
தமிழ்நாட்டின் சட்டம்-ஒழுங்கு நிலை குறித்துப் பத்திரிகையாளர்கள் பலரும் த.வெ.க அரசை விமரிசித்துக் கட்டுரைகள் எழுதி வருகிறார்கள்.
இந்நிலையில், டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளேட்டில் தமிழ்நாட்டின் சட்டம்-ஒழுங்கு நிலவரத்தை விமரிசித்து அதன் ஆசிரியர் அருண் ராம் விரிவான கட்டுரை ஒன்றை எழுதியிருந்தார்.
மேலும், இக்கட்டுரையில் எழுப்பப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளின் பட்டியல் குறித்துத் முதலமைச்சர் விஜய் ஏன் மௌனம் காக்கிறார் என்றும் கேள்வி எழுப்பியிருந்தார்.
இதனைத் தொடர்ந்து, பத்திரிகையாளர் அருண் ராம், த.வெ.க தலைவர் விஜய்யைச் சந்தித்தபோது எடுத்த புகைப்படம் அவரது சமூக வலைத்தளப் பக்கத்தில் இருந்து திடீரென நீக்கப்பட்டது பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கு அரசியல் தலைவர்கள் கடும் எதிர்ப்புகளைத் தெரிவித்து வருகிறார்கள்.
இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் "இது பாசிசமா, பாயாசமா?" எனக் கேள்வி எழுப்பி விமரிசித்துள்ளார்.
இது குறித்து மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூகவலைதள பதிவில்”டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளேட்டின் நாளேட்டின் அருண் ராம் அவர்கள் த.வெ.க.வினரின் குற்றப் பட்டியலைத் தொகுத்து, அதுகுறித்து முதலமைச்சர் விஜய் அவர்கள் வாய்திறக்க மறுப்பதை விமர்சித்துக் கட்டுரை எழுதியிருந்தார்.
உடனே, அவரது சமூக வலைத்தளப் பக்கத்தில் இருந்து பதிவுகள் நீக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்திருக்கிறார்.
யாருடைய நடவடிக்கையால் இது நிகழ்ந்திருக்கிறது? தமிழ்நாடு அரசின் சைபர் கிரைம் பிரிவுதான் இதன் பின்னணியில் இருக்கிறதா?
கடந்த ஆட்சிகளின்போதும் அவர் விமர்சனங்களை முன்வைத்திருக்கிறார். அப்போது நடக்காதது இப்போது மட்டும் எப்படி நடக்கிறது? யாருடைய உத்தரவினால் நடக்கிறது?
இந்தியாவிலேயே அதிகம் விற்பனையாகும் ஒரு நாளேட்டின் ஆசிரியருக்கே இதுதான் நிலையா?
விமர்சனங்களை ஏற்றுக்கொள்வோம் என்று கூறியவரால், ஊடகங்களில் வெளியான குற்றங்களைத் தொகுத்து வெளியிட்டதையே பொறுத்துக் கொள்ள முடியவில்லையா? என கேள்விகளை எழுப்பியுள்ளார்.






