
MP மற்றும் MLA-க்கள் மீதான வழக்குகளை விரைந்து விசாரிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு, உச்ச நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, மூத்த வழக்கறிஞர் விஜய் ஹன்சாரியா புதிய அறிக்கை ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.
அதில்,நாடு முழுவதிலும் உள்ள 28 மாநில முதலமைச்சர்களில் 14 பேர் மீது கிரிமினல் வழக்குகள் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை முதலமைச்சர் விஜய் மீது 2 வழக்குகள் உள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. நாட்டிலேயே அதிக வழக்குகள் உள்ள முதலமைச்சராகத் தெலங்கானா மாநில காங்கிரஸ் முதலமைச்சர் அனுமுலா ரேவந்த் ரெட்டி உள்ளார். இவர் மீது 89 வழக்குகள் உள்ளன.
இதற்கு அடுத்தபடியாக, மேற்கு வங்க முதலமைச்சர் மமதா பானர்ஜி மீது 29 வழக்குகளும் , கர்நாடகா முதலமைச்சர் சி டி.கே. சிவகுமார் மீது 19 வழக்குகளும், ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு மீது 19 வழக்குகளும், கேரள முதலமைச்சர் வி.டி. சதீசன் மீது 18 வழக்குகளும் உள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.
சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீது அதிக வழக்குகள் நிலுவையில் உள்ள மாநிலங்களில் உத்தரப் பிரதேசம் முதலிடத்தில் உள்ளது (1,171 வழக்குகள்). இதற்கு அடுத்தடுத்த இடங்களில் கேரளா, பீகார், மகாராஷ்டிரா மற்றும் ஒடிசா ஆகிய மாநிலங்கள் உள்ளன.
மேலும், தற்போதைய நாடாளுமன்றத்தில் மக்களவை உறுப்பினர்கள் 251 பேர் மீதும், மாநிலங்களவை உறுப்பினர்கள் 75 பேர் மீதும் கிரிமினல் வழக்குகள் உள்ளதாக அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மக்கள் பிரதிநிதிகள் மீதான இந்த வழக்குகளை விரைந்து முடிக்க சிறப்பு நீதிமன்றங்களை ஒதுக்க வேண்டும் என்றும், இந்த விசாரணை நடைமுறைகளை அந்தந்த மாநில உயர் நீதிமன்றங்கள் தொடர்ந்து கண்காணிக்க உத்தரவிட வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றத்தில் வாதங்கள் முன்வைக்கப்பட்டன






