தமிழ்நாடு

திராவிட மாடல் ஆட்சியில் 25 இலட்சம் பேருக்கு பட்டா! : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தகவல்!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நடைபெற்ற விழாவில் 24,910 பயனாளிகளுக்கு ரூ.116.24 கோடி மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கி துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆற்றிய உரை.

திராவிட மாடல் ஆட்சியில் 25 இலட்சம் பேருக்கு பட்டா! : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தகவல்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Chennamani
Updated on

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில்  நடைபெற்ற விழாவில் ரூ.34 கோடி மதிப்பீட்டில் முடிவுற்ற 758 திட்டப்பணிகளை திறந்து வைத்து, 24,910 பயனாளிகளுக்கு ரூ.116.24 கோடி மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கி துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆற்றிய உரை, 

உங்களுடைய அன்பிற்கும், வரவேற்புக்கும் முதலில் என்னுடைய நன்றியை நான் தெரிவித்துக் கொள்கின்றேன். கள்ளக்குறிச்சி மாவட்டம் என்று சொன்னாலே உழைக்கின்ற மக்கள் அதிகம் இருக்கக்கூடிய மாவட்டம். உங்களுடைய அன்புக்கும், பாசத்துக்கும் வேறு எதுவுமே ஈடாகாது. அப்படிப்பட்ட உங்களையெல்லாம் சந்திக்கின்ற வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்திருக்கக்கூடிய சட்டமன்ற உறுப்பினர்கள் அண்ணன் உதயசூரியன் அவர்களுக்கும், சகோதரர் வசந்தம் கார்த்திகேயன் அவர்களுக்கும் என்னுடைய பாராட்டுக்களையும், வாழ்த்துகளையும், நன்றியையும் நான் தெரிவித்துக் கொள்கின்றேன்.

அதே போல, மிகக்குறுகிய காலத்தில் 2 நாட்களில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சி இந்த நிகழ்ச்சி. 2 நாட்களில் இவ்வளவு சிறப்பாக இவ்வளவு பயனாளிகளுக்கு இவ்வளவு திட்டங்களை ஏற்பாடு செய்துள்ள உங்களுடைய மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களுக்கும், மாவட்ட நிர்வாகத்திற்கும் மீண்டும் பயனாளிகள் சார்பாக என்னுடைய நன்றியையும், வாழ்த்துகளையும் நான் தெரிவித்துக் கொள்கின்றேன்.

இங்கு திரண்டு இருக்கக்கூடிய மக்கள் உங்களுடைய அன்பு, மகிழ்ச்சி தான் நம்முடைய திராவிட மாடல் ஆட்சியினுடைய வெற்றிக்கு ஒரே எடுத்துக்காட்டு, ஒரே சாட்சி.

இன்றைக்கு இந்த அரங்கத்தில், இந்த நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கில் பொதுமக்கள் பயனாளிகளாக, பங்கேற்பாளர்களாக வந்திருக்கின்றீர்கள். அதுவும் இந்த அரங்கத்தில் ஆண்களை விட பெண்கள் அதிக அளவில் வந்திருக்கின்றீர்கள். அதனால் தான் இன்றைக்கு தமிழ்நாடு என்று சொன்னாலே மகளிர் நாடு என்று ஒட்டு மொத்த இந்தியாவும் பாராட்டி பேசுகிறது. அந்த அளவிற்கு நம்முடைய முதலமைச்சர் அவர்கள் மகளிருக்கான திட்டங்களை ஒவ்வொன்றையும் பார்த்து, பார்த்து செய்து கொண்டிருக்கிறார்.

ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் முதலமைச்சராக, அவர் போட்ட முதல் கையெழுத்து மகளிருக்கான விடியல் பயணத்திட்டம். உங்களுக்கான கையெழுத்து. இந்த 5 வருடங்களில் விடியல் பயணத்திட்டத்தில் 920 கோடி பயணங்களை மகளிர் நீங்கள் மேற்கொண்டுள்ளீர்கள். அதிலும் இந்த கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மட்டும் சுமார் 12 கோடி பயணங்களை மகளிர் நீங்கள் மேற்கொண்டுள்ளீர்கள். 

