நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடர் நாளையுடன் நிறைவடைகிறது. இந்நிலையில், கைது செய்யப்பட்டு 30 நாட்களுக்கு சிறையில் இருந்தாலே பிரதமர், முதலமைச்சர் மற்றும் அமைச்சர்களைப் பதவி நீக்கம் செய்யும் வகையிலான சட்டத் திருத்த மசோதாவை உள்துறை அமைச்சர் அமித்ஷா மக்களவையில் இன்று தாக்கல் செய்தார்.
இதன்படி, 5 ஆண்டுகளுக்கும் மேலாக தண்டனை விதிக்கும் வகையிலான எந்தவொரு குற்றச்சாட்டின்கீழும் கைதுசெய்யப்பட்டு, 30 நாட்களுக்கு சிறையில் இருந்தால், 31-ஆவது நாளில் அவர்களை ஆளுநர் பதவிநீக்கம் செய்ய இந்த மசோதா வகை செய்கிறது.
இதனைத் தொடர்ந்து இந்த மசோதாவிக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர். தி.மு.க நாடாளுமன்ற குழுத் தலைவர் கனிமொழி,”நாடாளுமன்றத்தில் ஒன்றிய அரசு மசோதாக்களை நிறைவேற்றும் போது தன்னிச்சையாக செயல்படுகிறார்கள். எதிர்க்கட்சிகள் மசோதா தொடர்பாக படிப்பதற்கு கூட நேரமோ, அவகாசமோ கொடுப்பதில்லை. கருத்துக்கள் சொல்வதற்கும் எதிர்க்கட்சிகளுக்கு அவகாசம் கொடுப்பதில்லை. தொடர்ந்து இந்த நாட்டின் ஜனநாயகத்தையும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அரசுகளையும் அச்சுறுத்துவதற்காக பல மசோதாக்களை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றி வருகிறார்கள்" என தெரிவித்துள்ளார்.
சு.வெங்கடேசன் MP (CPM)
”நேற்று மாலை உள்துறை அமைச்சகத்தால் மக்களவை செயலாளருக்கு கடிதம் எழுதப்பட்டு இன்றே மக்களவையில் தாக்கல் செய்யப்படும் அரசியலமைப்பின் 130 ஆவது திருத்தத்தை கோரும் சட்ட மசோதா இந்திய ஜனநாய கட்டமைப்பின் மீது தொடுக்கப்படும் மற்றும் ஒரு கொடிய தாக்குதல்”
மஹுவா மொய்த்ரா MP (திரிணாமுல் காங்கிரஸ்)
”முதலமைச்சர்களையும் அமைச்சர்களையும் கைது செய்ய வழி வகுக்கும் மசோதாவை முன்மொழிந்த அமித் ஷா, இம்முறை அவரது வழக்கமான இடத்தில் அமரவில்லை. 20 பேர் பாதுகாப்பு கொடுத்தும் அவர் 4ம் வரிசையிலிருந்துதான் இந்த மசோதாவை முன்மொழிந்திருக்கிறார். இதை இந்தியா நினைவில் கொள்ளும்.”
சஞ்சய் ராவத் எம்.பி சிவசேனா (உத்தவ் தாக்கரே பிரிவு)
"மோடியும் அமித் ஷாவும் புதிய மசோதாவை தாக்கல் செய்திருக்கிறார்கள். அந்த மசோதா சட்டமானால், முதலமைச்சர்களையும் மாநில அமைச்சர்களையும் கைது செய்ய முடியும். சந்திரபாபு நாயுடுவும் நிதிஷ் குமாரும்தான் மிகவும் பயத்தில் இருக்கின்றனர். அவர்கள் ஒன்றிய அரசுக்கான தங்களின் ஆதரவை விலக்கிக் கொள்வார்களோ என மறுபக்கத்தில் மோடி பயப்படுவதால்தான் இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது."
ஊடகவியலாளர் ரானா அயூப்!
”மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் தலைவர்கள் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டு உறுதிபடுத்தப்படாமல், அவர்களை சிறைவைக்க வழி செய்யக் கொண்டு வரப்படும் மசோதா ஆபத்தானது. யதேச்சதிகாரத்தைதான் அந்த மசோதா வலுப்படுத்தும்.”