தமிழ்நாடு

டெண்டரில் முறைகேடு.. முதலமைச்சர் அலுவலகத்திலேயே நடந்த ஊழல்? - பகீர் கிளப்பும் செய்தியின் பின்னணி என்ன?

ஊழல் ஒழிப்பு என்று கூறும் த.வெ.க அரசின் முதலமைச்சர் அலுவலக மாற்றப் பணியிலேயே விதிமீறல் நடந்துள்ளதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

டெண்டரில் முறைகேடு.. முதலமைச்சர் அலுவலகத்திலேயே நடந்த ஊழல்? - பகீர் கிளப்பும் செய்தியின் பின்னணி என்ன?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

தமிழ்நாட்டில் ஊழல் இல்லாத, சுத்தமான ஆட்சியை வழங்குவோம் என தம்பட்டம் அடித்து ஆட்சிக்கு வந்தது தவெக அரசு. அதுமட்டுமல்லாமல், ஆட்சிக்கு வருவதற்கு முன்பே முந்தைய திராவிட மாடல் ஆட்சியின் வாக்குறுதிகளில் பெயர்களை மட்டும் மாற்றி, அதே வாக்குறுதிகளை அறிவித்தார்கள். குறிப்பாக, பெண்களுக்கு மாதந்தோறும் வழங்கப்படும் உதவித்தொகை, பெண்களுக்கு கட்டணமில்லா அரசு பேருந்து பயணம் உள்ளிட்ட பல்வேறு வாக்குறுதிகளை அளித்தனர்.

ஆனால், இந்த வாக்குறுதிகள் எப்போது கொண்டுவரப்படும் என்ற அறிவிப்பைக் கூட தவெக அரசால் சொல்ல முடியாத அவலத்தில் தவெக அரசாங்கம் ஆட்சியை நடத்தி வருகிறது. இதற்கு இடையில், டெண்டர் வெளியிடும் முறையில் வெளிப்படைத்தன்மை இருக்கும் என அமைச்சர் ஆதவ் அர்ஜூனா உள்ளிட்ட அமைச்சர்கள் கூறினார்கள். ஆனால், இந்த நூறு நாட்களில் வெளியான பல டெண்டர்களில் வெளிப்படைத்தன்மை இல்லை என்ற குற்றச்சாட்டு தற்போது எழுந்துள்ளது. சில டெண்டர்களில் முறைகேடுகள் நடைபெற்றதாக செய்தி நாளிதழ்களில் வெளியான பின்னரே, அந்த டெண்டர்களை ரத்து செய்த சம்பவங்களும் அரங்கேறியுள்ளன.

இதுஒருபுறம் இருக்க, முதலமைச்சர் அமரும் அலுவலகத்திலேயே டெண்டர் முறைகேடுகள் நடந்துள்ளது தற்போது அம்பலமாகியுள்ளது.

அதாவது, கடந்த இத்தனை ஆண்டுகளாக முதலமைச்சர் அலுவலகம் சென்னை தலைமைச் செயலகத்தில்தான் இருந்து வந்தது. அவ்வப்போது ஆட்சிக்கு வரும் கட்சிகளின் முதலமைச்சர்கள் சில மாற்றங்களை செய்வது வழக்கம்தான். ஆனால், ஒரே அடியாக அலுவலகத்தையே மாற்றியது இதுதான் முதல்முறை.

தவெக ஆட்சியில் நடக்கும் அனைத்து நிகழ்வுகளையும் குறிப்பாக, முதலமைச்சரின் அனைத்து செயல்பாடுகளும் ஜோதிடரின் ஆலோசனையின்படியே நடப்பதாகவும் குற்றச்சாட்டு உள்ளது.

அந்த வகையில், கடற்கரையை பார்த்தபடியே புதிய அறையில் முதலமைச்சர் அலுவலகம் அமைந்தால் ஆட்சிக்கு நல்லது என ஜோதிடர் சொன்னாரோ என்னவோ, 10-வது மாடியில் கடற்கரையை பார்த்தபடி புதிய அலுவலகம் முதலமைச்சருக்காக தயார் ஆகி வருகிறது. இதில்தான் முறைகேடுகள் நடந்துள்ளதாக டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழ் தற்போது அம்பலப்படுத்தியுள்ளது.

