
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் இன்று (13.02.2026) தலைமைச் செயலகத்தில், தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அமெரிக்காவைச் சேர்ந்த KLA கார்ப்பரேஷன் நிறுவனத்தின் துணை நிறுவனமான KLA இந்தியா லிமிடெட் 3,510 கோடி ரூபாய் முதலீட்டு பொறுப்புறுதியுடன், சென்னையில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு மற்றும் புத்தாக்க மையம் அமைப்பதற்கு புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.
தமிழ்நாட்டின் பொருளாதாரத்தை, 2030-ஆம் ஆண்டிற்குள் ஒரு ட்ரில்லியன் அமெரிக்க டாலர் அளவிற்கு உயர்த்திட வேண்டும் என்ற இலக்கினை விரைவாக அடைந்திடவும், பெருமளவிலான முதலீடுகளை ஈர்த்து, தமிழ்நாட்டின் இளைஞர்களுக்கு அதிக எண்ணிக்கையிலான வேலைவாய்ப்புகளை உருவாக்கிடவும், தமிழ்நாடு அரசு பல்வேறு முற்போக்கான முன்னெடுப்புகளை மேற்கொண்டு வருகிறது.
வாகனங்கள், மின்னணு, ஆயத்த ஆடைகள், தோல் பொருட்கள் உள்ளிட்ட பல்வகைப்பட்ட உற்பத்தித்துறைகளில் முன்னணி மாநிலமாக தமிழ்நாடு வளர்ச்சி பெற்றுள்ளதுடன், செமிகண்டக்டர், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, உயிர் அறிவியல், புத்தொழில், புத்தாக்கம், ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு, உலகளாவிய திறன் மையங்கள் போன்ற வளர்ந்துவரும் துறைகளிலும், பாரம்பரியம் மிக்க கப்பல் கட்டும் துறையிலும் முன்னிலை பெரும் வகையில் அத்துறைகளிலும் அதிக முதலீடுகளை தமிழ்நாடு அரசு ஈர்த்து வருகின்றது.

KLA கார்ப்பரேஷன்
அமெரிக்க நாட்டைத் தலைமையிடமாகக் கொண்ட KLA கார்ப்பரேஷன், செமிகண்டக்டர் துறைக்கான தொழில்நுட்பத் தீர்வுகளை வழங்கும் உலகளாவிய முன்னணி நிறுவனம் ஆகும். இந்நிறுவனம், சிப் உற்பத்தியில் பயன்படும் ஆய்வு, அளவீடு மற்றும் தரவு பகுப்பாய்வு அமைப்புகளை உருவாக்குகிறது.
இதன் தொழில்நுட்பங்கள், செமிகண்டக்டர் தயாரிப்புகளின் தரம், செயல்திறன் மற்றும் உற்பத்தி திறனை மேம்படுத்த உதவுகின்றன. உலகம் முழுவதும் உள்ள முன்னணி சிப் உற்பத்தியாளர்களுக்கு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு சேவைகளை வழங்கி, புதிய தலைமுறை செமிகண்டக்டர் வளர்ச்சியில் இந்நிறுவனம் முக்கிய பங்கு வகிக்கிறது.
KLA இந்தியா நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்
KLA கார்ப்பரேஷனின் துணை நிறுவனமான KLA இந்தியா நிறுவனம், 3,600 கோடி ரூபாய் முதலீட்டு பொறுப்புறுதியுடன் சென்னையில், ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு மற்றும் புத்தாக்க வளாகத்தை அமைக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் இன்றையதினம் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.
12 ஏக்கர் நிலப்பரப்பளவிலான இந்த வளாகத்தில், உயர் செயல்திறன், கணினி தொழில்நுட்பம், செயல்முறை கட்டுப்பாடு, பொறியியல் மென்பொருள் போன்ற துறைகளில், மேம்பட்ட ஆராய்ச்சி மற்றும் புத்தாக்க பணிகளை இந்நிறுவனம் மேற்கொள்ள உள்ளது. இதன்மூலம், அடுத்த 10 ஆண்டுகளில், சுமார் 4,000 உயர்தர வேலைவாய்ப்புகள் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.






