
கர்நாடகா அரசின் மேகதாது திட்டத்தால் காவிரி டெல்டா விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்காமல் இருக்க ஒன்றிய அரசு எடுத்துள்ள நடவடிக்கை என்ன? என்றும் இத்திட்டத்திற்கான ஒப்புதல்களைப் பரிசீலிப்பதற்கு முன்னதாக தமிழ்நாடு அரசுடன் ஆலோசனை நடத்தப்பட்டதா? என்றும் ஒன்றிய ஜல் சக்தித் துறை அமைச்சர் சி.ஆர். பாட்டீல் அவர்களிடம் கழக நாடாளுமன்றக் குழுத் துணைத் தலைவரும் மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினருமான தயாநிதி மாறன் பல கேள்விகளை எழுப்பியுள்ளார்.
அதன் விவரங்கள் பின்வருமாறு:-
கர்நாடக மாநில அரசால் முன்மொழியப்பட்ட மேகதாது அணையானது, தமிழ்நாட்டில் உள்ள காவிரி டெல்டா விவசாயிகளின் வாழ்வாதாரம், விவசாய உற்பத்தி மற்றும் பாசனம் ஆகியவற்றின் மீது ஏற்படுத்தக்கூடிய பாதிப்பை ஒன்றிய அரசு ஆய்வு செய்துள்ளதா? அவ்வாறெனில், எடுக்கப்பட்ட முடிவுகள் என்ன?
இத்திட்டத்தை எதிர்த்து தமிழ்நாடு அரசு மற்றும் விவசாய அமைப்புகளிடமிருந்து கோரிக்கைகள் அல்லது கருத்துருக்கள் வந்துள்ளனவா? அவ்வாறெனில், அதுகுறித்த விவரங்கள் மற்றும் அதன் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன?
தமிழ்நாட்டில் விவசாயத்திற்குத் தேவையான காவிரி நீர் சரியான நேரத்தில் திறந்துவிடப்படுவதில் இத்திட்டம் ஏற்படுத்தக்கூடிய பாதிப்பை ஒன்றிய அரசு ஆய்வு செய்துள்ளதா? அவ்வாறெனில், அதுகுறித்த விவரங்கள் என்ன?
இத்திட்டத்திற்கான ஒப்புதல்களைப் பரிசீலிப்பதற்கு முன்னதாக தமிழ்நாடு அரசுடன் ஏதேனும் கலந்தாலோசனை நடத்தப்பட்டதா? அவ்வாறெனில், அதுகுறித்த விவரங்கள் என்ன?
காவிரி டெல்டா விவசாயிகளின் நலன்களைப் பாதுகாக்கவும், நதிநீரில் தமிழ்நாட்டிற்கான நியாயமான பங்கை பாதிக்கும் வகையிலான எந்தவொரு திட்டத்திற்கும், தற்போதுள்ள தீர்ப்பாய மற்றும் உச்ச நீதிமன்ற உத்தரவுகளை மீறி ஒப்புதல் அளிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்யவும் எடுத்துள்ள நடவடிக்கைகள் என்ன?
இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.






