
சட்டப்பேரவையில், கோவை கல்லூரி மாணவர் அமுதன் படுகொலை செய்யப்பட்ட விவகாரம் குறித்த கவன ஈர்ப்பு தீர்மானத்தின் மீது எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் ஆற்றிய உரையின் விவரம் வருமாறு:
பேரவைத் தலைவர் அவர்களே, கடந்த ஒரு வாரத்தில் மட்டும் தமிழ்நாடு முழுக்க ஏராளமான கொலைகள் நடந்திருக்கின்றன.
முக்கியமாக கோவையில், கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த ஒடுக்கப்பட்ட பிரிவைச் சேர்ந்த 19 வயது பொறியியல் மாணவர் அமுதனை 20 பேர் கொண்ட ஒரு கும்பல் கடந்த திங்கட்கிழமை அடித்துக் கொன்றுள்ளார்கள். இந்தப் பிரச்சினையை ஏற்கனவே இந்த அவையில் நான் எழுப்பும்போது, பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அவர்கள், இது ஒரு கோஷ்டி பூசல் தகராறினால் நடந்த கொலை என்று சொல்லியிருக்கிறார்.
10 பேர் மோதிக்கொண்டு 10 பேருக்கும் இடையில் சண்டை நடந்து கொலை நடந்திருந்தால், அது கோஷ்டி பூசல். ஆனால், ஒரு மாணவனைக் கிட்டத்தட்ட 20 பேர் சேர்ந்து அடித்திருக்கிறார்கள். எனவே, இது ஒரு படுகொலை.
மாணவர் அமுதன் விஷயத்தில் கோவை, செட்டிப்பாளையம் போலீசார் அமுதனை வழக்கு ஒன்றின் விசாரணைக்காக காவல் நிலையத்திற்கு வரச் சொல்லியுள்ளார்கள். அப்போது, அந்த போதைப் பொருள் கும்பல் பற்றி, அமுதனிடம் தகவலைக் கேட்டு வாங்கியிருக்கிறார்கள்.
தகவல் வாங்கிய காவல்துறை, குற்றவாளிகளைக் கண்டுபிடித்து நியாயமாக அந்த போதைப் பொருட்களைப் பறிமுதல் செய்திருக்க வேண்டும். ஆனால், போதைப்பொருள் பயன்பாடு பற்றி தகவல் தந்த அமுதனின் தகவல்களைக் குற்றவாளிகளிடமே பகிர்ந்துள்ளார்கள். அதுதான் அமுதனின் மரணத்திற்கு முக்கியமான காரணமாக அமைந்திருக்கிறது.
இதை நான் மட்டும் சொல்லவில்லை. அமுதனின் பெற்றோர் இருவரும் சொல்லியிருக்கிறார்கள். அவரின் தாய், தந்தை இருவருமே என்னிடத்தில் தொலைபேசியில் அழைத்து பேசியிருக்கிறார்கள். நான் அவர்களுக்கு ஆறுதல் சொல்லி இருக்கிறேன். அப்படி அவர்கள் பேசும்போது, போதைப்பொருள் கும்பல் பற்றி, காவல் துறையினரிடம் தகவல் கொடுத்ததால்தான் அமுதன் கொலை செய்யப்பட்டதாக அவர்கள் உறுதியாக நம்புகிறார்கள். அதைத்தான் என்னிடம் சொல்லியிருக்கிறார்கள்.
இந்த வழக்குத் தொடர்பாக கள ஆய்வு செய்த பல்வேறு சமூக ஆர்வலர்களும், இதே குற்றச்சாட்டை முன் வைக்கிறார்கள். இந்தச் சம்பவத்துக்கு நீதி கிடைக்க வேண்டும் என்று, நேற்றைய தினம் எங்கள் கழகத் தலைவர் அவர்களது உத்தரவின்படி, ஒருங்கிணைந்த கள்ளக்குறிச்சி மாவட்டக் கழகம் சார்பாக, கிட்டத்தட்ட 10 ஆயிரம் பேர் பங்கேற்ற ஒரு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தை கள்ளக்குறிச்சி நகரத்தில் நடத்தி இருக்கிறோம். இந்தக் கொலையை ஏதோ ஒரு தனிப்பட்ட சம்பவமாகவோ அல்லது கோஷ்டிப் பூசலாகவோ நாம் கடந்து போக முடியாது. அரசின் அலட்சியத்தால், காவல்துறையின் பொறுப்பற்ற போக்கால்தான் இந்தக் கொலை நடந்திருக்கிறது என்பதுதான் குற்றச்சாட்டு.
