கீழடியில் மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடந்துகொண்ட ஒன்றிய பா.ஜ.க அரசை அதிமுக கண்டிக்காதது ஏன்? என அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா கேள்வி எழுப்பியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:-
தமிழர் நாகரீகம் உலகின் மூத்த நாகரீகம் என நிறுவும் கீழடி சான்றுகளை அவமதிக்கும் ஒன்றிய அரசின் அலட்சியத்தையும், மாற்றாந்தாய் மனப்பான்மையையும் எதிர்க்கட்சியான அதிமுக இப்போது வரை கண்டிக்காதது ஏன்?. கீழடிக்காக அதிமுக குரல் கொடுக்காதது ஏன்?
பாஜகவிடம் கூட்டணியில் இருப்பதன் ஒரே காரணத்திற்காக தமிழரின் தொன்மையான நாகரிகத்தைக் காக்க குரல் கொடுக்காமல் ‘உறங்குவது ஏன்’ என்ற நியாயமான கேள்வியை எழுப்பிய DMKITWing பதிவிற்கு, தகாத அர்த்தங்களைக் கற்பித்து நமது எதிர்கட்சியினர் தங்களைத் தாங்களே ஏன் தாழ்த்திக்கொள்கிறார்கள்?
நியாயமாக வந்திருக்க வேண்டிய கோபம் என்ன?
தொன்மை தமிழர் நாகரீகத்தின் ஆதாரமான கீழடியை புறங்கையில் தள்ளும் ஒன்றிய மைனாரிட்டி பாஜக அரசின் நடவடிக்கைகளுக்கு அல்லவா கோபம் வந்திருக்க வேண்டும். இப்போது வரை அப்படியொரு கோபம் ஒன்றிய அரசின் மீதும், பாஜக மீதும் அதிமுகவிற்கு வரவேயில்லையே ஏன்?.
ஒன்றிய அரசின் வஞ்சகத்தை ஒருசேர எதிர்த்து நிற்க வேண்டிய நேரத்தில் இப்படி திசை திருப்பும் வேளைகளில் அற்பமாக இறங்குவது தமிழர் விரோத செயல் இல்லையா?
எதிர்கட்சி துணைத் தலைவர் ஆர்.பி. உதயகுமார் இன்று BP எகிறி கதறிக் கொண்டிருக்கிறார் என்று உடன்பிறப்புகள் தெரிவித்தனர் : ஆனால் தமிழ் வளர்த்த மதுரையைச் சேர்ந்த அண்ணன் அவர்கள்கூட இதுவரை கீழடிக்காக குரல் கொடுக்கவில்லையே?. எது தடுக்கிறது?
என் மீது அவர் காட்டும் கோபம் ஏன் தமிழர் பெருமையை சிதைப்பவர்கள் மீது வரவில்லை? . இன்றுகூட மதுரையின் பெருமைக்காக அவர் பாய்ந்து எழாமல் "கீழடியை வைத்து நமது தொன்மையை நிரூபிக்க வேண்டிய அவசியமில்லை" என்று சொன்னவர் பேட்டி அளித்தது ஏன் !
DMK IT wing உடன்பிறப்புகளே!
எதிர்கட்சியினரின் அவதூறுகளை, என் மீதான அவர்களின் விமர்சனங்களை நான் பார்த்துக்கொள்கிறேன். பாவம், உண்மை தெரிந்தும் யாரோ சொல்லி சாடுகிறார்கள். அந்த அரசியல் எனக்கு தெரியும் .நீங்கள் உங்கள் உழைப்பை இந்த கவனச் சிதறல்களுக்கு இரையாக்க வேண்டாம்.
கழக மாணவரணி கீழடிக்காக மாபெரும் கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்திருக்கிறார்கள். அதன் தாக்கத்தை மடைமாற்றவே அதிமுகவினர் கண்டதை வைத்து கம்பி கட்டுகிறார்கள்.
நாங்கள் கலைஞரின் வார்ப்புகள். எவர் எதிர் வரினும், எந்த இடர் வரினும், தமிழ்நாட்டின் நலனுக்காகவும், தமிழர் நலனுக்காகவும் இந்தப் போர் தொடரும். தமிழினத்தின் உரிமைக்காக போராடும், இரத்தம் சிந்தும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தொண்டர்கள் நாங்கள் !
இனத்தை, மொழியை அழிக்க நினைப்பவர்களுக்கும், துணை போகிறவர்களுக்கும் எதிரான முன்கள வீரர்களான DMKITwingபணி தொடரும். கேள்விகளும் தொடரும. கீழடி தமிழர் தாய்மடி.
இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.