
சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கத்தில், இன்று (22-11-2026) தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் சார்பில் நடைபெற்ற நிகழ்வில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கலந்துகொண்டு, பெரியாரின் குடிஅரசு இதழ் முழுத்தொகுப்பை வெளியிட்டுச் சிறப்புரை ஆற்றினார்.
அதன் விவரம்:
இன்றைய நாள், திராவிட இயக்கத்தின் வரலாற்றில் மிக முக்கியமான நாளாக அமைந்திருக்கிறது! நம்முடைய தமிழினம் சுயமரியாதை உணர்வோடு - பகுத்தறிவு சிந்தனையோடு - இனமான உணர்வுபெற்று எழுச்சி பெற வேண்டும் என்று, பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் அவர்கள், நூறு ஆண்டுகளுக்கு முன்பு, குடிஅரசு இதழைத் தொடங்கினார். நூறு ஆண்டுகள் கழித்து - அதே இதழ், அதே வடிவத்தோடு 43 தொகுதிகளாக வெளிவருகிறது! இந்த வெளியீட்டு விழா என்பது, திராவிட இயக்கத்தைச் சேர்ந்த அத்தனை பேருக்கும், மகிழ்ச்சியையும் - பெருமையையும் தரக்கூடிய விழாவாக நடந்துகொண்டிருக்கிறது! இந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தித் தந்திருக்கும் நம்முடைய அருமை சகோதரர் கோவை இராமகிருட்டிணன் அவர்களுக்கு, நம் அனைவரின் சார்பாக, நான் நன்றியைத் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன்.
திரு. இராமகிருட்டிணன் அவர்களே... நீங்கள் செய்திருக்கும் சாதனை, சாதாரண சாதனையல்ல; வரலாற்றுச் சாதனை! இன்னும் சொல்ல வேண்டுமானால், வரலாற்றை நம் கண்முன் மீண்டும் கொண்டு வந்து நிறுத்தும் சாதனை! வரலாற்றை நாம் தொடர்ந்து படித்தும் - அதனை அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு எடுத்துச் சொல்லியும் வந்தால்தான், எதிர்காலத்தில், தடம் மாறிவிடாமல் புதிய வரலாற்றைப் படைக்க முடியும்! அப்படிப்பட்ட வரலாற்றைப் படைப்பதற்குத் தேவையான அறிவுக் களஞ்சியத்தைத்தான், கோவை இராமகிருட்டிணன் அவர்கள் நமக்குக் கொடுத்திருக்கிறார். தந்தை பெரியாரின் கொள்கைகளை விதைகளாக விதைத்து, இயக்க உணர்வை வளர்க்கும் பணியை, தனது வாழ்நாள் கடமையாகச் செய்துகொண்டு இருப்பவர்தான், நம்முடைய கோவை இராமகிருட்டிணன் அவர்கள்!
மிசா சட்டத்தில் கைதாகி, என்னைப் போன்றவர்கள் சென்னை சிறைச்சாலையில் ஓராண்டு இருந்தோம் என்று சொன்னால், திரு. இராமகிருட்டிணன் அவர்கள், கோவை சிறையில் ஓராண்டு காலம் இருந்தார். அதுமட்டுமல்ல, தடா சட்டத்தில் கைதாகி மூன்றாண்டு காலம் சிறைக்கொட்டடியில் இருந்தார். 15 முறைக்கு மேல் சிறை சென்ற வீரர் இவர்! இவர் பெற்ற அத்தனை விழுப்புண்களையும், தன்னுடைய கொள்கைப் பணிகளுக்கான உரமாக மாற்றிக்கொண்டு, போராட்ட வேகம் குறையாமல் - இன்று வரை தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்! இந்த உழைப்பும் - உணர்வும்தான், திராவிட இயக்கத் தீரர்களுக்கான அடையாளம்! அண்மையில், அவர் கீழே விழுந்து, நடக்க முடியாத நிலையில் இருந்தார். ஆனாலும், குடிஅரசு தொகுப்பைக் கொண்டுவர வேண்டும் என்று துடியாய்த் துடித்து, இன்று வெளியீட்டு விழாவைச் சிறப்பாக நடத்திக்கொண்டிருக்கிறார்.

கோவை இராமகிருட்டிணன் அவர்கள் எதைச் செய்தாலும் - அதில் ஒரு தனித்துவம் இருக்கும். தமிழ்நாட்டுக்கும் - தமிழினத்துக்கும் ஒரு ஆபத்து என்று செய்தி வந்தது என்றால், அதனுடைய ஃபாலோ-அப் செய்தியில், கோவை இராமகிருட்டிணன், போராட்டம் தொடங்கிவிட்டார் என்று செய்தி வரும்! நாள் குறிப்பது - போராட்டத்தை அறிவிப்பது எனக் காலம்தாழ்த்தாமல், உடனடியாக - அதிரடியாகப் போராட்டங்களை நடத்திவிடுவார். ஈழத்தமிழர் நலனுக்காக அவர் நடத்திய போராட்டங்கள் மிகப் பெரிய எழுச்சியை உருவாக்கியது! அவருடைய போராட்ட வழிமுறைகள், மக்களின் கவனத்தை ஈர்க்கும் விதமாக இருக்கும். இலங்கையில் தமிழர்கள் கொல்லப்பட்டபோது, காயக்கட்டு ஊர்வலம் நடத்தினார்.
தூக்குக் கயிறு அனுப்பும் போராட்டம் நடத்தினார். அவர் போராட்டங்களும் ஆர்ப்பாட்டங்களும் நடத்தாத நாளே இல்லை என்று சொல்லும் அளவுக்கு, களப்பணிகளைச் செய்பவர்! தந்தை பெரியாரின் 123-ஆவது பிறந்தநாளில், 123 பேரை, பெரியார் வேடத்தில் ஊர்வலமாக அழைத்து வந்தார். தலைவர் கலைஞரின் நூற்றாண்டு விழாவின்போது, கலைஞர் போல் வேடமிட்ட நூறு பேரை அழைத்து வந்தார். இப்படி, நம்முடைய கோவை இராமகிருட்டிணன் அவர்களின் பணிகளைப் பற்றி நிறைய சொல்ல முடியும்!
அவர் இவ்வளவு ஆற்றலோடு செயல்பட - அவருக்குத் தோழர்களாகக் கிடைத்திருக்கிற தொண்டர்கள்தான் காரணம்! கோவை இராமகிருட்டிணன் அவர்களுடைய சொற்களை, கட்டளையாக ஏற்றுக்கொண்டு, எந்தவித அடக்குமுறைகளுக்கும் எதிர்ப்புகளுக்கும் அஞ்சாமல், அதனை நிறைவேற்றக்கூடிய அவருடைய தொண்டர்கள் அத்தனை பேரையும் நான் இந்த நேரத்தில் வாழ்த்துகிறேன்! பாராட்டுகிறேன்!
அரசியல் பணி என்பது, ஆக்கப் பணி என்பதை உணர்ந்து, போராட்டக் களங்களுக்குத் தேவையான, கருத்தியல் உறுதியை விதைக்கும் நூல்களையும் கொண்டு வருகிறார். திராவிட இயக்க நூற்றாண்டு விழாவின்போது 100 புத்தகங்கள், குலக்கல்விப் போராட்டம், அரசியலமைப்புச் சட்ட எரிப்புப் போராட்டம், எம்.ஆர்.ராதா நாடகங்கள், பெரியார்-அம்பேத்கர் தொகுதிகள், அனைத்து சாதியினரும் அர்ச்சகரான வரலாறு என்று ஏராளமான கருவூலங்களை, தந்தை பெரியார் திராவிடர் கழகம் வழங்கி இருக்கிறது. இவற்றை உருவாக்கிய உடுமலை கருமலையப்பன், பொள்ளாச்சி பிரகாஷ், இரா.மனோகரன் உள்ளிட்ட தோழர்களுக்கும் என்னுடைய அன்பான வாழ்த்துகள், பாராட்டுகள்!

இந்த வரிசையில், இன்று குடிஅரசு இதழின் முழுத் தொகுப்பைக் கொண்டு வந்திருக்கிறார் நம்முடைய கோவை இராமகிருட்டிணன் அவர்கள்! தந்தை பெரியாரின் பேருழைப்பை அடுத்த தலைமுறைக்குக் கொண்டு செல்லும், இந்தக் கருவூலத்தை நான் வெளியிடுவதை எனக்குக் கிடைத்திருக்கும் மிகப்பெரும் பெருமையாக நான் கருதுகிறேன்!
தந்தை பெரியார் நடத்திய இதழை - பேரறிஞர் அண்ணாவும் தலைவர் கலைஞரும் பணியாற்றிய இதழை - தமிழ்நாட்டின் வரலாற்றையே மாற்றிய இதழை - தமிழர்களை, தமிழர்களாக உணரவைத்த இதழை – தமிழர்களின் பகுத்தறிவுக் கண்ணைத் திறந்த இதழை – இன்றைக்கும் ஆதிக்கத்துக்கு எதிரான எச்சரிக்கையாகக் கொண்டுவந்து வெளியிடுவது சாதாரணச் செயல் கிடையாது!
நூறு ஆண்டுகளுக்கு முன் தந்தை பெரியார் அவர்கள் எழுதியது, வெறும் எழுத்துகள் அல்ல; தமிழினத்தின் பாதையையே மாற்றிய சிந்தனைகள்! 1925-இல் தொடங்கப்பட்ட குடிஅரசு இதழ், 1940 வரைக்கும் வார இதழாக வெளிவந்தது. பிறகு, 1943-இலிருந்து 1949 வரைக்கும் வெளிவந்தது. குடிஅரசு இதழ் தடைசெய்யப்பட்டபோது, அதை – ‘புரட்சி’ என்ற பெயரில் பெரியார் நடத்தினார்.
அதையும் தடை செய்தார்கள். உடனே – ‘பகுத்தறிவு’ என்ற பெயரில் தொடர்ந்து தன்னுடைய அறிவுப் பணியைச் செய்தார், தந்தை பெரியார். தடைகளை உடைக்கப் பெயர்களை மாற்றினாரே தவிர, ஒருபோதும் தன்னுடைய கொள்கையை மாற்றிக்கொள்ளவில்லை! அதுதான் தந்தை பெரியார்! அதனால்தான் இன்றைக்கு ஒட்டுமொத்தத் தமிழினமும் தலைநிமிர்ந்து நிற்கிறது.
சுயமரியாதை இயக்கத்தையோ - குடிஅரசு இதழையோ தந்தை பெரியார் தொடங்காமல் இருந்திருந்தால், இன்றைக்குத் தமிழ்நாட்டின் நிலைமை என்னவாகியிருக்கும் என்று கொஞ்சம் நினைத்துப் பாருங்கள்... ஆரிய ஆதிக்கம் – சாதிய ஏற்றத் தாழ்வுகள் மற்றும் இழிவுகள் – மதவாதம் – பெண்ணடிமைத்தனம் – மூட நம்பிக்கைகள் – பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் என்று, இந்தச் சமுதாயத்தில் புரையோடிப் போயிருந்த அழுக்குகளுக்கு எதிராகப் பெரியார் கிளர்ந்தெழுந்தார்.

அதற்காக அவர் தன்னுடைய கையில் ஏந்திய அறிவாயுதம்தான், குடிஅரசு இதழ்! அதனால்தான், பலரும் நன்றியுணர்வோடு, “பெரியாரால் அரசியல் தெளிவு பெற்றோம்” - “பெரியாரால் உயர்ந்தோம்” - “பெரியாரால் வாழ்கிறோம்” - “பெரியாரால் வளர்கிறோம்” என்று பெருமையோடு சொல்கிறோம். பெரியாரியம் என்பது, சமத்துவமான எதிர்காலத்துக்கான வழிகாட்டி! ஒரு இனத்தையே உயர்த்திய உயரிய தத்துவம்! உயர்த்திய தலைவர் தந்தை பெரியார்! 95 வயதிலும் மூத்திரச் சட்டியைச் சுமந்துகொண்டு - தமிழ் சமுதாயத்தின் இனமான விடுதலைக்காக உழைத்தார்; பேசினார்; எழுதினார்; போராடினார்!
