தமிழ்நாடு

மேகதாது அணை - அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட த.வெ.க அரசுக்கு என்ன பயம்? : உதயநிதி ஸ்டாலின் கேள்வி!

மேகதாது அணை கட்டுவதிலிருந்து கர்நாடகாவைத் தடுக்க, இந்த அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என பேரவையில் உதயநிதி ஸ்டாலின் கேள்வி எழுப்பினார்.

மேகதாது அணை - அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட த.வெ.க அரசுக்கு என்ன பயம்? : உதயநிதி ஸ்டாலின் கேள்வி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தமிழ்நாடு சட்டப்பேரவையில் மேகதாது கவன ஈர்ப்புத் தீர்மானத்தில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேசியது வருமாறு:-

"தேர்தலின் போது முழு பயிர்க்கடன் தள்ளுபடி என்று தேர்தல் நேரத்தில் வாக்குறுதி அளித்துவிட்டு, இன்று ஆட்சிக்கு வந்துவிட்டு அரைகுறை தள்ளுபடி மட்டும் செய்வது ஏன்? காவிரியில் தண்ணீர் வராத காரணத்தினால், குறுவை சாகுபடி மொத்தமாக இல்லாமல் போயுள்ளது. இதற்கான தகுந்த நிவாரணத் தொகையை இந்த அரசு விவசாயிகளுக்கு எப்போது வழங்க உள்ளது? டெல்டா மாவட்டங்களை வறட்சி மாவட்டங்களாக அறிவித்து, அங்குள்ள விவசாயிகளுக்கு உரிய நிவாரணத்தை இந்த அரசு வழங்க வேண்டும்.

தவெக அரசு அமைந்ததிலிருந்து மேகதாது அணை கட்ட, இதுவரை இல்லாத தீவிரத்தைக் கர்நாடக அரசு காட்டி வருகிறது. மேகதாது விஷயத்தில் ஒரே ஒரு முறை மட்டும் பிரதமரிடம் நம் முதலமைச்சர் கோரிக்கை வைத்தார். அடுத்து, மேகதாது விவகாரத்தில் ஜூன் 19-ஆம் தேதி இந்தப் பேரவையில் அரசு ஒரு தீர்மானத்தைக் கொண்டு வந்தது. தீர்மானம் மட்டும் நிறைவேற்றினால் போதாது; அனைத்துக் கட்சித் தலைவர்களோடு சேர்ந்து டெல்லிக்குச் செல்ல வேண்டும் என்று எங்கள் கட்சித் தலைவர்களின் கருத்தை நான் இந்த அவையில் பதிவு செய்துள்ளேன்.இடைப்பட்ட காலத்தில் நாங்கள் சொன்னதை இந்த அரசு செய்யவில்லை. அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றோம். திமுக மட்டுமல்ல, தமிழ்நாட்டில் இருக்கும் அனைத்துக் கட்சிகளும் அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன.

கர்நாடகா முதலமைச்சரும் அந்த அரசும் மேகதாது விவகாரத்தில் மிகத் தீவிரமாகச் செயல்பட்டு வருகின்றனர்.ஜூன் 11-ஆம் தேதி ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனைக் கர்நாடகா முதலமைச்சர் சந்தித்து, மேகதாது அணை கட்ட நிதி உதவி வேண்டுமென்று கோரிக்கை வைத்துள்ளார்.ஜூன் 12-ஆம் தேதி ஒன்றிய நீர்வளத்துறை அமைச்சர் அவர்களைச் சந்தித்து, மேகதாது விவகாரத்தில் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார்.

ஜூலை 27-ஆம் தேதி அன்று நாடாளுமன்றத்தில் ஒன்றிய ஜல்சக்தி துறை இணை அமைச்சர், காவிரி கீழ்ப்படுகை மாநிலங்களின் ஒப்புதல் தேவையில்லை என்று தெரிவித்துள்ளார்.கர்நாடகாவைச் சேர்ந்த அனைத்துக் கட்சி எம்பிக்கள் (MP) கூட்டத்தை நடத்தியுள்ளார். கர்நாடக அமைச்சர் ராமலிங்க ரெட்டி, கர்நாடக அரசுத் தலைமை வழக்கறிஞர் எல்லோரும் மேகதாது விவகாரம் தொடர்பாக மாநில ஆய்வுக் கூட்டத்தை நடத்தியுள்ளனர்.

