
மதுராந்தகம் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும், தி.மு.க வேட்பாளர் பரந்தாமனை ஆதரித்து இன்று பிரச்சார பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் சிறப்புரையாற்றினார்.
அதன் விவரம் வருமாறு:-
நீங்கள் அடிக்கடி செய்திகளில் பார்த்துப் பழகிய முகம்தான் பரந்தாமன். சிறப்பான பேச்சால், தவெக ஆட்சியை வெளுத்து வாங்குகிறார். ஆட்சியின் அவலங்களைச் சிறப்பாக எடுத்துரைப்பவர். கேஸ் போட்டும் மிரட்ட முடியாது; சூட்கேஸ் கொடுத்தும் ரேட் பேச முடியாது. சட்டமன்றத்தில் இவரின் குரல் உங்களுக்காக ஒலிக்க வேண்டும்
போன முறை மிஸ் ஆகிவிட்டது; இந்த முறை மிஸ் ஆகக் கூடாது. இந்தத் தேர்தல் தவிர்க்க முடியாத காரணத்தால் நடக்கும் தேர்தல் அல்ல; தவிர்த்திருக்க வேண்டிய தேர்தல். திணிக்கப்பட்ட தேர்தல்.
தவெக வேட்பாளர் மரகதம் குமரவேல்தான் கடந்த 5 ஆண்டுகளில் மதுராந்தகம் தொகுதி எம்.எல்.ஏ. ஆனால், 5 ஆண்டுகளில் எதுவும் செய்யவில்லை என அவரை வைத்துக்கொண்டே அமைச்சர் சொல்கிறார். இதுபோல, எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்து வேறு கட்சிக்குத் தாவிய குதிரை பேர அரசியல் இதுவரை நடந்ததில்லை.
தவெக ஆட்சியில் அப்பட்டமான குதிரைபேரம் நடந்துள்ளது என்று சொன்னால், எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்துவிட்டுத்தான் வந்தார்கள் என முதலமைச்சர் விஜய் விளக்கம் கொடுக்கிறார். இது பெரிய கண்டுபிடிப்பு. கட்சி தாவல் சட்டத்திற்குப் பயந்து, பொய்யான தகவலைச் சொல்லி ராஜினாமா செய்திருக்கிறார்கள். இதையும் சேர்த்துச் சொல்லியிருக்கலாமே சி.எம். சார்.
தவெக வேட்பாளரை விரட்டியடித்து, சுயமரியாதை உள்ளவர்கள் நாங்கள் என்பதை மதுராந்தகம் மக்கள் நிரூபித்துள்ளார்கள். உங்களின் ரோஷத்திற்கு எனது பாராட்டுகளையும் நன்றியையும் பணிவோடு தெரிவித்துக்கொள்கிறேன். ‘தவெக சார்பில் ஒரு நாயை நிறுத்தி வைத்துக்கூட வெற்றி பெறுவோம்’ எனத் திமிராகப் பேசுகிறார்கள். எவ்வளவு கேவலமான நினைப்பு! இதையெல்லாம் கேட்கவே அருவருப்பாகவும், அசிங்கமாகவும் இருக்கும். இளக்காரமாக நினைக்கிறார்கள்.
நாம் செய்தது ஒரே ஒரு தவறுதான். தேர்தலுக்கு முன்பு தவெகவை ஒரு பொருட்டாகவே நாம் நினைக்கவில்லை. அதுதான் நாம் செய்த ஒரே தவறு. கொள்கை எதிரியோடு மோதிவிட்டு, கோமாளிக் கூட்டத்தைக் கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டோம். எஸ்.ஐ.ஆர்., வாக்குரிமைப் பறிப்பு போன்றவற்றால் நாம் வெற்றியை இழந்தோம்.
சட்டமன்றத் தேர்தலில் தவெக அலை வீசியிருந்தால், 150 இடங்களை வென்றிருப்பார்கள். பெரும்பான்மை கிடைக்காமல் இருந்திருக்கமாட்டார்கள். திமுகவுக்கு மக்கள் வழங்கிய ஆதரவு ஓட்டுகளால்தான் தவெக ஆட்சி அமைந்திருக்கிறது. என்னதான் முதலமைச்சர் விஜய் ஹை பிச்சில் கத்தினாலும், இதுதான் உண்மை. இதனை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும். இந்த உண்மையை ஏற்க மனமில்லாமல்தான் குதிரைபேர அரசியலைச் செய்கிறார்.