இந்த வரலாற்றை இன்றைய தலைமுறைக்கு மிக அழுத்தமாக சொல்லவேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம். ஒரு நூற்றாண்டு போராட்டத்தின் விளைவாக - இன்றைய சமுதாயம் கொஞ்சம் மேலே வந்திருக்கிறது. ஆனால், இந்த முன்னேற்றமே, நம்முடைய கடந்தகால வலியையும், வரலாற்றையும் அடுத்த தலைமுறைக்குக் கொண்டு சேர்ப்பதில் தொய்வை ஏற்படுத்தியிருக்கிறது.
அதை நாம் உணர்ந்து, நம்முடைய அடுத்தகட்டப் பணிகளை, இன்னும் கவனமாக - இன்னும் முனைப்பாக - செய்யவேண்டிய காலகட்டத்தில் இருக்கிறோம். “நாம் பட்ட கஷ்டம், நம்முடைய பிள்ளைகளுக்குத் தெரிய வேண்டாம்” என்று ஒரு தலைமுறை நினைத்ததால், அடுத்த தலைமுறை புதிய பிரச்சினைகளைச் சந்தித்துவிடக் கூடாது.
வரலாற்றை நாம் கொஞ்சம் திரும்பிப் பார்க்க வேண்டும்... நீதிக்கட்சி இல்லையென்றால், பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு இட ஒதுக்கீடு இல்லை! இடஒதுக்கீடு இல்லையென்றால், பல குடும்பங்களுக்கு வேலைவாய்ப்பும் - முன்னேற்றமும் இல்லை! குலக்கல்வித் திட்டத்தை பெரியாரும், அண்ணாவும் எதிர்க்காமல் போயிருந்தால் - கல்வி, நம்முடைய முன்னேற்றத்துக்கு அடிப்படையாக இருந்திருக்காது; அடிமைத்தனத்துக்கு ஆளாகியிருப்போம்! கல்விக்கான அடித்தளம் கிடைத்ததால்தான், பெருந்தலைவர் காமராசர் ஏராளமான பள்ளிகளை உருவாக்கினார். அதனால்தான், அன்றைய ஆனந்தவிகடன் பத்திரிகை, ‘காரணம் பெரியார் – காரியம் காமராசர்’ என்று தலையங்கம் எழுதியது.

பள்ளிக்கல்வியை வளர்த்தது கர்மவீரர் காமராசர் என்றால், கல்லூரிக் கல்வியைப் பரவலாக்கி, உயர்கல்வி படிப்புகளை விரிவுபடுத்தியது, தலைவர் கலைஞர் அவர்கள். ஏராளமான கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள், மருத்துவக் கல்லூரிகள் என்று உருவாக்கி, “கல்வியில் சிறந்த தமிழ்நாடாக” வளர்த்தெடுத்தது நம்முடைய முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் அவர்கள்.
படிப்பை முடித்த திறமையான நம்முடைய இளைஞர்களுக்கு, தொழில் வாய்ப்புகளை உருவாக்க வேண்டும் என்று, ஏராளமான தொழிற்சாலைகளையும், தொழில் நிறுவனங்களையும் நாம் கொண்டு வந்தோம். இவற்றின் பலனாகத்தான், நம்முடைய திராவிட மாடல் ஆட்சியில், தமிழ்நாடு எல்லாத் துறைகளிலும் சமூகக் குறியீடுகளிலும் முதன்மை மாநிலமாக உயர்ந்தது.
இந்தப் பயணத்துக்கு நாம் கொடுத்த உழைப்பு - எதிர்கொண்ட தடைகளை - இன்றைய இளைய தலைமுறைக்கு உணர்த்த வேண்டிய கடமை, நம் எல்லோருக்கும் இருக்கிறது. ஏனென்றால், கடந்து வந்த பாதை தெரியாத தலைமுறைக்கு, நாம் தவிர்த்த ஆபத்துகளும் தெரியவில்லை! வரலாற்றை மறந்த தலைமுறை, உரிமைகளையும் இழந்துவிடும்! இப்போது எனக்கு இருக்கிற வருத்தமெல்லாம், இத்தனை ஆண்டுகாலம் நாம் பாடுபட்டு உருவாக்கிய இவ்வளவு வளர்ச்சியும், ஆறே மாதத்தில் பின்னோக்கிப் போய்க்கொண்டிருக்கிறது.
