
முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அவர்கள் இன்று (13.03.2026) தலைமைச் செயலகத்திலிருந்து காணொலிக் காட்சி வாயிலாக தூத்துக்குடி மாவட்டம், உடன்குடியில், தமிழ்நாடு மின்உற்பத்தி கழகம் (TNPGCL) சார்பில், 13,077 கோடி ரூபாய் செலவில் புதியதாக நிறுவப்பட்டுள்ள 2x660 மெகாவாட் திறன் கொண்ட மிக உய்ய (Super Critical) அனல் மின் நிலையத்தின் அலகு-1னை திறந்து வைத்து, மின்சார உற்பத்தினை தொடங்கி வைத்தார்.
தமிழ்நாட்டில் மின்உற்பத்தி திறனை அதிகரித்து, மாநிலத்தின் வளர்ச்சிக்கும், தொழில்துறை முன்னேற்றத்திற்கும் தேவையான நம்பகமான மின்சாரத்தை வழங்கும் நோக்கில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அவர்கள் தலைமையிலான அரசால் மின் திட்டங்கள் அனைத்தும் போர்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு உடனடியாக இயக்கத்திற்கு கொண்டு வர தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது.
மாநிலத்தின் வலுவான எரிசக்தி கட்டமைப்பினை கருத்தில் கொண்டு இவ்வரசு பல்வேறு முன்னோடி முயற்சிகளை எடுத்ததன் விளைவாக தமிழ்நாட்டில் அனல் மின் நிலையங்கள், எரிவாயு மின் நிலையங்கள் மற்றும் மரபுசார எரிசக்தி ஆற்றல் மூலங்களான காற்றாலை மின் உற்பத்தி, சூரிய ஒளி மின் உற்பத்தி ஆகியவற்றின் வாயிலாக மின் உற்பத்தியை பெருக்குவதற்க்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதன் விளைவாக, தமிழ்நாடு எரிசக்தித் துறையில் முன்னோடி மாநிலமாக திகழ்கிறது. அண்மையில் வடசென்னை அனல் மின் நிலையம்–III ல் மின் உற்பத்தி அதன் முழு கொள்ளளவான 800 மெகாவாட் உற்பத்தி செய்யப்பட்டு வணிக பயன்பாட்டிற்க்கு கொண்டுவரப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இதன் அடுத்த கட்டமாக தூத்துக்குடி மாவட்டம், உடன்குடியில் 13,077 கோடி ரூபாய் செலவில் பாரத மிகுமின் நிறுவனம் (BHEL) வாயிலாக நிறுவப்பட்டுள்ள 2X660 மெகாவாட் மிக உய்ய அனல் மின் நிலையத்தின் அலகு 1-ன் பணிகள் முடிக்கப்பட்டு, பல்வேறு கட்ட சோதனை ஓட்டங்களுக்கு பிறகு, தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் இன்றைய தினம் காணொலி காட்சி வாயிலாக மின் உற்பத்தி தொடங்கி வைக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்க்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

உடன்குடி மிக உய்ய அனல் மின் நிலையத்தின் சிறப்பு அம்சங்கள்:
மிக உய்ய நிலை வெப்ப தொழில்நுட்பத்தை பயன்படுத்தி நிறுவப்படும் அனல் மின்நிலைய திட்டங்கள் பிற அனல் மின் திட்டங்களை ஒப்பிடும் போது, 5 முதல் 6 சதவீதம் வரை அதிக திறன்மிக்கது ஆகும். எனவே, இதன்மூலம் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்திற்க்கு எரிபொருள் செலவு குறைவதுடன் மின் உற்பத்தியினை தொடங்குவதற்கு குறைவான நேரமே தேவைப்படும்.
இந்த அனல் மின் நிலையத்திற்க்கு தேவையான நிலக்கரி தமிழ்நாட்டின் தனித்துவமான கடலோர துறைமுகத்துடன் அமைக்கப்பட்ட முதல் திட்டமாக செயல்படுத்தப்பட்டுள்ளது. கடலோரத்தில் பிரத்யேகமாக 9 கிலோ மீட்டர் தூரத்தில் அமைக்கப்பட்ட துறைமுகத்தின் நிலக்கரி இறங்குதளங்கள் மூலம் இரண்டு முழுவதும் மூடிய அமைப்புள்ள கன்வேயர் பெல்ட் வாயிலாக மணிக்கு தலா 2000 டன் நிலக்கரியை நேரடியாக மின் நிலையத்திற்கு கொண்டு செல்லும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளதால் நிலக்கரி போக்குவரத்து செலவு குறைந்து, சுற்றுச்சூழல் பாதுகாப்புடன் கூடிய எரிபொருள் விநியோகம் சீராக நடைபெற உதவுகிறது.
இத்திட்டத்தின் மூலம் ஒரு யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்ய நிலக்கரி நுகர்வு 0.50 முதல் 0.55 கிலோ கிராம் அளவு மட்டுமே தேவைப்படுவதால், கார்பன்-டை-ஆக்சைடு உமிழ்வு 25 முதல் 30 சதவீதம் வரை குறைந்து சுற்றுச்சூழலுக்கு உகந்த திட்டமாகவும் உள்ளது.
இம்மின் நிலையத்திற்கு தேவையான குளிரூட்டும் கோபுரம், பாய்லர், பணியாளர் குடியிருப்புகள் உள்ளிட்ட அனைத்து தண்ணீர் தேவைகளுக்கும் அனல் மின்நிலைய வளாகத்தில் நிறுவப்பட்டுள்ள நாளொன்றுக்கு 13 மில்லியன் லிட்டர் கொள்ளவுள்ள கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் வாயிலாகவே பெறப்படுவதால் நிலத்தடி நீர் மற்றும் தாமிரபரணி நீர் பயன்படுத்த வேண்டிய அவசியம் இல்லை.

இந்த மின் நிலையத்தில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தை, 400 கிலோ வோல்ட் வளிம காப்பு துணைமின் நிலையம் வாயிலாக மின் கட்டமைப்புடன் இணைக்கப்பட்டு மின் பகிர்மானம் செய்யப்படும். இத்திட்டத்தின் மூலம், மாநிலத்தின் மின் உற்பத்தித் திறன் மேலும் அதிகரித்து, மாநிலத்தின் மின்சாரத் தேவையினை பூர்த்தி செய்ய துணைபுரிவதுடன், வெளிசந்தையில் மின் கொள்முதல் செய்வது குறைக்கப்படும். இதனால் மின்சார வாரியத்தின் நிதி நிலை மேம்படுவதுடன் நம் மாநிலத்தின் சமூக பொருளாதார வளர்ச்சிக்கும் முக்கிய பங்களிக்கும்.
உடன்குடி மின் திட்ட வளாகத்தில் சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்காக ஒன்றரை இலட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டம் தொடங்கப்பட்டு இதுவரை 52 ஆயிரம் மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த திட்டம் செயல்பாட்டுக்கு வந்ததன் மூலம், தமிழ்நாடு 2030-க்குள் ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதாரம் வளர்ச்சி என்ற இலக்கினை அடைய ஏதுவாகவும், தென் தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சிக்கும், மின்சார தேவைக்கும் முக்கிய பங்களிப்பை அளிக்கும். மின்உற்பத்தி திறன் மேலும் வலுப்பெற்று, மின்விநியோகம் மேம்படுவதுடன் தொழில், வேளாண்மை மற்றும் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு தேவையான மின்சாரம் நிலையான முறையில் வழங்கப்படுவதற்கு பேருதவியாக இருக்கும்.