அடுத்து, பள்ளிக்கூடம் செல்கின்ற பிள்ளைகளுக்கு, குறிப்பாக தாய்மார்களுக்கு முதலமைச்சரின் காலை உணவுத்திட்டம் மிகப் பெரிய அளவில் உதவி செய்திருக்கிறது. இன்றைக்கு இந்த திட்டத்தை பல்வேறு மாநிலங்கள், இன்னும் பெருமையாக சொல்ல வேண்டும் என்றால் பல்வேறு நாடுகள் இலங்கை, கனடா மாதிரியான வெளிநாடுகளும் இன்றைக்கு இந்த திட்டத்தை பின்பற்ற ஆரம்பித்திருக்கிறார்கள்.

ஒவ்வொரு நாளும் முதலமைச்சர் காலை உணவுத் திட்டத்தில் 22 இலட்சம் குழந்தைகள் பயன்பெற்று வருகிறார்கள். காலையில் குழந்தைகள் பள்ளிக்கூடத்திற்கு சென்றால், முதலில் தரமான உணவு, அதன்பிறகு தரமான கல்வி அவர்களுக்கு கொடுக்கப்படுகிறது. இந்த கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மட்டும் ஒவ்வொரு நாளும் சுமார் 47 ஆயிரம் குழந்தைகளுக்கு இந்த திட்டம் சென்றடைகிறது.

அரசுப்பள்ளியில் படிக்கக்கூடிய மாணவர்கள், பெண் பிள்ளைகளாக இருந்தால் புதுமைப்பெண் திட்டம். ஆண்பிள்ளைகளாக இருந்தால் தமிழ்ப்புதல்வன் திட்டம் என ஒவ்வொரு மாதம் கல்வி ஊக்கத்தொகையை நம்முடைய முதலமைச்சர் அவர்கள் வழங்கி வருகிறார்கள். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மட்டும், இந்த இரண்டு திட்டத்தின் மூலமாக 27 ஆயிரம் மாணவ, மாணவிகள் பயன்பெற்றிருக்கிறார்கள்.

அது மட்டுமல்ல, நான் முதல்வன் திட்டத்தின் மூலமாக பல்வேறு திறன் பயிற்சிகள் மேற்கொண்டதற்காக 49 லட்சம் திறன் மேம்பாட்டு பயிற்சிகளுக்கான சான்றிதழ்கள் (Skill Certificates) வழங்கப்பட்டிருக்கிறது. இன்றைக்கு மாநிலம் முழுவதும் 10 லட்சம் மாணவ, மாணவிகளுக்கு இலவச லேப்டாப் திட்டத்தையும் செயல்படுத்தி, நம்முடைய முதலமைச்சர் அவர்கள் கொடுத்திருக்கிறார்.

திராவிட மாடல் ஆட்சியில் 25 இலட்சம் பேருக்கு பட்டா! : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தகவல்!

இவை எல்லாவற்றிற்கும் மேல் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் மூலமாக இன்றைக்கு ஒரு கோடியே 32 லட்சம் மகளிருக்கு மாதம் 1,000 ரூபாய் வழங்கப்படுகின்றது. இந்த திட்டத்தை, வரப்போகின்ற தேர்தலை காரணம் காட்டி எப்படியாவது நிறுத்த வேண்டும் என்று சிலர் திட்டம் போட்டார்கள்.

ஆனால், நம்முடைய முதலமைச்சர் அவர்கள் அந்த சூழ்ச்சிகளையெல்லாம் உடைத்தெறிந்து, இன்றைக்கு 5,000 ஆயிரம் ரூபாய் உரிமைத் தொகையை எல்லாருடைய கணக்கிலும் வரவுவைத்தார்கள். அதுமட்டுமல்ல திராவிட மாடல் 2.0 ஆட்சி அமைந்த பிறகு மகளிர் உரிமைத் தொகை 1,000 ரூபாயை உயர்த்தி 2,000 ரூபாயாக கொடுக்கப்படும் என்ற உறுதிமொழியையும் கூறியிருக்கிறார் நம்முடைய முதலமைச்சர் அவர்கள்.

இன்றைக்கு இந்த கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கும் ஏராளமான திட்டங்களை நம்முடைய அரசு செய்து கொடுத்திருக்கிறது. உளுந்தூர்பேட்டை தாலுகாவில் சுமார் 200 ஏக்கரில் சிப்காட் தொழிற்பேட்டை பூங்கா அமைக்கப்பட்டிருக்கிறது. அங்கு 2 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு முதலீடு செய்யப்பட்டிருக்கிறது. இந்த சிப்காட் மூலமாக 2 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு வசதிகளை ஏற்படுத்தி கொடுத்திருக்கின்றோம்.

கள்ளக்குறிச்சி – திருவண்ணாமலை சாலை, திருவண்ணாமலை – தியாகதுருகம் இணைப்பு சாலை, கள்ளக்குறிச்சி – கூத்தாக்குடி சாலை, திருக்கோவிலூர் – ஆசனூர் சாலை ஆகிய சாலைகள் எல்லாம் இன்றைக்கு மேம்படுத்தப்பட்டு நான்கு வழிச்சாலைகளாக உயர்த்தப்பட்டிருக்கிறது. இதற்கு மட்டும் 560 கோடி ரூபாய் நம்முடைய அரசு ஒதுக்கி இருக்கிறது.

கள்ளக்குறிச்சி நகராட்சியில் பாதாள சாக்கடைத் திட்டம் 168 கோடி ரூபாய் மதிப்பீட்டில் செயல்படுத்தப்பட்டிருக்கிறது.  கல்வராயன் மலை பகுதியில் இருக்கக்கூடிய 22 கிராம மக்கள் பயனடைகின்ற வகையில் 100 கோடி ரூபாய் மதிப்பில் வெள்ளிமலை – சின்னத்திருப்பதி இடையே 32  கிலோமீட்டர் தூரத்திற்கு சாலை வசதிகள் மேம்படுத்தப்பட்டிருக்கிறது. கள்ளக்குறிச்சியில் 16 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய பேருந்து நிலையம் திறக்கப்பட்டிருக்கிறது. 15 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய மாவட்ட விளையாட்டு வளாகம் கட்டப்பட்டு வருகிறது.

இப்படி கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு ஏராளமான திட்டங்களை நம்முடைய அரசு செய்து கொடுத்திருக்கிறது. இப்படியான திட்டங்கள் மூலமாகத்தான் இன்றைக்கு இந்தியாவிலேயே நம்முடைய தமிழ்நாடு வளர்ந்து வருகின்ற மாநிலங்களில் முதல் மாநிலமாக, 11.19 சதவீதம் வளர்ச்சியோடு இன்றைக்கு இந்தியாவிலேயே தலைசிறந்த மாநிலமாக நம்முடைய தமிழ்நாடு இடம் பிடித்திருக்கிறது. இந்த வளர்ச்சியை இன்னும் அடுத்தக்கட்டத்திற்கு எடுத்துச் செல்ல வேண்டும் என்றுதான் நம்முடைய முதலமைச்சர் அவர்கள் பல்வேறு நலத்திட்டங்களை  வழங்கி வருகிறார்.

இன்றைக்கு இங்கே ஆயிரக்கணக்கில் சுய குழுக்களைச் சேர்ந்த எனது அருமை  சகோதரிகள் வந்து இருக்கின்றீர்கள். இந்த கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பல சகோதரிகள், குழுவின் மூலமாக வாழ்க்கையில் முன்னேறி இருக்கின்றீர்கள். இன்றைக்கு மற்றவர்களின் உதவியை எதிர்பார்க்காமல் உங்களுடைய சொந்த காலில், உங்களுடைய குடும்பத்தை வழிநடத்துகின்றீர்கள்.

இன்றைக்கு குழுவைச் சேர்ந்த  ஒவ்வொருவருக்கும் நம்முடைய அரசு உங்களுடைய பெயர், புகைப்படத்துடன் முதன்முறையாக அடையாள அட்டைகளை கொடுத்திருக்கின்றோம். இது வெறும் அடையாள அட்டை கிடையாது. உங்களுடைய அடையாளத்தையே மாற்றப்போகின்ற Tool kit. இதன் மூலமாக உங்களுக்கு நிறைய பயன்கள் இருக்கிறது.

திராவிட மாடல் ஆட்சியில் 25 இலட்சம் பேருக்கு பட்டா! : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தகவல்!

உங்களுடைய தயாரிப்புகளை, நீங்கள் தயாரிக்கின்ற பொருட்களை 25 கிலோ வரை 100 கிலோ மீட்டர் தூரத்திற்கு அரசுப் பேருந்துகளில் எந்தவித கட்டணமின்றி எடுத்துச் சென்று வியாபாரம் செய்யலாம். அதுமட்டுமல்ல, அரசு நிறுவனங்களில் சலுகை விலையில் பல பொருட்களை நீங்கள் வாங்கலாம். ஆகவே, இந்த அடையாள அட்டைகளை குழுக்களைச் சேர்ந்த சகோதரிகள் நீங்கள் பத்திரமாக வைத்து, பயன்படுத்தவும்.

மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கடந்த 5 வருடத்தில் மட்டும்
ஒரு லட்சத்து 40 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு வங்கிக்கடன் இணைப்புகளை நம்முடைய அரசு வழங்கி இருக்கின்றது. இதையெல்லாம் நம்முடைய முதலமைச்சர் அவர்கள் கடன் தொகையாக பார்க்கவில்லை. குழு சகோதரிகள் உங்களுடைய உழைப்பின் மீது வைத்திருக்கக்கூடிய நம்பிக்கை தொகையாகதான் இதை பார்க்கிறார். இந்த கடன் இணைப்பை பெற்றுள்ள சகோதரிகள் உங்கள் அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துகளை நான் தெரிவித்துக் கொள்கின்றேன்.

அதே மாதிரி, இங்கே வீட்டு மனைப்பட்டாக்களை வழங்க இருக்கின்றோம்.  சுவரில்லாமல் சித்திரம் வரைய முடியாது என்று சொல்கின்றது போல பட்டா இல்லாமல் வீட்டிற்கான உரிமையை நாம் பெற முடியாது.  ஆகவே, இன்றைக்கு உங்கள் கைகளில்  நம்முடைய திராவிட மாடல் அரசு, பட்டாக்களை கொடுத்து உங்களுடைய உரிமையை இன்றைக்கு நிலைநாட்டி இருக்கிறது. இன்றையிலிருந்து உங்களுடைய வீடுகளில் நீங்கள் மகிழ்ச்சியாக, நிம்மதியாக தூங்கலாம். 

இந்த 5 வருடத்தில் மட்டும், நம்முடைய அரசு, நம்முடைய முதலமைச்சர் அவர்கள் 25 இலட்சம் பேருக்கு பட்டாக்களை வழங்கி இருக்கின்றார். இது மிகப்பெரிய சாதனை. குறிப்பாக இந்த கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மட்டும் 41 ஆயிரம் பட்டாக்களை நம்முடைய அரசு வழங்கி இருக்கின்றது. பட்டா பெற்ற அத்தனைபேருக்கும் எங்களுடைய வாழ்த்துகளை நாங்கள் தெரிவித்துக் கொள்கின்றோம்.

பட்டா மட்டுமல்ல, இன்றைக்கு கலைஞர் கனவு இல்லம்
திட்டத்தின் கீழ் வீடு கட்ட ஆணைகளும் வழங்கப்பட இருக்கின்றது. உண்ண உணவு, உடுத்த உடை, இருக்க இடம் என்பது ஒவ்வொரு மனிதனுடைய அத்தியாவசிய தேவை, இதை கழக அரசு உணர்ந்ததால் தான் இவை மூன்றையும் உங்களுக்கு பார்த்து, பார்த்து செய்து கொண்டிருக்கிறது.

அந்த வகையில் கடந்த 5 வருடத்தில் சுமார் 3 லட்சம் வீடுகள்
கட்டப்பட்டு இருக்கிறது. நம்முடைய தலைவர், முதலமைச்சர் அவர்கள், வாக்குறுதி கொடுத்து இருக்கிறார்கள். மீண்டும் அரசு தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு, நம்முடைய திராவிட மாடல் அரசு 2.0 அமைந்த பிறகு 4 வருடத்திற்குள், தமிழ்நாடு முழுவதும் 8 லட்சம் வீடுகளை கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் மூலம் கட்டி கொடுப்போம் என்ற வாக்குறுதியை நம்முடைய அரசு சொல்லி இருக்கிறது. இதன் மூலம் தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய எல்லா குடும்பங்களுக்கும் ஒரு முகவரி கிடைக்க இருக்கிறது. 