கொடுமை என்னவென்றால், இன்றைக்கு ஆளுகிற கூட்டமும் பெரியாரை அவர்களின் கொள்கைத் தலைவர் என்று சொல்லிக்கொள்வதுதான்! பெரியாரின் எந்தக் கொள்கையைப் பற்றியும், இவர்கள் கட்சிக் கூட்டங்களில் பேசியது இல்லை. இன்னும் சொல்லப் போனால், இந்த ஆட்சிக்கே ஒரு ஜோசியர்தான் கொள்கைத் தலைவராகவும், வழிகாட்டியாகவும் இருக்கிறார். மூடநம்பிக்கையில் மூழ்கிப் போன இவர்கள், சும்மா ஃபேஷனுக்காகப் பெரியாரையும் - அம்பேத்கரையும் கொள்கைத் தலைவர் என்று சொல்லிக்கொண்டு, அவர்கள் கொள்கைகளுக்கு எதிராகச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
ஒரு விஷயத்தில் கூட, அவர்களால் உறுதியாக நிற்க முடியவில்லை, முடியவும் முடியாது! அறிவிக்கிறார்கள், அதை இவர்களே இரத்து செய்கிறார்கள். எல்லாவற்றிலும் U-Turn-தான்! வெளிப்படைத்தன்மை என்பது மருந்துக்குக் கூட இல்லை! இவர்களே ஒரு செய்தியைக் கசிய விடுகிறார்கள். அதற்கு எதிர்ப்பு கிளம்பினால், இவர்களே அதை உண்மை இல்லை என்று மறுக்கிறார்கள். தொழில்துறைக்கு வழிகாட்ட வேண்டிய ‘கைடன்ஸ்’ என்ற அமைப்பு கூட இன்றைக்கு வழிதெரியாமல் தள்ளாட்டத்தில் இருக்கிறது. இவர்களால், பக்கத்து மாநிலங்கள் எல்லாம் நம்மைக் காமெடியன்களாகப் பார்க்கிறது! எந்தத் துறையை எடுத்துக்கொண்டாலும், இந்த ஆட்சியில் தமிழ்நாடு பின்னோக்கித்தான் போய்க்கொண்டிருக்கிறது.

இந்தச் சீர்கேட்டைத்தான் இரத்தினச் சுருக்கமாக, சில நாட்களுக்கு முன்னால் ஒரே வரியில் சொன்னேன், “இந்த ஆட்சியில், மின்வெட்டுக்கும் அரிவாள் வெட்டுக்கும் நடுவில்தான் போட்டியே”. அது, அடுத்த கொஞ்ச நாளிலேயே அப்கிரேடு ஆகி, “போதைப் பொருளுக்கும் - பாலியல் வன்கொடுமைக்கும் நடுவில்தான் போட்டியே” என்றானது. இப்போது அது எந்த அளவுக்கு இருக்கிறது என்றால், “அரசாங்கத்தில் உயர்பொறுப்பில் இருக்கிற அதிகாரிகளுக்குத் தொல்லை கொடுப்பதில், அமைச்சர்களுக்கும் - எம்.எல்.ஏ.க்களுக்கும் நடுவில்தான் போட்டியே” என்ற நிலைமைக்கு வந்துவிட்டது. அடுத்து என்ன வரும் என்று தெரியவில்லை! த.வெ.க. அரசின் கிரைம் ரேட்டைப் பார்த்து, மக்கள் கிறுகிறுத்துப் போயிருக்கிறார்கள்.
நடுரோட்டில் பட்டப்பகலில் இரட்டைக் கொலை, ஆளுங்கட்சிக்காரர்களே பாலியல் வன்கொடுமைகள் செய்வது எனப் பெண்கள் சுதந்திரமாக நடமாடவே முடியாத பயப்படுகிற சூழ்நிலை வந்துவிட்டது. இந்தியாவிலேயே மிகப் பெரிய அளவிலான போதைக் கடத்தல்கள் தமிழ்நாட்டில்தான் இன்றைக்குப் பிடிபடுகிறது. ஆனால், அதைப் பிடிப்பது மாநிலக் காவல்துறை இல்லை, ஒன்றிய அரசின் துறைகள்! ஏன் இவர்களால் பிடிக்க முடியவில்லை? குட்கா மாஜிக்களையும், மெத் பூபாலன்களையும் கட்சியில் வைத்துக்கொண்டு இருந்தால், எப்படி இவர்களால் போதைக் கும்பலைப் பிடிக்க முடியும்?
