
மகளிர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில், ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகள் இன்று (ஜூலை 5) பலப்பரீட்சை நடத்துகின்றன. வரலாற்றுச் சிறப்புமிக்க லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெறும் இந்த ஆட்டம், உலக மகளிர் கிரிக்கெட்டின் இரண்டு தலைசிறந்த அணிகளின் மிகப்பெரிய போராட்டமாக பார்க்கப்படுகிறது.
உலகக்கோப்பை என்றாலே ஆஸ்திரேலியாவை எளிதாக புறக்கணிக்க முடியாது. அது ஆண்கள் உலகக்கோப்பையாக இருந்தாலும் பெண்கள் உலகக்கோப்பை போட்டியாக இருந்தாலும் அதான் நிலைமை. கடந்த சில மாதங்களாக உலக சாம்பியன் பட்டம் அவர்களிடம் இல்லாவிட்டாலும், மீண்டும் அந்த பட்டத்தை கைப்பற்றும் அணியாகவே அவர்கள் திகழ்ந்து வருகின்றனர். தொடர் வெற்றிகள் மூலம் மகளிர் கிரிக்கெட்டில் தனக்கென ஒரு பொற்காலத்தை ஆஸ்திரேலியா உருவாக்கியுள்ளது.
இந்த உலகக்கோப்பை தொடரில் இலங்கை அணி, நியூசிலாந்தை வீழ்த்தியது. அயர்லாந்து, வெஸ்ட் இண்டீஸுக்கு அதிர்ச்சி அளித்தது. வங்கதேசம் மற்றும் பாகிஸ்தான் அணிகள் தென் ஆப்பிரிக்காவுக்கு கடும் சவாலை ஏற்படுத்தின. ஸ்காட்லாந்து அணியும் தனது திறமையை வெளிப்படுத்தியது.
இருப்பினும், இந்த முடிவுகள் எதுவும் ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்தின் வெற்றிப் பயணத்தை பாதிக்கவில்லை. இரு அணிகளும் ஒரு தோல்வி கூட சந்திக்காமல் இறுதிப்போட்டிக்குள் நுழைந்துள்ளன.
மூத்த வீராங்கனைகளின் ஓய்வு, கேப்டன் மாற்றம் போன்றவை ஆஸ்திரேலிய அணியின் செயல்திறனை எந்த வகையிலும் பாதிக்கவில்லை என்பதனையே இது காட்டுகிறது. கடந்த ஒரு தசாப்தமாக உலக கிரிக்கெட்டில் ஆதிக்கம் செலுத்தி வரும் அந்த அணி, மீண்டும் கோப்பையை வெல்லும் முனைப்புடன் களமிறங்குகிறது.

மறுபுறம், இங்கிலாந்து அணி புதிய தலைமையின் கீழ் புத்துணர்ச்சியுடன் விளையாடி வருகிறது. அதே வீராங்கனைகளை வைத்தே புதிய அணுகுமுறையை கடைப்பிடித்து, உலகின் நம்பர்-2 அணியாக தனது இடத்தை மேலும் உறுதிப்படுத்தியுள்ளது.
இரு அணிகளுக்கும் இடையிலான புள்ளிவிவரங்களும் கடும் போட்டியையே சுட்டிக்காட்டுகின்றன. சொந்த மண்ணில் நடைபெற்ற மகளிர் உலகக்கோப்பை போட்டிகளில் இங்கிலாந்து இதுவரை தோல்வியடைந்ததில்லை. அதேவேளையில், மகளிர் டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இங்கிலாந்துக்கு எதிராக ஆஸ்திரேலியா தோல்வி கண்டதில்லை.
மேலும், இங்கிலாந்து சொந்த மண்ணில் விளையாடிய 11 டி20 உலகக்கோப்பை போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது. மறுபுறம், டி20 உலகக்கோப்பை வரலாற்றில் இங்கிலாந்துக்கு எதிராக ஆஸ்திரேலியா 5-2 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
இதனால், சமீபத்திய ஆட்டங்களோ, வரலாற்றுப் பதிவுகளோ எந்த அணிக்கு அதிக வாய்ப்பு என்பதை தெளிவாக கூற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. உலகின் சிறந்த இரண்டு அணிகள் மோதும் இந்த இறுதிப்போட்டியில், புதிய வரலாறு படைக்கப்படுமா அல்லது ஆஸ்திரேலியாவின் ஆதிக்கம் மீண்டும் தொடருமா என்பதை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.






