அரசியல்

“அண்ணல் அம்பேத்கர் அயலக உயர்கல்வி திட்ட நிதி.. மலேசியாவில் தவிக்கும் மாணவர்கள்” : அன்பில் மகேஸ் கண்டனம்!

அண்ணல் அம்பேத்கர் அயலக உயர்கல்வி திட்ட கட்டணம் கிடைக்காததால் மாணவர்களின் கல்வி கேள்விக்குறியாகும் சூழல் நிலவுவதால் உரிய நடவடிக்கை எடுக்க தமிழ்நாடு அரசுக்கு முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் வலியுறுத்தல்

“அண்ணல் அம்பேத்கர் அயலக உயர்கல்வி திட்ட நிதி.. மலேசியாவில் தவிக்கும் மாணவர்கள்” : அன்பில் மகேஸ் கண்டனம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Manoj
Updated on

அண்ணல் அம்பேத்கர் அயலக உயர்கல்வி திட்டத்தின் கீழ் மலேசியா தேசிய பல்கலைக் கழகத்தில் படிக்கச் சென்ற மாணவர் பாரதிதாசன் கல்வி உதவித்தொகை கிடைக்காமல் மிகவும் சிரமப்படுவதாக மலேசியாவில் பயிலும் தமிழ்நாடு ஆராய்ச்சி மாணவர் ஒருவர் வீடியோ வெளியிட்டு வேதனை தெரிவித்துள்ளார்.

கடந்த திமுக ஆட்சியில் தமிழ்நாட்டில் உள்ள மாணவர்கள் வெளிநாடுகளில் சென்று படிப்பதற்கு அண்ணல் அம்பேத்கர் அயலக உயர் கல்வி திட்டம் செயல்படுத்தப்பட்டது. இதன் மூலம் எஸ்சி மாணவர்கள் வெளிநாடுகளில் உள்ள பல்கலைக்கழகங்களுக்கு சென்று உயர் கல்வியும் மற்றும் ஆராய்ச்சி படிப்புகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில் மலேசியாவில் உள்ள தேசிய பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி படிப்பு மேற்கொண்டு வரும் மாணவர் பாரதிதாசன் வெளியிட்டுள்ள வீடியோ பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் அவர்களுக்கான எந்தவித நிதி உதவியும் கிடைக்கவில்லை எனவும், இது குறித்து அரசுக்கு ஏற்கனவே கடிதம் அனுப்பி உள்ளதையும் சுட்டிக்காட்டி உள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், நான் தற்போது 'அண்ணல் அம்பேத்கர் வெளிநாட்டு கல்வி உதவித்தொகைத் திட்டத்தின்' 2025 ம் ஆண்டு நரம்பு மண்டல மீளுருவாக்க மருத்துவத்தில் (Neuro Regenerative Medicine) எனது முனைவர் பட்டப் படிப்பின் (PhD) இரண்டாம் ஆண்டைத் தொடர்கிறேன்.

எனது இரண்டாம் ஆண்டுக்கான கல்வி உதவித்தொகை மற்றும் ஆராய்ச்சி நிதியை நான் இதுவரை பெறவில்லை . இதுவரை எனது கல்விக் கட்டணம் மட்டுமே செலுத்தப்பட்டுள்ளது . மேலும், ஆறு மாதங்களுக்கான வாழ்க்கைச் செலவுத் தொகை மட்டுமே எனக்குக் கிடைத்துள்ளது. அதில் தற்போது இரண்டு மாதங்களுக்கான தொகை மட்டுமே எஞ்சியுள்ளது.

“அண்ணல் அம்பேத்கர் அயலக உயர்கல்வி திட்ட நிதி.. மலேசியாவில் தவிக்கும் மாணவர்கள்” : அன்பில் மகேஸ் கண்டனம்!

எனது கல்வி உதவித்தொகை நிதியை விடுவிப்பதில் ஏற்படும் தொடர்ச்சியான தாமதம், எனது கல்வி முன்னேற்றம், ஆராய்ச்சி நடவடிக்கைகள் மற்றும் தனிப்பட்ட நல்வாழ்வு ஆகியவை கடுமையாகப் பாதிக்கிறது.