ஆகஸ்ட் 2-ஆம் தேதி அனைத்துக் கட்சிக் கூட்டம் நடத்த அழைப்பு விடுக்கப்பட்டு, ஐந்து முன்னாள் முதலமைச்சர்கள் உட்பட முக்கியத் தலைவர்கள் அனைவரும் அந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டனர். அதைத் தொடர்ந்து ஊடகங்களைச் சந்தித்து முதலமைச்சர் பேட்டியும் வழங்கியுள்ளார். கடந்த ஒரு மாதத்தில் அடுத்தடுத்துப் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளனர். மாநில நலன் என்று வந்தால், எப்படி அரசியல் வேறுபாடுகளைக் களைந்து அவர்கள் செயல்படுகிறார்களோ, அதுபோல நம்முடைய ஒற்றுமையைக் கர்நாடகாவிற்கும் ஒன்றிய அரசுக்கும் காட்ட வேண்டும் என்பதற்காகத்தான் அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகிறோம். விவசாயிகள் மீது அக்கறை உள்ள ஓர் அரசு இதையெல்லாம் கேட்காமலே தானாகச் செய்ய வேண்டும்.

தொடர்ந்து அழுத்தம் கொடுத்த பிறகு, தற்போது ஜூலை 28-ஆம் தேதி அன்று பிரதமருக்கு இரண்டாவது கடிதத்தை முதலமைச்சர் எழுதியுள்ளார். எங்களுடைய தலைவர் முதலமைச்சராக இருந்தபோது தமிழ்நாட்டின் பிரச்சினைகளுக்காகக் கடிதங்கள் எழுதியதை விமர்சித்து, தற்போதைய முதலமைச்சர் என்னென்ன பேசியுள்ளார் என்பதை ரீவைண்ட் செய்து பார்க்க வேண்டும்.

'ஸ்டாலின் அவர்கள் அப்பப்போ எழுந்து கடிதம் எழுதிவிட்டுத் தூங்கச் சென்றுவிடுவார்.''மானே, தேனே, பொன்மானே என்று இப்படி கடிதம் எழுதுவதெல்லாம் வேலைக்கு ஆகாது.'தமிழ்நாடு அரசு ஏன் அனைத்துக் கட்சிக் கூட்டத்தைத் தவிர்க்கிறது என்பதுதான் எங்களுடைய கேள்வி.இந்த அரசு ஒரு புதிய டெக்னிக்கை ரெகுலராகப் பின்பற்றி வருகிறது.ஏதாவது ஒன்று செய்வதற்கு முன்பு, அந்தச் செய்தியை இவர்களே வெளியிட்டுவிடுகிறார்கள்.'முதலமைச்சர் கர்நாடகா செல்கிறார்' என்று வேளாண்மைத்துறை அமைச்சர் தெரிவித்தார்; பின்பு, அவரே அதை மறுத்தார். பிறகு, இரண்டு அமைச்சர்கள் 'அதிகாரப்பூர்வமாக எந்த முடிவும் எடுக்கவில்லை' என்று கூறினார்கள். 'குழு செல்கிறது' என்றும் செய்திகளைப் பார்த்தோம்.

கடைசியாகக் கர்நாடகா முதலமைச்சர், 'தமிழ்நாடு முதலமைச்சர் இங்கு வர வேண்டாம்; நாங்கள் தண்ணீர் கொடுப்பதாக இல்லை' என்று தெரிவித்துவிட்டார்.அவர் சொன்னது உண்மையா, இல்லையா என்பது நமக்குத் தெரிய வேண்டும்.தமிழ்நாடு முதலமைச்சர் கர்நாடகா செல்வதாக இருந்தாரா? அப்படி இருந்தால் ஏன் செல்லவில்லை? அதன் தற்போதைய நிலை என்ன?டெல்டாவில் இருக்கும் அனைத்துத் தரப்பு விவசாயச் சங்கப் பிரதிநிதிகளையும் சந்தித்துப் பேச, முதலமைச்சர் ஒரு கூட்டத்தைக் கூட்ட வேண்டும்.குறுவையில் நஷ்டத்தைச் சந்தித்துள்ள விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும்.எங்களுடைய ஆட்சியில் 6.5 லட்சம் ஹெக்டேர் அளவிற்குப் பயிர்ச் சாகுபடி, குறுவைச் சாகுபடி நடைபெற்றது.

இந்த ஆட்சியில் 1.5 லட்சம் ஹெக்டேர் அளவிற்குத்தான் குறுவைச் சாகுபடி நடந்துள்ளது.சிறப்புத் தொகுப்பு என்று 134 கோடி ரூபாய் அறிவிக்கப்பட்டுள்ளது. அது எத்தனை பேருக்குக் கொடுக்கப்பட்டுள்ளது என்பதை அரசு அறிவிக்க வேண்டும்.மேகதாது அணை கட்டுவதிலிருந்து கர்நாடகாவைத் தடுக்க, இந்த அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என்பதைத் தெரிவிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

banner

Related Stories

Related Stories