டெண்டரில் முறைகேடு.. முதலமைச்சர் அலுவலகத்திலேயே நடந்த ஊழல்? - பகீர் கிளப்பும் செய்தியின் பின்னணி என்ன?

இதுதொடர்பாக டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழ் வெளியிட்டுள்ள செய்தியில், டெண்டர் நடைமுறைகளில் வெளிப்படைத்தன்மை இருக்கும் என தவெக அரசு அளித்த வாக்குறுதிக்கு மாறாக, நாமக்கல் கவிஞர் மாளிகையின் 10-வது தளத்தில் முதலமைச்சர் ஜோசப் விஜய்க்காக புதிய அலுவலகம் அமைக்கும் ரூ.5.54 கோடி மதிப்பிலான டெண்டர் ரகசியமாக இறுதி செய்யப்பட்டதாகவும், கட்டாய டெண்டர் விதிமுறைகள் மீறப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதலாவதாக, மூன்று டெண்டர்களில் எதுவும் இணையதளத்தில் வெளியிடப்படவில்லை.

இரண்டாவதாக, டெண்டர் நடைமுறை தொடங்குவதற்கு முன்பே கட்டுமானப் பணிகள் தொடங்கியுள்ளன. இதன் மூலம் ஒப்பந்ததாரர் ஏற்கெனவே இறுதி செய்யப்பட்டிருக்கலாம் என்ற கேள்வி எழுகிறது.

மூன்றாவதாக, டெண்டர்கள் நாளிதழ்களில் வெளியிடப்பட்டு, நான்கு நாட்களுக்குப் பிறகே இணையத்தில் பதிவேற்றப்பட்டன. டைம்ஸ் ஆஃப் இந்தியா இதுகுறித்து அதிகாரிகளிடம் விளக்கம் கேட்ட பின்னரே இ-டெண்டர் வெளியிடப்பட்டது.

இறுதியாக, அச்சு மற்றும் இணையத்தில் வெளியான டெண்டர் ஆவணங்களில் குறிப்பிடப்பட்டிருந்த தொகையும் வேறுபட்டிருந்தது. அச்சு விளம்பரத்தில் ரூ.5.54 கோடி என குறிப்பிடப்பட்டிருந்த நிலையில், பின்னர் வெளியிடப்பட்ட பதிப்பில் தொகை குறிப்பிடப்படவில்லை.

பொதுப்பணித்துறையின் கட்டிடங்கள் மற்றும் பராமரிப்புப் பிரிவு, ஆகஸ்ட் 12 அன்று டெண்டர் அறிவிப்பை வெளியிட்டது. ஆகஸ்ட் 13 அன்று மீண்டும் அறிவிப்பு வெளியிட்டு, செப்டம்பர் 1-ம் தேதி பிற்பகல் 3 மணி வரை ஒப்பந்ததாரர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவித்தது.

டைம்ஸ் ஆஃப் இந்தியா கேள்வி எழுப்பிய நான்கு நாட்களுக்குப் பிறகு, ஆகஸ்ட் 17 அன்று காலை 9.30 மணியளவில் பொதுப்பணித்துறை செயலர் ஆர். செல்வராஜிடம், டெண்டர் ஏன் இணையத்தில் வெளியிடப்படவில்லை என கேட்கப்பட்டது. அதற்கு, வெளியிட நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்தார். அதே நாளில் காலை 10 மணிக்கு டெண்டர் இணையதளத்தில் பதிவேற்றப்பட்டது.

ஆகஸ்ட் 12 முதல் 17 வரை பொதுப்பணித்துறை 135 டெண்டர்களை இணையத்தில் வெளியிட்டிருந்த போதிலும், முதலமைச்சர் அலுவலகத்திற்கான மூன்று டெண்டர்கள் மட்டும் டைம்ஸ் ஆஃப் இந்தியா கேள்வி எழுப்பிய பின்னரே இணையத்தில் வெளியிடப்பட்டதாக செய்தி குறிப்பிடுகிறது.

banner

Related Stories

Related Stories