
தமிழ்நாட்டில் த.வெ.க. ஆட்சி அமைந்தது முதல், ஒட்டுமொத்தக் கட்சி நிர்வாகிகளும் அரசு அலுவலகங்களை நோக்கிப் படையெடுத்து ரீல்ஸ் செய்து வருவது மாநிலம் முழுவதும் கண்டனங்களைப் பெற்று வருகிறது.
இந்த நிலையில், ரீல்ஸ் அட்டூழியத்தில் புதிய பாதையை உருவாக்கியுள்ளனர் தேனி மாவட்டத் த.வெ.க.வினர். தேனி மாவட்டத்தில் உள்ள அணையை நீர்வளத்துறை அதிகாரிகளுக்குத் தெரியாமல் திறந்து, மாபெரும் ஆபத்திற்கு வித்திட்டுள்ளனர்.
இதனைக் கண்டித்து தி.மு.க முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு வெளியிட்ட கண்டனக் குறிப்பு பின்வருமாறு,

“தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே உள்ள சோத்துப்பாறை அணையை அதிகாரிகளுக்குத் தெரியாமல் த.வெ.க.வினர் தன்னிச்சையாகத் திறந்திருக்கும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது.
நீர்வளத்துறை அதிகாரிக்ளுக்கே தெரியாமல், அணையின் கரையோரத்தில் வசிக்கும் மக்களுக்கோ, விவசாயிகளுக்கோ எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல், அணையைத் திறப்பது என்பது எத்தகைய ஆபத்தை விளைவிக்கும் பொறுப்பற்ற செயல் என்பதை அறியமாட்டார்களா?
அரசியல் விளம்பரத்திற்காக மேற்கொள்ளப்படும் இத்தகைய செயல்கள் ஆயிரக்கணக்கான மக்களின் உயிருக்கும் வாழ்வாதாரத்திற்கும் ஆபத்தை ஏற்படுத்தக்கூடியவை அல்லவா?
தமிழ்நாட்டில் உள்ள முக்கியமான அணை ஒன்றின் பாதுகாப்பு கேள்விக்கு உள்ளாக்கப்பட்டுள்ள இந்த அபாயகரமான நிலைக்குக் காரணமானவர்கள் மீது அரசு என்ன நடவடிக்கை எடுக்கப்போகின்றது?”