மேலும் நான் செய்யும் முனைவர் பட்ட ஆராய்ச்சிப் பணியானது மனித குலத்திற்கு மிகவும் முக்கியமான ஆய்வாகும் மனித மூளை மற்றும் நரம்பு மண்டலத்தில் வயதாகும் பொழுது அதில் ஏற்படும் மாற்றங்கள் குறித்தும் செய்ய வேண்டிய ஆராய்ச்சியாகும் இது மிகவும் முக்கியமான ஆராய்ச்சியாகும்.

இதில் பரிசோதனைகள் நேரத்தைக் மிகத் துல்லியமாகக் கடைப்பிடிக்க வேண்டியவை. செல்களுக்குத் தொடர்ச்சியான பராமரிப்பு தேவைப்படுகிறது; இதில் ஏற்படும் எந்தவொரு இடையூறும், மதிப்புமிக்க ஆராய்ச்சிப் பணிகளை இழக்க நேரிடும் நிலையை உருவாக்கலாம்.

எனது ஆராய்ச்சிக்கு அத்தியாவசியமான வேதிப்பொருட்கள், வினைபொருட்கள் (reagents), ஆய்வகப் பயன்பாட்டுப் பொருட்கள், ஆராய்ச்சி உபகரணங்கள், சிறப்பு மென்பொருள் மற்றும் பிற அறிவியல் சார்ந்த பொருட்கள் தேவைப்படுகின்றன. மேலும், எனது படிப்பிற்குத் துணையாக ஆராய்ச்சி தொடர்பான முக்கியமான புத்தகங்கள் மற்றும் குறிப்புதவி நூல்களையும் நான் வாங்க வேண்டியுள்ளது. தற்போது, கல்வி உதவித்தொகை நிதியைப் பெறுவதில் ஏற்பட்டுள்ள தாமதத்தால், இந்தத் தேவையான வளங்களைப் பெற இயலாத நிலையில் உள்ளேன். முறையான புத்தகங்கள், வேதிப்பொருட்கள், வினைபொருட்கள் மற்றும் ஆராய்ச்சிப் பொருட்கள் இல்லாமல், எனது ஆராய்ச்சியைத் திறம்படத் தொடர்வதும், முனைவர் பட்டத்திற்கான இலக்குகளை அடைவதும் எனக்கு மிகவும் கடினமாக உள்ளது.

இந்தச் சூழல் எனது படிப்பைப் பெரிதும் பாதித்துள்ளது. நிதி உதவி கிடைப்பதில் உள்ள நிச்சயமற்ற தன்மையால் நான் மிகுந்த மன அழுத்தத்திற்கு ஆளாகியுள்ளேன். மேலும், இந்தத் தாமதமானது திட்டமிடப்பட்ட காலக்கெடுவுக்குள் எனது ஆராய்ச்சியை நிறைவு செய்வதையும் கடினமாக்குகிறது.

நிலுவையில் உள்ள கல்வி உதவித்தொகை மற்றும் ஆராய்ச்சி நிதிகள் விரைவில் விடுவிக்கப்படாவிட்டால், எனது ஆராய்ச்சிப் பணிகளைத் தற்காலிகமாக நிறுத்த வேண்டிய சூழல் ஏற்படலாம்; இது எனது முனைவர் பட்ட (PhD) ஆய்வின் முன்னேற்றத்தையும், அதை உரிய நேரத்தில் நிறைவு செய்வதையும் கடுமையாகப் பாதிக்கும்.

2025 ஆம் ஆண்டு அண்ணல் அம்பேத்கர் உயர்கல்வி திட்டத்தின் கீழ் வெளிநாடுகளில் படித்துச் சென்ற மாணவர்களுக்கு நிதி உதவி வழங்காமல் உள்ளதால் பாதிக்கப்பட்டுள்ளனர் இது குறித்து தேசிய எஸ்சி எஸ்டி ஆணையத்திற்கும் கடிதம் எழுதி உள்ளோம். அவர்கள் நடவடிக்கை எடுப்பதாக கூறியுள்ளனர். மேலும் 4 ஆண்டுக்கு 36 லட்ச ரூபாய் நிதி உதவி வழங்குவதாக கூறிவிட்டு புதிய அரசு அமைந்த பின்னர் அதற்கான நிதி வழங்காமல் நிறுத்தி வைத்துள்ளனர். புதிய அரசு தலித் மாணவர்கள் ஆய்வு செய்யக்கூடாது என நிறுத்தி வைத்துள்ளனர் என குற்றம் சாட்டியுள்ளார்.

இதுகுறித்து பதிவிட்டுள்ள முன்னாள் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ், அண்ணல் அம்பேத்கர் அயலக உயர்கல்வி திட்டத்திற்கான நிதி ஒதுக்கீட்டை நடப்பாண்டில் அதிகரித்து இருப்பதாக அரசுத் தரப்பில் சொல்லப்படுகிறது. ஆனால் அத்திட்டத்தின் கீழ் 2025 - 2026-ஆம் கல்வியாண்டில், அதாவது திராவிட மாடல் ஆட்சி காலத்தில் மலேசிய தேசிய பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சிப் படிப்பில் சேர்க்கைப் பெற்று பயின்றுவரும் மாணவருக்கு, நடப்பு கல்வியாண்டிற்கான கட்டணத்தை செலுத்துவதில் ஏன் இவ்வளவு அலட்சியம்?

ஏற்கனவே, இங்கிலாந்தில் உள்ள கல்வி நிறுவனங்களில் பட்டமேற்படிப்புக்கு சேர நடப்பாண்டில் விண்ணப்பித்துள்ள நம் மாணவர்களுக்கு ‘மாநில அரசின் கல்வி உதவித்தொகையை ஏற்க முடியாது - இந்திய ஒன்றிய அரசின் மூலம் வழங்கப்பட்டால் மட்டுமே ஏற்றுக்கொள்ள முடியும்’ என்ற புதிய விதியை சுட்டிக்காட்டி சேர்க்கை பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

அந்த புதிய விதிக்கான காரணமாக கல்வி நிறுவனங்கள் தரப்பில் அளிக்கப்பட்ட விளக்கத்தில் “மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்கும் அமைப்பு, அதனை இடையிலேயே நிறுத்திவிட்டால் கல்விக்கட்டணம் செலுத்த முடியாமல் மாணவர்கள் படிப்பை தொடர முடியாத நிலை உருவாகுகிறது; எனவே இடைநிற்றல் ஏற்படும் சூழலும் ஏற்படுகிறது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி பார்த்தால், மலேசியா நாட்டில் பயிலும் நம்முடைய மாணவர்களுக்கு உரிய நேரத்தில் கட்டணம் செலுத்தாமல் த.வெ.க அரசு அலட்சியமாக இருப்பதால், அங்கும் எதிர்காலத்தில் தமிழ்நாட்டு அரசின் கல்வி உதவித்தொகையை நேரடியாக ஏற்க உயர்கல்வி நிறுவனங்கள் மறுக்கும் வகையில் விதிகள் உருவாக்கப்பட்டு விடுமோ என்ற அச்சம் ஏற்படுகிறது.

இன்னும் இதுபோல எத்தனை நாடுகளில் பயிலும் மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளார்களோ என்கிற கேள்வியும் எழுகிறது.

Take Diversion அரசின் இத்தகைய அலட்சியப்போக்கு, அரசின் உதவித்தொகையை மட்டுமே நம்பி கல்விக்காக கடல்கடந்து சென்றுள்ள மாணவர்களுக்கு எத்தகைய மனஅழுத்தத்தை ஏற்படுத்தும் என்பதை நினைத்துப் பார்க்கவே வேதனையாக இருக்கிறது. அலட்சியப் போக்கினை கைவிட்டு, அண்ணல் அம்பேத்கர் அயலக உயர்கல்வித் திட்ட மாணவர்களுக்கான கல்விக் கட்டணத்தை உரிய காலத்தில் விடுவிக்க முதலமைச்சர் விஜய் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தல்.

banner

Related Stories

Related Stories