
100 நாள் த.வெ.க ஆட்சியில் சட்டம்-ஒழுங்கு முற்றிலும் சீர்குலைந்து, குற்றச் சம்பவங்களின் எண்ணிக்கை பன்மடங்கு அதிகரித்துள்ளதாக தி.மு.க சட்டத்துறை இணைச் செயலாளர் ஐ. பரந்தாமன் கடும் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய ஐ.பரந்தாமன் "100 நாள் ஆட்சியில் மாநிலத்தில் 576 குற்றச்சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் பல்வேறு மாவட்டங்களில் கொடூரச் சம்பவங்கள் நடந்துள்ளன. கல்லூரியில் போதைப்பொருள் விற்பனை குறித்துக் காவல்துறைக்குத் தகவல் அளித்த அமுதன் என்ற மாணவரின் விவரத்தைக் காவல்துறை ரகசியமாக வைக்கத் தவறியதால், அவர் சக மாணவர்களால் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
கஞ்சா விற்பனையைத் தட்டிக் கேட்ட இளைஞர், அம்மிக்கல்லைத் தூக்கிப் போட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார். திருவெறும்பூரில் கொலைச் சம்பவமும், விருதுநகரில் பள்ளிக் குழந்தைக்கு ஏற்பட்ட தொல்லையைத் தட்டிக் கேட்ட தந்தை வெட்டிக்கொல்லப்பட்ட சம்பவமும் நடந்துள்ளன. கோயில் திருவிழாக்களில் கொலை, காதலை மறுத்த பெண் மற்றும் அவரது குடும்பத்தினர் படுகொலை, ஈரோட்டில் கடைக்குள் புகுந்து கத்திக்குத்து, சென்னை அம்பத்தூரில் ஆட்டோவில் வைத்துப் பெண்ணின் கழுத்தை அறுத்து வீசியது போன்ற சினிமா பாணிக் குற்றங்கள் அரங்கேறியுள்ளன. வேலூரில் தலைமைக் பெண் காவலர் மீதே கத்திக்குத்து நடத்தப்பட்டுள்ளது. இதுவெல்லாம் சட்டம்-ஒழுங்கின் அவல நிலையைக் காட்டுகிறது.
இளைஞர்கள் மூலமாக நாங்கள் ஆட்சிக்கு வந்தோம் என மார்தட்டிக்கொள்ளும் த.வெ.க ஆட்சியில்தான், அமுதன் என்ற இளைஞன் கொடுத்த ரகசியத்தைப் பாதுகாக்க முடியவில்லை. அந்தத் தகவலைக்கூடப் பாதுகாக்க முடியாத உங்களுக்கு, முதலமைச்சராக இருக்க என்ன தகுதி இருக்கிறது?
கோவை மாணவர் அமுதனின் தாயார் இந்த அரசின் மீது நம்பிக்கையிழந்து, எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் அவர்களிடம் நீதி கேட்டு முறையிட்டுள்ளதன் மூலம், மக்கள் எதிர்க்கட்சியையே நம்புகிறார்கள் என்பது வெளிப்படையாகத் தெரிகிறது. த.வெ.க ஆட்சியில் குற்றங்கள் அதிகரித்திருப்பது முற்றிலும் அரசின் நிர்வாகத் தோல்வியே ஆகும்.
கோவை மாணவர் அமுதன் படுகொலை விவகாரத்தில், கல்லூரி நிர்வாகத்தின் மீது புகார் அளிக்கச் சென்ற அவரது தாயாரிடம் புகாரைப் பெறக் காவல்துறை மறுத்துள்ளதாகத் தெரிவித்த அவர், 'அரசினுடையவும் காவல்துறையினுடையவும் ஆதரவு இல்லாமல் கல்லூரி நிர்வாகம் தன்னிச்சையாகப் பேட்டி அளிக்க முடியாது. பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு நீதி வழங்குவதை விடுத்து, அவர்கள் மீதே குற்றம் சுமத்தப் பார்ப்பது முதலமைச்சரின் நிர்வாகத் திறமையின்மையையே காட்டுகிறது'
சட்டம்-ஒழுங்கு சீர்கேடு குறித்து எதிர்க்கட்சித் தலைவர் சிறப்பு கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டுவந்தபோது, காவல்துறையைக் கையில் வைத்துள்ள முதலமைச்சர் அவையில் பதிலளிக்காமல் வெளியேறியது, சட்டமன்ற மரபுகளை மீறும் செயலாகும். சட்டமன்றத்தில் அத்தியாவசியக் கேள்விகளுக்குப் பதில் அளிக்கத் தெரியாமல் சம்பந்தமில்லாத அமைச்சர்கள் பேசி வருகின்றனர்.
