
காவிரி ஆற்றின் குறுக்கே கர்நாடக அரசு மேகதாது என்ற இடத்தில் புதிய அணை கட்ட முயற்சித்து வருகிறது. இதற்குத் தமிழ்நாடு அரசு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இது தொடர்பான வழக்குகள் உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்று வருகின்றன. மேலும், கடந்த தி.மு.க. ஆட்சியிலும் நீதிமன்றம் சென்று நமக்கான உரிமைகளைப் பெறப் போராடி வந்தது.
ஆனால், தற்போது த.வெ.க. அரசு பேச்சுவார்த்தை நடத்தலாம் என்ற புதிய வழியைத் தேடியுள்ளது. இதற்குத் தி.மு.க. உள்ளிட்ட அனைத்து எதிர்க்கட்சிகளும் கடும் கண்டனங்களைப் பதிவு செய்து வருகின்றன. பேச்சுவார்த்தை நடத்துவதால் எந்தப் பயனும் கிடைக்காது, நீதிமன்றம் மூலமே நமது உரிமைகளை நிலைநாட்ட முடியும் என எதிர்க்கட்சிகள் கூறி வருகின்றன.
மேலும், அனைத்துக்கட்சிக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும் எனவும் வலியுறுத்துகின்றனர். ஆனால், முதலமைச்சர் விஜய், அனைத்துக்கட்சிக் கூட்டத்தைக் கூட்டி அவர்களின் நிலைப்பாடுகளைக் கேட்காமல், நேரடியாகக் கர்நாடகா சென்று பேச்சுவார்த்தை நடத்த முடிவெடுத்து அங்கு செல்லத் திட்டமிட்டுள்ளார்.
இந்நிலையில், காவிரியிலிருந்து தமிழ்நாட்டிற்குத் தண்ணீர் தர முடியாது என்பதுடன், தற்போது பதற்றமான சூழல் நிலவுவதால் முதலமைச்சர் விஜய் கர்நாடகா வர வேண்டாம் எனக் கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே. சிவக்குமார் கூறியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து, த.வெ.க. அரசு இனியும் இப்பிரச்சினையில் மௌனம் காக்காமல், உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தி.மு.க. துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி. தெரிவித்துள்ளார்
அவரின் சமூகவலைதள பதிவில், ”எல்லாவற்றிலும் திசைத்திருப்பும் அரசியலைச் செய்துவரும் தவெக அரசு, காவிரி பிரச்சனையைத் திசைத்திருப்ப அடுத்ததாக காவிரி ஆற்றங்கரையில் கூட “ஆய்வு” நடத்தலாம்.
மாநில உரிமைகளை அடகு வைத்து, விவசாயிகளின் வாழ்வாதாரத்தைக் கேள்விக்குறியாக்கிவிட்டு, விளம்பர மயக்கத்தில் தமிழ்நாட்டை வைத்திருக்கலாம் என்று நினைக்கிறதா தவெக அரசு?
டெல்டாவில் குறுவை சாகுபடி பாதிக்கப்பட்டதோடு, தற்போது பாதி தமிழ்நாட்டிற்கு குடிநீர்ப் பிரச்சினை வருமளவுக்கு காவிரி விவகாரம் சென்றுவிட்டது. த.வெ.க அரசு இனியும் இப்பிரச்சனையில் மௌனம் காக்காமல், உடனடியாக நடவடிக்கை வேண்டும்" என தெரிவித்துள்ளார்.