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்ட இரண்டு எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்தால் அமைச்சர் பதவி கிடைக்கும் என அமைச்சரே சொல்கிறார். இந்த லட்சணத்தில்தான், குதிரை பேரம், கழுதை பேரம் இல்லை என முதலமைச்சர் பேசுகிறார். அவருக்குப் பொருத்தமான பெயரை அவரே வைத்துக்கொள்ளட்டும்.
பலவீனமாக ஆட்சியை நடத்தும் விஜய், என்ன செய்ய வேண்டும்? மக்களுக்குத் தேவையான நலத்திட்டங்கள் மூலம் மக்களின் மனதில் இடம் பிடிக்க வேண்டும். ஆனால், அதனைச் செய்யாமல் குதிரை பேரத்தில் குறியாக இருக்கிறார். புதிதாக ஆட்சிக்கு வந்திருக்கிறார்கள்; 6 மாதம் போகட்டும் என நினைத்தால், 1 மாதம்கூட தாங்கவில்லை. இது தூய சக்தி ஆட்சி அல்ல; துயர சக்தி ஆட்சி.
மதுராந்தகத்தில் சூட்டிங் எடுக்க வந்த முதலமைச்சர், ஒரு சீனில் டீ குடிக்கிறார். டீ குடித்துவிட்டு ரூ.500 கொடுத்து பந்தா பண்ணுகிறார். அவர் ஆட்சிக்கு வருவதற்கு முன்பு ரூ.10-க்கு விற்ற டீ, இன்று ரூ.15. இது அவருக்குத் தெரியுமா? மளிகைக் கடையில் விலைவாசி பற்றி கேளுங்க விஜய் ப்ரோ. விலைவாசியைச் சரிசெய்யாமல், ரீல்ஸ் எடுத்துக்கொண்டு அமைச்சர்கள் சுற்றுகிறார்கள்.
முதலமைச்சர் தொகுதியான பெரம்பூருக்குக்கூட ஒருமுறைதான் விஜய் சென்றிருக்கிறார். ஆனால், தோல்வி பயத்தில் தெருத்தெருவாக சுற்றுகிறார். பொதுவாக, இடைத்தேர்தல் என்றால் முதலமைச்சராக இருப்பவர்கள் பெரிதாக அலட்டிக்கொள்ள மாட்டார்கள். ஆனால் தனது ஆட்சி மீது நம்பிக்கை இல்லாமல்தான் விஜய் இடைத்தேர்தலில் அழைந்துவருகிறார்.
சட்டமன்றத் தேர்தலில் முழுமையாக 10 இடங்களில் கூட பிரச்சாரம் செய்யாதவர், வண்டியைவிட்டுக்கூட இறங்காதவருக்கு இன்று இருக்கும் நிலைமையைப் பார்த்தீர்களா? மனித நடமாட்டம் இல்லாத சந்துக்குள்கூட ரோடு ரோடாகச் சுற்றுகிறார். இப்போதுதான் அவர் கால்தரையில் படுகிறது. உங்கள் பயம் எனக்குப் பிடித்திருக்கிறது சி.எம். சார்.
விஜய் 5 நிமிடம் பேசினால் அகிலம் ஆடிவிடும் என்றார்கள். ஆனால், இன்று குட்டிக்கரணம் அடிக்கும் நிலைக்கு வந்துவிட்டார். ‘வாழ்க்கை ஒரு வட்டம் டா’ என பஞ்ச் டயலாக் பேசி இருப்பார். அது யாருக்குப் பொருந்துகிறதோ இல்லையோ, விஜய்க்கு சூப்பராகப் பொருந்துகிறது.
