய்க்கும் வண்டுகள்.. வாங்க மறுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்-திருச்சியில் பரபர!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

திருச்சி, திருவெறும்பூர் தொகுதிக்கு உட்பட்ட அரியமங்கலம், சீனிவாசன் நகரில் அமராவதி ரேஷன் கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்தக் கடையில் அங்குள்ள ஆயிரக்கணக்கான மக்கள் பொருட்கள் வாங்கி வரும் நிலையில், கடந்த சில நாட்களாக மக்களுக்கு விநியோகிக்கப்படும் அரிசி, பருப்புகள் வண்டுகள் சூழ்ந்த நிலையில் இருந்துள்ளது.

ஆரம்பத்தில் இதனை ரேஷன் கடை ஊழியர்களிடம் பொதுமக்கள் கூறவே, அவர்கள் கண்டுகொள்ளாமல் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. அதன்படி தற்போது அரிசி, பருப்பு என மொத்த பொருட்களிலும் வண்டுகள் மொய்த்த நிலையில் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனப் பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.

ஏழை, எளிய மக்கள் உணவுக்காகப் பயன்படுத்தும் ரேஷன் அரிசி தரமற்ற நிலையில் விநியோகம் செய்யப்படுவதால், சில குடும்ப அட்டைதாரர்கள் அரிசியை வாங்க மறுத்து வருவதாகவும் கூறப்படுகிறது. இந்த சூழலில், இன்று குடும்ப அட்டைதாரர் ஒருவர் வாங்கிய ரேஷன் புழுங்கல் அரிசியில் ஏராளமான சிறிய மற்றும் பெரிய வண்டுகள் மொய்த்துக் கொண்டிருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.

இதையடுத்து, அந்த அரிசியை வாங்க மறுத்த அவர், இதுபோன்ற தரமற்ற அரிசியை அரசு விநியோகம் செய்யக்கூடாது என்றும், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் புகார் தெரிவித்தார். இதனால் அங்கு திரண்ட குடும்ப அட்டைதாரர்கள் ரேஷன் கடை ஊழியரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவலறிந்த அரசு அதிகாரிகள் சம்பந்தப்பட்ட ரேஷன் கடைக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அரிசியில் வண்டுகள் மொய்த்திருப்பதை உறுதி செய்த அதிகாரிகள், கடையில் இருப்பு வைக்கப்பட்டிருந்த அரிசி மூட்டைகளை அப்புறப்படுத்தினர்.

மேலும், ரேஷன் கடை கட்டிடத்தின் தரைப்பகுதி சேதமடைந்துள்ளதால், அதன் வழியாக வண்டுகள் அரிசி மூட்டைகளில் புகுந்து பாதிப்பை ஏற்படுத்துவதாகத் தெரிவிக்கப்பட்டது. கட்டிடத்தைச் சீரமைக்கும் வரை மாற்றுக் கட்டிடத்தில் ரேஷன் கடையைச் செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதிகாரிகள் தரப்பில் உறுதி அளிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இதற்கிடையே, இந்த ரேஷன் கடைக்கு அருகிலேயே பொதுக் கழிப்பறைகள் அமைந்துள்ளதால், அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதாகவும், சுகாதாரமற்ற சூழல் நிலவுவதாகவும் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். மேலும், கழிப்பறைப் பகுதியில் இருந்து வரும் வண்டுகள் மற்றும் புழுக்கள் ரேஷன் பொருட்களில் மொய்ப்பதாகவும் குற்றம் சாட்டுகின்றனர்.

எனவே, பொதுக் கழிப்பறை அருகே செயல்பட்டு வரும் அமராவதி ரேஷன் கடையை உடனடியாக வேறு சுகாதாரமான இடத்திற்கு மாற்ற வேண்டும் என்றும், பொதுமக்களுக்கு தரமான ரேஷன் பொருட்களை மட்டுமே விநியோகம் செய்ய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

banner

Related Stories

Related Stories