நீட் மசோதா மற்றும் நாடாளுமன்ற நடைமுறைகள் குறித்த அடிப்படைப் புரிதல்கூட அமைச்சர்களிடம் இல்லை. அரிசி விலை கிலோவுக்கு ரூ.30 வரை உயர்ந்துள்ளதையும், ஆவின் பால் தட்டுப்பாடு மற்றும் உயர்த்தப்பட்ட மின்கட்டணத்தால் மக்கள் சந்திக்கும் சிரமங்களையும் அரசு கண்டுகொள்ளவில்லை. கர்நாடகாவில் தமிழர்கள் மீதான தாக்குதல் போன்ற எதற்கும் குரல் கொடுக்காமல் ஒன்றிய அரசிடம் இந்த ஆட்சி பணிந்து போகிறது.
மாநில உரிமைகளுக்கு எதிராக நாடு முழுவதும் எதிர்க்கப்படும் திட்டங்களில் அவசரப்பட்டுக் கையெழுத்திடுவது, பல்கலைக்கழகங்களின் அதிகாரத்தில் தலையிடுவது போன்றவற்றின் மூலம் மாநில உரிமைகள் காக்கப்படவில்லை. 100 நாளில் எந்தச் சாதனையும் செய்யாமல், மக்கள் பணத்தில் விளம்பரப் புரோமோ நிகழ்ச்சிகளையும் ரீல்களையும் மட்டுமே நம்பி இந்த அரசு இயங்கி வருகிறது.
மேலும், நட்சத்திர ஹோட்டல் உரிமையாளர்களை அழைத்து, 'லஞ்சம் கொடுக்க வேண்டாம்' எனக் கூறும் காவல்துறை ஆணையர், அதைத் தன் கீழ் உள்ள இன்ஸ்பெக்டர்கள் மற்றும் எஸ்.ஐ-க்களிடம் அறிவுறுத்தத் தவறுவது ஏன்? மாநிலத்திற்கு ரூ.15,000 கோடி கூடுதல் வருவாய் வந்துள்ளதாக அரசு அறிவித்த நிலையில், தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் தங்கம் தென்னரசு, 'அது எந்தக் கணக்கில், எந்தத் துறையின் கீழ் வந்தது?' என ஆதாரத்துடன் கேட்டார். அதற்குப் பதிலளிக்கத் தெரியாமல் நிதியமைச்சர், 'வருவாய் வரும் என எதிர்பார்க்கிறோம்' என்று மாற்றிப் பேசியுள்ளார். வந்த வருவாய்க்கும் வரப்போகும் வருவாய்க்கும் வித்தியாசம் தெரியாமல் அரசு பொய் சொல்கிறது.கசிவுகளை (Leakages) அடைத்து வருவாயைப் பெருக்கியதாகக் கூறுவது உண்மையானால், அது நிதிநிலை அறிக்கையில் ஏன் எதிரொலிக்கவில்லை?
மேலும், 'நடைபெற்று முடிந்த முதலீட்டாளர்கள் மாநாட்டில் பத்திரிகையாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதற்கான காரணம் என்ன? பத்திரிகையாளர்களை அனுமதித்தால் உண்மை வெளிவந்துவிடும் எனப் பயந்து அனுமதி அளிக்கவில்லை. இது ஒரு அறிவிக்கப்படாத அவசரநிலை (Emergency). த.வெ.க அரசிற்கு நிலைப்பாடு என்று ஏதேனும் உள்ளதா?' எனக் கேள்வி எழுப்பிய அவர், 'தொகுதி மறுவரையறை பற்றி விஜய் அரசு அனைத்துக்கட்சிக் கூட்டம் நடத்தியது. ஆனால், அவர்களுக்கு அதில் என்ன நிலைப்பாடு என்பதை அறிவித்தார்களா?'
சினிமாவில்தான் வேஷம் போட்டார் என்று பார்த்தால், முதலமைச்சராக வந்த பிறகுகூட நடித்துக்கொண்டு இருக்கிறார் விஜய்” என தெரிவித்துள்ளார்.






