
தென்மேற்கு வங்க கடல் மற்றும் அருகிலுள்ள இலங்கை கடற்கரையில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு 8 கிமீ வேகத்தில் வடக்கு-வடமேற்கு நோக்கி நகர்ந்து, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக தீவிரமடைந்து.
இதன் காரணமாக தென்மாவட்டங்கள் மற்றும் இலங்கையில் கனமழை பெய்து வருகிறது. இது குறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், அதிகாலை 5.30 மணி அளவில் இலங்கையின் ஹம்பாந்தோட்டையிலிருந்து கிழக்கு-வடகிழக்கே 150 கி.மீ தொலைவிலும், இலங்கையின் மட்டக்களப்பிலிருந்து கிழக்கு-தென்கிழக்கே 190 கி.மீ தொலைவிலும் மையம் கொண்டுள்ளது என்று கூறப்பட்டுள்ளது.

மேலும், இது அடுத்த 12 மணி நேரத்தில் தென்மேற்கு வங்க கடல் மற்றும் இலங்கையை ஒட்டியுள்ள பகுதிகளில் வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து மேலும் தீவிரமடைந்து புயலாக மாற வாய்ப்புள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதோடு அடுத்த 48 மணி நேரத்தில் தென்மேற்கு வங்க கடல் மற்றும் இலங்கையை ஒட்டியுள்ள கடற்கரை வழியாக வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து வட தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் தெற்கு ஆந்திரப் பிரதேச கடற்கரையை நோக்கி நகர வாய்ப்புள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக கடலோர தமிழக பகுதிகள் மற்றும் சென்னையில் நவம்பர் 30-ம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.