இந்த கள்ளக்குறிச்சி பகுதி மழைவாழ் மக்கள் – பழங்குடியினர் நிறைந்த ஒரு பகுதி. அதனால்தான், உங்களுக்கான திட்டங்களை
நம்முடைய முதலமைச்சர் அவர்கள் முக்கியத்துவம் கொடுத்து செயல்படுத்தி வருகிறார்கள்.

முக்கியமாக பழங்குடி மக்கள் வசிக்கின்ற பகுதியில் சாலைகள், வீடுகள் என்று உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த ‘தொல்குடி’ திட்டத்தை நம்முடைய முதலமைச்சர் அவர்கள் தொடங்கி வைத்தார்கள். ஆண்டுக்கு 250 கோடி ரூபாய் என்று 4 வருடத்தில் 1,000 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தொல்குடி திட்டத்தின் கீழ் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு இருக்கிறது.

பழங்குடியினர் உண்டு உறைவிடப் பள்ளியினுடைய தரத்தை உயர்த்த 13 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு அந்த பணிகளும் நடைபெற்று வருகிறது. இருளர் – நரிக்குறவர் மக்களுக்கு சிறு வணிகக் கடன் 11 கோடி ரூபாய் வரை தரப்பட்டிருக்கிறது. இப்படி அரசினுடைய திட்டங்களை நான் சொல்லிக்கொண்டே போகலாம்.

இங்கே மாற்றுத்திறனாளிகள் சகோதரர்கள், சகோதரிகள் வந்திருக்கின்றார்கள். மாற்றுத்திறனாளிகளுக்கு என்று ஒரு 
தனி துறையை உருவாக்கியவர் டாக்டர் கலைஞர் அவர்கள்தான். இன்றைக்கு நம்முடைய முதலமைச்சர் அவர்கள்,
மாற்றுத்திறனாளிகளை கேட்கும் இடத்தில் இருந்து, கொடுக்கும் இடத்திற்கு உயர்த்தி காட்டியிருக்கிறார்.

குறிப்பாக, உள்ளாட்சி அமைப்புகளில்  நியமன அடிப்படையில்
மாற்றுத்திறனாளிகளை இந்தியாவிலேயே முதல் மாநிலமாக நாம்  நியமித்திருக்கின்றோம்.  அதிகாரமற்றவர்களுக்கு அதிகாரம், சலுகை மறுக்கப்பட்டவர்களுக்கு உரிமைகள் என்று இப்படி எல்லாத்தரப்பு மக்களும் பயனடைகின்ற வகையில், நம்முடைய திராவிட மாடல் அரசு செயல்பட்டு வருகிறது.

அடுத்து அமைய இருக்கக்கூடிய திராவிட மாடல் பார்ட்-2-வில்
நம்முடைய முதலமைச்சர் அவர்கள் இன்னும் ஏராளமான திட்டங்களை நிச்சயம் உங்களுக்கு தருவார். எனவே வந்திருக்கக்கூடிய பயனாளிகள், பொதுமக்கள், மகளிர் உங்களிடத்தில் நான்  கேட்டுக்கொள்வதெல்லாம், நம்முடைய அரசு எப்போதுமே உங்களுக்கு பக்கபலமாக இருக்கும், ஆகவே, நீங்கள் எப்போதும் நம்முடைய அரசுக்கு உறுதுணையாக, பக்கபலமாக இருக்க வேண்டும் என்று உரிமையோடு நான் கேட்டுக் கொள்கின்றேன். 

நலத்திட்டங்களைப் பெற்ற உங்கள் அத்தனைப் பேருக்கும் மீண்டும் என்னுடைய நன்றியை தெரிவித்து, இந்த நிகழ்ச்சியை இவ்வளவு சிறப்பாக ஏற்பாடு செய்த சட்டமன்ற உறுப்பினர்களுக்கு, மக்கள் பிரதிநிதிகளுக்கு, மாவட்ட ஆட்சியருக்கு, நிர்வாகத்திற்கு மீண்டும் என்னுடைய நன்றியை தெரிவித்து, வாய்ப்பிற்கு நன்றி கூறி விடைபெறுகின்றேன். நன்றி வணக்கம் என்று தமிழ்நாடு துணை முதலமைச்சர் அவர்கள் தெரிவித்தார்.

banner

Related Stories

Related Stories