தமிழ்நாடு

“விஜயால் முருங்கைக்காய் மட்டும்தான் பறிக்க முடியும்” : ஆர்.எஸ்.பாரதி விளாசல்!

அமைச்சர் கீர்த்தனா பள்ளிக்கூடக் குழந்தைகளைப் பிரச்சாரத்திற்கு அழைத்து வந்திருக்கிறார். அவர் மீது என்ன நடவடிக்கை எடுத்தீர்கள்?

“விஜயால் முருங்கைக்காய் மட்டும்தான் பறிக்க முடியும்” : ஆர்.எஸ்.பாரதி விளாசல்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.

அப்போது பேசிய ஆர்.எஸ்.பாரதி, "தமிழ்நாட்டின் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் மீது த.வெ.க அரசு அவசர அவசரமாக வழக்குப்பதிவு செய்துள்ளது. தோல்வி பயம் காரணமாக முதலமைச்சர் விஜய், தாராபுரம் தொகுதிக்கு இரண்டாவது நாளாக, இரண்டாவது முறை வீதி வீதியாகச் சென்று பரப்புரை மேற்கொண்டு வருகிறார். கடந்த காலங்களில் தொகுதிப் பக்கம் ஐந்து நிமிடம்கூட வராதவர், தற்போது டீ குடித்தார், அதைச் செய்தார், இதைச் செய்தார் என்று பெரிதாக விளம்பரம் தேடிக்கொண்டிருக்கிறார்.

தாராபுரத்தில் முதலமைச்சர் விஜய் மாட்டுவண்டியில் பயணம் செய்தார். அப்போது அவருடன் இருந்தது யார் தெரியுமா? அசோக் என்பவர் தான் அந்த மாட்டுவண்டியை ஓட்டுகிறார். அவர்தான் தேடப்படும் குற்றவாளி என்பது காவல்துறையினருக்குத் தெரியாதா? அனைத்துச் செய்தித் தொலைக்காட்சிகளிலும் இந்தத் காட்சிகள் வெளியாகியுள்ளன.

எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் மீது உடனடியாக வழக்குப்பதிவு செய்த நீங்கள், தேடப்படும் குற்றவாளி முதலமைச்சருடனேயே இருக்கும்போது, அவர் உங்கள் கண்களுக்குத் தெரியவில்லையா? சட்டம்-ஒழுங்கு எங்கே செல்கிறது? அப்போது முதலமைச்சரே குற்றவாளியைக் காப்பாற்றுகிறாரா?

அமைச்சர் கீர்த்தனா பள்ளிக்கூடக் குழந்தைகளைப் பிரச்சாரத்திற்கு அழைத்து வந்திருக்கிறார். அவர் மீது என்ன நடவடிக்கை எடுத்தீர்கள்? எதிர்க்கட்சித் தலைவரைப் பார்த்து ஏன் பயப்படுகிறீர்கள்? எதற்காக அவசர அவசரமாக வழக்குத் தொடருகிறீர்கள்?

கடந்த நான்கு மாதங்களாக இந்த அரசு பல கட்சி சட்டமன்ற உறுப்பினர்களை விலைக்குப் பேசி வாங்கியிருக்கிறது. ஆனால், திமுக சட்டமன்ற உறுப்பினர்களில் ஒருவரைக் கூட அவர்களால் தொட்டுப் பார்க்க முடியவில்லை. சட்டமன்ற உறுப்பினர்களைத்தான் பறிக்க முடியவில்லை; ஆனால், திமுக அவைத்தலைவர் வீட்டில் இருக்கின்ற முருங்கைக்காயைப் பறிக்கலாம் என்றுதான் பறித்திருக்கிறார்கள். திராவிட முன்னேற்றக் கழகத்தையோ, திமுக தொண்டனையோ விஜயாலும், அவரது சட்டத்தினாலும் ஒன்றும் செய்ய முடியாது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

திமுகவினர் மீதும், எங்கள் தலைவர் மீதும், உதயநிதி மீதும் அவசர அவசரமாக வழக்குப்போடும் நீங்கள், இவர்கள் மீது ஏன் வழக்குப்பதிவு செய்யவில்லை? திமுக என்றென்றும் வழக்குகளைப் பற்றிக் கவலைப்படாது; ஆனால், இதில் நியாயம் இருக்க வேண்டும்.

அதேபோல், திருப்பதி கொடை ஊர்வலத்திலும் பெண் காவலருக்குத் தொல்லை கொடுக்கப்பட்டுள்ளது. தற்போது 'சிங்கப்பெண் படை' எங்கே சென்றது? திமுக ஆட்சியை விடப் பருப்புக் கொள்முதலைக் குறைந்த விலையில் செய்திருக்கிறோம் எனக் கூறுகிறார்கள்.

ஆனால், பாமாயில் விலை லிட்டருக்கு 15 ரூபாய் உயர்ந்துள்ளது. அப்படியென்றால், இதில் எவ்வளவு பெரிய ஊழல் நடைபெற்றிருக்கும் என நினைத்துப் பாருங்கள்? இந்த லஞ்சப் பணத்தை எந்தக் கட்சிக்கு நிதியாக (Fund) கொடுத்தார்கள் என்பதையும் மக்கள் யோசிக்க வேண்டும்” என தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories