
சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க சட்டத்துறை இணைச் செயலாளர் பரந்தாமன் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்:-
அப்போது பேசிய பரந்தாமன்,"உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ராஜேந்திரன், செந்தில் செல்வன் ஆகிய இருவரும் தி.மு.க சார்பாகச் சட்டமன்ற உறுப்பினர்களாக இருக்கின்றனர். இவர்கள் இருவரும் அக்டோபர் 1-ஆம் தேதி லஞ்ச ஒழிப்புத்துறையில் ஒரு புகார் அளித்தனர். ஆனால், இவர்களைப் பதவியை ராஜினாமா செய்யச் சொல்லிச் சிலர் வற்புறுத்தியதை நாம் ஊடகங்களில் பார்த்திருக்கிறோம்.
ஆளும் த.வெ.க கட்சிக்குப் போதிய பெரும்பான்மை இல்லை. தி.மு.க கூட்டணியில் வெற்றி பெற்றவர்கள்தான் அவர்களுக்குத் தற்போது ஆதரவு அளித்து வருகின்றனர். அ.தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்கள் சிலரும்கூடத் தங்களது பதவியை ராஜினாமா செய்துவிட்டு அந்தக் கட்சியில் இணைந்துள்ளனர்.
மாநில லஞ்ச ஒழிப்புத்துறையில் சட்டமன்ற உறுப்பினர்கள் இருவரும் அளித்துள்ள புகாரில், 'முதலமைச்சர் விஜய், ஆதவ் அர்ஜுனா, ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ, துரை வைகோ ஆகிய நால்வரும் கூட்டுச் சதி செய்துள்ளனர். எங்களைப் பதவியை ராஜினாமா செய்ய வலியுறுத்தினார்கள். ராஜினாமா செய்துவிட்டு மீண்டும் இடைத்தேர்தலில் போட்டியிடுமாறு எங்களை வற்புறுத்தினார்கள்' என்று நேரடியாகக் குறிப்பிட்டுள்ளனர்.
'இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்கான செலவுகளை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்; உங்களை மீண்டும் வெற்றி பெறச் செய்கிறோம் என முதலமைச்சர் விஜய் சொல்லச் சொன்னார்' என்று ஆதவ் அர்ஜுனா கடந்த ஜூன் மாதம் 16-ஆம் தேதி வைகோவிடம் கூறியுள்ளார். இவர்கள் அரசியல் ரீதியாகத்தான் சந்தித்திருக்கிறார்கள். ஆனால், செய்திக் குறிப்பில் 'மரியாதை நிமித்தமான சந்திப்பு' எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
உங்கள் இருவரில் ஒருவருக்கு அமைச்சர் பதவி தருவதாக முதலமைச்சர் கூறியிருக்கிறார்' என வைகோ, இரண்டு சட்டமன்ற உறுப்பினர்களிடமும் கூறியுள்ளார். ஆனால், அதற்கு அந்த இரண்டு சட்டமன்ற உறுப்பினர்களும் மறுத்துவிட்டனர்.'ராஜினாமா செய்யாமல் ஏன் முரண்டு பிடிக்கிறீர்கள்? கடைசிவரை நீங்கள் கொத்தடிமையாகத்தான் இருப்பீர்களா?' என வைகோ, இரண்டு சட்டமன்ற உறுப்பினர்களிடமும் பேசியிருக்கிறார்.
இரண்டு சட்டமன்ற உறுப்பினர்களையும் ராஜினாமா செய்யச் சொல்லி வைகோ வற்புறுத்தியிருக்கிறார். அதன் பிறகு, அந்த இரண்டு சட்டமன்ற உறுப்பினர்களையும் திமுக விலைக்கு வாங்கிவிட்டது' எனத் துரை வைகோ கூறியிருக்கிறார்.
இதற்காக தி.மு.க சார்பாக ஆளுநரிடமும் பல்வேறு இடங்களிலும் புகார் அளித்திருக்கிறோம். வைகோ பேசியது குறித்து அக்டோபர் 1-ஆம் தேதி லஞ்ச ஒழிப்புத்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இரண்டு சட்டமன்ற உறுப்பினர்கள் 1-ஆம் தேதி அளித்த புகாரை உடனடியாக லஞ்ச ஒழிப்புத்துறை வழக்காகப் பதிவு செய்ய வேண்டும்.
முதலமைச்சர் பேசுகிறார், அதனை ஆதவ் அர்ஜுனா கொண்டு போய்ச் சேர்க்கிறார், வைகோ அதனை உள்வாங்கிக் கொள்கிறார், பிறகு வைகோ சட்டமன்ற உறுப்பினர்களிடம் பேசுகிறார்.
இந்த அரசு ஒரு குதிரைப்பேர அரசுதான்! சட்டமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்கி, இடைத்தேர்தலை வரவழைத்துத் தனக்கு உண்டான பலத்தைச் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்பதுதான் அவர்களின் எண்ணம்.
ஆட்சிக்கு வந்தால் ஊழலை ஒழித்துவிடுவேன் எனக் கூறிய இந்த அரசு, முழுக்க முழுக்க ஊழலில்தான் திளைத்துக்கொண்டிருக்கிறது. மற்ற கட்சியினர் வாக்காளர்களுக்குப் பணம் கொடுக்கிறார்கள் எனக் கூறும் முதலமைச்சர், இங்குச் சட்டமன்ற உறுப்பினர்களையே பணம் கொடுத்து வாங்குகிறார். முதலமைச்சரின் நாற்காலியின் நான்கு கால்களும் ஊழல் கால்கள்தான்! ஊழலை ஒழித்துவிட்டேன் என உத்தமரைப் போல விஜய் தம்பட்டம் அடித்துக்கொண்டிருக்கிறார்.
லஞ்ச ஒழிப்புத்துறை தற்போது நிர்மல்குமார் கையில்தான் இருக்கிறது. அ.தி.மு.க சார்பாகவும், டி.டி.வி தினகரன் சார்பாகவும், தி.மு.க சார்பாகவும் பல்வேறு புகார்கள் அளிக்கப்பட்டிருக்கின்றன. ஆனால், இதுவரை அவர்கள் இதனை வழக்காகப் பதிவு செய்யவில்லை. இதற்குமேலும் நீங்கள் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், தி.மு.க சட்டத்துறை தனது கடமையைச் செய்யும். ஒரு மிகப்பெரிய வரலாறு தி.மு.க சட்டத்துறைக்கு உண்டு; அதனை ஜெயலலிதா வழக்கில் நீங்கள் பார்த்திருப்பீர்கள்.
விஜய் ஜனநாயகத்தை ஒரு கேலிக்கூத்தாக்கியிருக்கிறார். இதையெல்லாம் தடுப்பதற்கு ஒரு கடுமையான சட்டம் கொண்டுவரப்பட வேண்டும். இது போன்ற ராஜினாமாக்களை ஊக்கப்படுத்தக் கூடாது. இது குறித்து நாங்கள் நாடாளுமன்றத்திலும் பேச இருக்கிறோம். முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்களை ஏ1 (A1) குற்றவாளியாக இந்த வழக்கில் பதிவு செய்ய வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார்.






