
கர்நாடகாவில் மூன்று தமிழர்கள், வனத்துறையினரால் கடந்த 15 ஆம் தேதி சுட்டுக்கொல்லப்பட்டனர். இந்த விவகாரம் தொடர்பாக இன்றைய சட்டப்பேரவையில் கொண்டுவரப்பட்ட கவன ஈர்ப்புத் தீர்மானத்தில் தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் பால் மனோஜ் பாண்டியன் பேசினார்.
அதில் "மூன்று தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்டது தொடர்பாக தேசிய மனித உரிமை ஆணையத்தின் கவனத்திற்குக் கொண்டு செல்ல வேண்டும் என்று உச்ச நீதிமன்றத் தீர்ப்புகள் தெரிவித்துள்ள நிலையில், தமிழ்நாடு அரசு என்ன மேல் நடவடிக்கை எடுத்துள்ளது? தேசிய மனித உரிமை ஆணையத்தில் இதை ஒரு கொலை வழக்காகப் பதிவு செய்ய வேண்டும். அத்துடன், இழப்பீடு வழங்குவது தொடர்பாக ஏதேனும் கடிதம் அனுப்பப்பட்டுள்ளதா?" என்று கேள்வி எழுப்பினார்.
அதற்குப் பதிலளித்த சட்டத்துறை அமைச்சர் நிர்மல் குமார், "இன்னும் ஒரு சில நாட்களில் சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்" என்று தெரிவித்தார்.க
கர்நாடகாவில் ஆகஸ்ட் 15ஆம் தேதி மூன்று தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்டு இன்றோடு நான்கு நாட்கள் ஆகும் நிலையில், இதுவரை தேசிய மனித உரிமை ஆணையத்திற்குத் தமிழ்நாடு அரசு கடிதம் எழுதாமல் இருப்பது, தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தில் தமிழ்நாடு அரசின் மெத்தனப் போக்கைக் காட்டும் வகையில் அமைந்துள்ளது.