மாணவர் அமுதன் கொலையில் சம்பந்தப்பட்டவர்களுக்குக் கடுமையான தண்டனையை நாம் வாங்கி கொடுக்க வேண்டும்.

அதே மாதிரி குற்றவாளிகளுக்குத் தகவல் கொடுத்ததாகக் குற்றம் சாட்டப்படுகின்ற காவல் துறையினரின் மேல் உடனடியாகக் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். போதைக் கலாச்சாரத்தை எதிர்த்து, நிற்கின்ற ஒவ்வொருவருக்கும் விடப்படுகின்ற ஒரு எச்சரிக்கைதான் இந்த சம்பவம்.
கோவையில் மட்டுமல்ல, சென்னையிலும் இதேமாதிரி ஒரு சம்பவம் கடந்த 14-ஆம் தேதி நடந்திருக்கிறது. சென்னை திருவொற்றியூரில் அரசுப் பள்ளியில் 12-ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த மாணவரின் பெயர் தனுஷ். அவர் போதைப் பொருள் கும்பலைத் தட்டிக்கேட்டிருக்கிறார். அதற்காக, பட்டப்பகலில் சுமார் 30 பேர் கொண்ட கும்பல் தனுஷை அடித்துக் கொலை செய்திருக்கிறார்கள்.
இந்த அரசு போதைப்பொருள் தடுப்புப் படையை உருவாக்கி இருக்கிறோம் என்று சொல்கிறது. அதைச் சொல்லி பல கோடி ரூபாயில் விளம்பரம் எல்லாம் செய்திருக்கிறீர்கள். ஆனால், களத்தில் நடப்பதைப் பார்த்தால், இன்று வேறு மாதிரி இருக்கிறது. ஒரு சில நாட்களில் குற்றச் சம்பவங்களை மட்டும் இங்கே அவையில் பதிய வைக்க விரும்புகிறேன்.
நேற்றிரவு, காஞ்சிபுரம் அருகே படுநெல்லி கிராமத்தில் கோயில் திருவிழாவின்போது, போதைப் பொருள் கும்பலின் அட்டகாசத்தைக் கேள்வி கேட்ட சந்துரு, விக்கி என்ற இரண்டு இளைஞர்களை, அந்தக் கும்பல் வெட்டிக் கொலை செய்துள்ளது.
ஆகஸ்ட் 11-ஆம் தேதி அன்று திருப்பூர் மாவட்டம், பல்லடத்தில் தனலட்சுமி, பூவரசி என்ற தாய், மகளை சேர்த்து இரட்டை கொலை செய்துள்ளார்கள்.
ஆகஸ்ட் 12-ஆம் தேதி சென்னை அம்பத்தூரில், ஆட்டோவில் வைத்து வைதேகி என்ற இளம் பெண்ணை கழுத்தை அறுத்துக் கொடூரமாகக் கொலை செய்துள்ளார்கள்.
ஆகஸ்ட் 13-ஆம் தேதி, வேலூர் மாவட்டம், குடியாத்தத்தில், பெண் தலைமைக் காவலர் தாமரைச்செல்வி குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
இதே நாளில், திருவள்ளுர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி சாணாபுத்தூர் கிராமத்தைச் சேர்ந்த ரஞ்சன் என்கிற இளைஞரும் கொலை செய்யப்பட்டுள்ளார்.