மதுராந்தகத்தில் பேசிய விஜய், ‘ஏன் நாங்க முதலமைச்சராக ஆகக்கூடாதா?’ எனக் கேட்டிருக்கிறார். அவர் முதலமைச்சராகிவிட்டார் என்பதை அவரே நம்பவில்லை போல. நீங்க முதலமைச்சர் மட்டுமல்ல; ஜோசியர் சொல்வது போல் பிரதமராகவும், ஏன் அமெரிக்க ஜனாதிபதியாகவும் ஆகுங்கள். உலகப் பிரச்சனைகளைக்கூடத் தீர்த்து வையுங்கள். அதற்கு முன்னாடி, உள்ளூர் கரண்ட் கட் பிரச்சனையைத் தீர்த்து வைங்க சி.எம். விஜய் ப்ரோ..
திமுக திட்டங்களைப் பட்டியலிட்டால், ‘சொந்தக் காசில் செய்தீர்களா? மக்கள் பணம் தானே?’ எனக் கேட்கிறார்கள். நான் கேட்பது, கரிகாலன் கல்லணை கட்டினார் என்றால், அவரே கல்லை எடுத்து கட்டினாரா? ராஜராஜ சோழன் தஞ்சைப் பெரிய கோவில் கட்டினார் எனப் படிக்கிறோம். பெருந்தலைவர் காமராஜர் அணைகளையும், பள்ளிக்கூடங்களையும் கட்டினார் எனப் படிக்கிறோம். இவர்கள் எல்லாம் சொந்தப் பணத்திலா செய்தார்கள்? இவர்களையும் இதே கேள்வி கேட்பீர்களா? ஏன், இப்போது தங்க மோதிரம் போட்டீர்களே... இது என்ன உங்கள் அப்பா வீட்டு காசா? இதற்குப் பதில் சொல்லுங்க சி.எம். சார்.
குறுக்குவழியில் ஆட்சியைக் கவிழ்க்க சதி என்கிறார்கள். தவெக ஆட்சியைக் கவிழ்க்க குறுக்குவழி தேவையில்லை. மக்களே நேர்வழியில் தவெக ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவருவார்கள். திமுக கூட்டணியில் சில எம்.எல்.ஏ.க்களையும், பாஜக கூட்டணியில் ஜெயித்த சில எம்.எல்.ஏ.க்களையும் விலைக்கு வாங்குவதுதான் குறுக்குவழி. திருட்டுவழி. தன்னைப் போல எல்லாரும் இருப்பார்கள் என முதலமைச்சர் விஜய் நினைக்கிறார்.
திமுகவினர் ஆளுங்கட்சியைப் போல இருப்பதாக விஜய் சொல்கிறார். அது உண்மைதான் ப்ரோ. அது திமுககாரனின் பிறவி கெத்து. ஒரு பிரச்சனை என்றால் அலுவலகத்தைப் பூட்டிவிட்டு, மொத்தக் கட்சியும் ஒருமாதம் தலைமறைவாக ஆனீர்களே? அப்படிப்பட்ட கோழைகள் நாங்கள் அல்ல.
கரூரில் 41 பேர் இறந்துபோன விஜய்க்கு, தலைமைப் பண்பே இல்லைன்னு உயர் நீதிமன்றமே திட்டிச்சு. உங்களைப் போன்ற திமுகவினரைப் பயந்தாங்கோலின்னு நினைச்சீங்களா? தோத்தாலும் ஜெயிச்சாலும் கெத்தா திமுக கரை வேஷ்டியைக் கட்டிக்கிட்டு, மக்களுக்காகப் பாடுபடுவோம். களத்தில் நிப்போம்.
மக்கள் பிரச்சனையைப் பேசினால், எல்லா மேடையிலும் ‘திமுக, திமுக, திமுக’ன்னு புலம்பினால் பிரச்சனை சரியாகாது. மக்கள் அதற்காக உங்களுக்கு வாக்களிக்கவில்லை. மக்களை அலட்சியமாக நினைத்தால், ஆணவத்தில் அழிவது உறுதி. தவெகவுக்கு அளிக்கும் வாக்கு, ஆணவத்திற்கும், அராஜகத்திற்கும், முறைகேட்டிற்கும், பணநாயகத்திற்கும் அளிக்கும் வாக்கு என்பதை மதுராந்தகம் மக்கள் உணர வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.