நம்முடைய ஆட்சியில், தமிழ்நாட்டு மக்களுக்குப் பணவீக்கத்தின் பாதிப்பே தெரியாத நிலை இருந்தது. ஆனால் இன்றைக்கு, வெங்காயம் தக்காளி கூட வாங்க முடியாத அளவுக்கு விலைவாசி ஏறிப்போய்விட்டது. சாப்பிடாமல் இருந்தால்தான் மயக்கம் வரும் என்று நினைத்தால், இன்றைக்கு அரிசி விலையைக் கேட்டாலே மயக்கம் வருகிறது. இதைப் பற்றியெல்லாம் மக்களுக்கு நம்பிக்கை ஊட்டுகிற மாதிரி முதலமைச்சர் வாயைத் திறந்து எதுவும் பேசுகிறாரா, இல்லை!
இது மட்டுமா? கர்நாடக முதலமைச்சர் - தமிழ்நாட்டின் உரிமையை மதிக்காமல், “மேகதாது அணையைக் கட்டியே தீருவோம்” என்று சவால் விடுகிறார். அதைக் கண்டிக்காத நம்முடைய முதலமைச்சர் என்ன செய்கிறார் தெரியுமா? மாநில உரிமைகளை நிலைநாட்ட, நீதியரசர் குரியன் ஜோசப் – அசோக் வரதன் ஷெட்டி IAS - பேராசிரியர் நாகநாதன் ஆகியோரைக் கொண்டு நாம் அமைத்த ஒரு குழுவை அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு கலைத்துவிட்டார். இந்தியா முழுக்க ஊடகங்கள் இதை விமர்சிக்கிறார்கள். அந்தச் செய்தியெல்லாம், இந்த முதலமைச்சருக்குத் தெரிந்திருக்குமா என்று கூட நமக்குத் தெரியவில்லை.

“ஆறே மாசம் – எல்லாமே நாசம்” என்று சொல்கிற மாதிரிதான் த.வெ.க. ஆட்சி நடக்கிறது. த.வெ.க என்ற கட்சி, ‘அரசியல் பிணி’ மட்டுமல்ல; அது ஒரு ‘சமூகப் பிணி’! அதை எதிர்த்து, அரசியல் களத்தில் நாங்கள் போராடுகிற மாதிரி, உங்களைப் போன்ற கருஞ்சட்டைப் படை, பிரச்சாரக் களத்தில் முன்னின்று, மக்களுக்கு இதனுடைய தீமைகளைப் புரியவைக்க வேண்டும். நம்முடைய முன் இருக்கும் கடமையெல்லாம், ஏற்கெனவே தந்தை பெரியார் சொன்னதுதான்... “தமிழா! விழிப்புணர்வு கொள்” என்று தட்டியெழுப்ப வேண்டும்!
“தமிழா! இனஉணர்வு கொள்” என்று விழித்தெழ வைக்க வேண்டும்! “மானமும் அறிவும் மனிதர்க்கு அழகு” என்பதை மீண்டும் வலியுறுத்த வேண்டும்! இதை வரலாற்றுக் கடமையாக நினைத்து நாம் செய்ய வேண்டும். மாபெரும் தலைவர்கள், சமூகச் சீர்திருத்தவாதிகள் போராடி உருவாக்கிய இந்த நவீன தமிழ்நாட்டை யாரும் நாசமாக்கிவிடாமல், நாம்தான் காக்க வேண்டும். அதற்கான அறிவாயுதம்தான், குடிஅரசு இதழ் தொகுப்பு! அந்த அறிவாயுதத்தை, அடுத்த தலைமுறையிடம் ஒப்படைக்கிற நிகழ்வுதான் இந்த நிகழ்ச்சி!
பெரியார் ஏந்திய அறிவாயுதத்தை, தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வோம்! பகுத்தறிவை வளர்ப்போம்! சுயமரியாதையைக் காப்போம்! சமூகநீதியை நிலைநாட்டுவோம்! நவீன தமிழ்நாட்டை இன்னும் உயர்த்துவோம்! அதற்கு இந்த விழாவின் மூலம் உறுதியேற்போம்.