இப்படிக் கொலைகள் மட்டுமல்ல, பாலியல் வன்கொடுமைச் சம்பவங்களும் எக்கச்சக்கமாக கடந்த ஒரு வாரத்தில் நடந்துள்ளன.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில், 9 வயது சிறுமி பள்ளி முடிந்து வீட்டுக்குச் சென்று கொண்டிருந்தபோது, வழியில் கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டுள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம், ஆறுமுகநேரியில் ஆளுங்கட்சி நிர்வாகிகள் மீதே பாலியல் புகார்கள் தொடர்ந்து வந்த வண்ணம் இருக்கின்றன. அந்த மாவட்டத்தில் ஆளுங்கட்சி நிர்வாகிகள் மீது வருகின்ற இரண்டாவது பாலியல் குற்றச்சாட்டு இது.
ராணிப்பேட்டையில் ஆளுங்கட்சியின் மாவட்டச் செயலாளர் விஜய் மோகன் மேல் ஒரு பெண், பாலியல் குற்றச்சாட்டு சொல்லியிருக்கிறார்.
100 நாள் சாதனை என்று இந்த அரசு பெருமை பேசுகிற இதே நேரத்தில், தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கு இந்த 100 நாட்களில் எந்த அளவுக்கு மோசமாகியிருக்கிறது என்பதற்கு, இந்த சம்பவங்களே சாட்சி.
இதுமாதிரியான சம்பவங்கள் தொடராமல் இருக்க, இந்த அரசு என்னென்ன நடவடிக்கைகள் எடுக்க போகின்றது? மிக முக்கியமாக பள்ளி, கல்லூரிகளில் வன்முறைக்கு எதிராகவும், ஒழுக்கத்தை வளர்த்தெடுக்கவும் கவுன்சிலிங் வகுப்புகளை நடத்த வேண்டும் என்று, இந்த அரசைக் கேட்டுக் கொள்கிறோம்.

போதைக்கு எதிரான தொடர் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். மிக முக்கியமாக சட்டம்-ஒழுங்குப் பிரச்சினையைக் கட்டுக்குள் கொண்டு வர, இந்த அரசு உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, எங்கள் கட்சியின் சார்பாக கேட்டுக் கொள்கிறேன்.
பேரவைத் தலைவர் அவர்களே! நம் அமைச்சர் அவர்கள் சம்பந்தப்பட்ட ஒரு நபரின் பெயரை, இங்கு குறிப்பிட்டு பேசியிருக்கிறார். அந்த சம்பந்தப்பட்ட நபரின் மீது அப்படி ஒரு குற்றச்சாட்டு எழுந்தவுடன், எங்கள் தலைவர் அவர்கள் அவரைக் கைது செய்து, உடனடியாக அவரைக் கட்சியில் இருந்து நீக்கிவிட்டோம். ஆனால், இவர்கள் ஆட்சி என்ன லட்சணத்தில் நடந்துகொண்டு இருக்கிறது என்பதை மக்கள் இன்று பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். அவர்களின் அமைச்சரே ஐ.பி.எல். மேட்சில் பவுடர் நுணுக்கிக்கொண்டு, மாத்திரை நுணுக்கினேன் என்று கதை விட்டார். அவரிடம் உங்கள் காவல்துறை ஏதாவது விசாரணை நடத்தியதா? அவர் மீது ஏதாவது நடவடிக்கை எடுத்திருக்கிறீர்களா?
அதுமட்டுமல்ல, சமீப காலமாக ஆளுங்கட்சியைச் சேர்ந்த பலர் போதைப்பொருள் வழக்கில் தொடர்ந்து கைது செய்யப்பட்டு வருகிறார்கள்.
அமைச்சர் அவர்கள் பேசியதற்கு, ஏதாவது ஆதாரம் கேட்டு இருக்கிறீர்களா? நாங்கள் உடனடியாக அவரைக் கைது செய்துள்ளோம், அவரைக் கட்சியில் இருந்து நீக்கி இருக்கிறோம். உங்கள் அமைச்சர் ஐ.பி.எல் மேட்சில் பவுடர் நுணுக்கிக்கொண்டு இருந்ததை, இந்த உலகமே பார்த்தது. பல்வேறு விமர்சனங்கள் வந்தன. குழந்தைக்கு மாத்திரை கொடுத்தேன் என்று கதை விட்டார். அதற்காக ஏதாவது விசாரணை நடத்தி இருக்கிறீர்களா, புகார் அல்லது நடவடிக்கை எடுத்திருக்கிறீர்களா என்பதைக் கேட்க விரும்புகிறேன்.
பேரவைத் தலைவர் அவர்களே, கடந்த ஒரு வார காலமாக தமிழ்நாட்டில் என்னென்ன சட்டம் - ஒழுங்குப் பிரச்சினை, போதைப்பொருளால் என்னென்ன பிரச்சினைகள் நடந்திருக்கின்றன என்று நான் மட்டும் அல்ல, இங்கு இருக்கின்ற அனைத்துத் தலைவர்களும் இந்த அரசின் கவனத்துக்கு எடுத்து வந்தோமே தவிர, அதற்கு எந்த அமைச்சரும் சரியான பதிலைத் தரவில்லை.
அதற்கு மாறாக உங்கள் ஆட்சியில் இப்படி நடந்தது என்று குறை சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள். அவர் போட்டோ எல்லாம் காட்டினார். எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டிருக்கிறது என்று சொன்னார். இதிலிருந்து என்ன தெரிகிறது, எங்கள் ஆட்சியில் நாங்கள் நடவடிக்கை எடுத்திருக்கிறோம். எங்கள் ஆட்சியில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நாங்கள் கேட்பது, ஏன் உங்கள் ஆட்சியில் நடவடிக்கை எடுக்க மாட்டேன் என்கிறீர்கள் என்பதுதான். அமைச்சர் அவர்கள் ஒரு போட்டோ காட்டினார். இன்னொரு வீடியோ இருக்கிறது. அதை எல்லாரும் பார்த்தார்கள், ஒட்டுமொத்த இந்தியாவும், உலகமும் பார்த்தது. இங்கு இருக்கிற அமைச்சர் ஒருவர் போதைப்பொருளை நுணுக்கிப் போடுகிறார்.
கடந்த 5 ஆண்டுகளாக போதைப்பொருட்களை ஒழிக்க, எங்கள் தலைவர், எங்கள் முதலமைச்சர் சரியான நடவடிக்கை எடுக்கவில்லை என்ற கருத்து இங்கே வைக்கப்படுகிறது. அது தொடர்பாக சில கருத்துகளை இங்கே கூற விரும்புகிறேன். ஆட்சிக்கு வந்த ஒரே ஆண்டில் எங்கள் தலைவர் அவர்கள், `போதைப் பொருள் இல்லா தமிழ்நாடு’ என்ற இலக்கோடு மதுவிலக்கு அமலாக்கத் துறையையும், நார்காட்டிக்ஸ் இன்டலிஜென்ட்ஸ் ஹீரோ, சி.ஐ.டி என்ற இரு பிரிவுகளை ஒன்றிணைத்து இ.பி.சி.ஐ.டி என்ற புதிய பிரிவை உருவாக்கியவர் எங்கள் தலைவர் திரு. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின், அன்றைய முதலமைச்சர் அவர்கள்.
அவர் அன்றைக்கு அப்படிச் செயல்பட்டதால்தான் கடந்த 5 ஆண்டுகால திராவிட மாடல் ஆட்சியில் இதுவரை இல்லாத அளவுக்கு ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தி, போதைப் பொருட்களைத் தொடர்ந்து எங்களின் அரசு பறிமுதல் செய்தது. இது தொடர்பான புள்ளிவிவரங்கள் தேவைப்பட்டால், அமைச்சரிடமே இருக்கிறது.
கூடுதல் தகவல் தேவைப்பட்டால் அதை நாம் எங்கேயும் சென்று தேட வேண்டிய அவசியம் இல்லை.
இன்றைக்கு சென்னை மாநகர கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ள திரு. அமல்ராஜ் ஐ.பி.எஸ் அவர்களிடம் இந்த அரசு கேட்டால், அவரே இந்த தகவல்களைத் தெளிவாக எடுத்து கொடுத்திடுவார். ஏனென்றால், அவர்தான் இன்றைக்கு கமிஷனராக இருக்கிறார். இந்த இ.பி.சி.ஐ.டி பிரிவுக்குத் தலைமையேற்று நடத்தியவரும் அவர்தான். அவரிடம் கேட்டால் சரியாக சொல்வார். எத்தனை டன் கஞ்சாவைப் பறிமுதல் செய்தோம். எத்தனை பேரை நாங்கள் கைது செய்துள்ளோம். சிறப்பு புகார் எண்கள் எத்தனை அறிவித்தோம். விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் என இப்படி எல்லா டேட்டாவும் அவரிடம் இருக்கின்றன.

ஒருவேளை எங்கள் திராவிட மாடல் ஆட்சியில் போதைப் பொருளைத் தடுக்கின்ற செயல்பாடுகள் சரியாக நடக்கவில்லை என்று இந்த அரசு எங்களைக் குற்றம் சாட்டியது என்றால், பிறகு எதற்கு அவ்வளவு பெரிய அதிகாரிக்கு, இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த சென்னை மாநகராட்சி ஆணையர் பொறுப்பைக் கொடுத்திருக்கிறீர்கள் என்ற கேள்வியை இந்த அரசுக்கு வைக்கிறேன்.
பேரவைத் தலைவர் அவர்களே, போதைப்பொருள் ஒழிப்பு மற்றும் சட்ட விரோத கடத்தல் தடுப்புப் பணியைச் சிறப்பாக மேற்கொள்ளும் காவலர்களுக்கு இரண்டு நாட்களுக்கு முன்பு, நம் முதலமைச்சர் அவர்கள் விருதுகள் எல்லாம் வழங்கி இருக்கிறார். அந்த விருது எதற்காக என்று பார்த்தீர்கள் என்றால், போதைப்பொருள் ஒழிப்பு மற்றும் சட்ட விரோத கடத்தல் நடவடிக்கையைச் சிறப்பாக மேற்கொண்டதற்காக, கடந்த ஒரு வருடமாக சிறப்பாகப் பணியாற்றியதற்காக 15 காவல்துறை அதிகாரிகள் மற்றும் காவலர்களுக்கு முதலமைச்சர் அவர்களே விருது கொடுத்திருக்கிறார்கள். அந்த 15 காவல்களுமே எங்களின் ஆட்சிக் காலத்தில் பல்வேறு வழக்குகளில் போதைப் பொருள் ஒழிப்பு நடவடிக்கையைச் சிறப்பாக மேற்கொண்டவர்கள் என்று இன்றைக்கு அரசு அறிக்கை கொடுத்திருக்கிறது.
விருது பெற்ற அந்த 15 காவலர்களும் எத்தனை கிலோ போதைப் பொருட்களை பறிமுதல் செய்தார்கள், எத்தனை குற்றவாளிகளைக் கண்டுபிடித்துள்ளார்கள், எவ்வளவு நாட்களுக்கு அவர்களுக்கு எல்லாம் தண்டனை வாங்கிக் கொடுத்துள்ளார்கள், இந்த விவரங்களை எல்லாம், அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெளிவாகச் சொல்லி இருக்கிறீர்கள்.
போதைப் பொருள் தடுப்புக்கு எங்கள் ஆட்சியில் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், பிறகு எதற்கு இந்த காவலர்களுக்கு முதலமைச்சர் அவர்கள் விருது கொடுத்தார் என்பதை இங்கு பதிய வைக்க விரும்புகிறேன். அமைச்சர் அவர்கள் சில கேள்விகளைக் கேட்கிறார். அமைச்சர் கேட்கின்ற கேள்விகளுக்கு எல்லாம் நான்தான் பதில் சொல்ல வேண்டும் என்று அடம் பிடிக்கிறார். இன்று நான், அனைத்து எதிர்கட்சித் தலைவர்கள் எல்லாம் சட்டம்-ஒழுங்கு சம்பந்தமாக பேசிக்கொண்டு இருக்கிறோம். அது சம்பந்தப்பட்ட அமைச்சர் எங்கே இருக்கிறார். அவர் ஏன் பதில் சொல்ல மறுக்கிறார் என்பதையும் கேட்க விரும்புகிறேன்.
இவ்வாறு சட்டப்பேரவையில், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் உரை ஆற்றினார்.






