குஜராத் அகமதாபாத் விமான நிலையத்தில் ஏர் இந்தியா விமானம் கடந்த ஜூன் 12 தேதி புறப்பட்ட சிறிது நேரத்திலேயே கீழே விழுந்து பெரும் விபத்தை சந்தித்தது. இந்த விமானத்தியில் பயணித்த ஒருவர் தவிற 241 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளனர். இந்த சம்பவத்தின் சோகம் தனியாத நிலையில் சென்னையில் மீண்டும் ஒரு விமானத்தில் இயந்திர கோளாறு ஏற்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் இருந்து மதுரை செல்லும் இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், இன்று காலை 8 மணிக்கு, 70 பயணிகள், 5 விமான ஊழியர்கள், 75 பேருடன் சென்னையில் இருந்து புறப்பட்டு சென்று கொண்டு இருந்தது.
இந்த நிலையில் இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், நடு வானில் பறந்து கொண்டு இருந்தபோது, திடீரென விமானத்தில் இயந்திர கோளாறு ஏற்பட்டுள்ளதை, விமானி கண்டுபிடித்தார். உடனடியாக விமானி அவசரமாக சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தார்.
இதை அடுத்து விமானத்தை, சென்னைக்கு திருப்பிக் கொண்டு வந்து, அவசரமாக தரை இறக்கும்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதன்படி, அந்த விமானம் இன்று காலை 9 மணி அளவில், சென்னை விமான நிலையத்தில் வந்து அவசரமாக தரையிறங்கியது. விமானத்திலிருந்த பயணிகள் அனைவரும், கீழே இறக்கப்பட்டு, விமான நிலைய ஓய்வறைகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் மாற்று விமானம் மூலம், மதுரைக்கு அனுப்பி வைக்க, சென்னை விமான நிலைய அதிகாரிகள் ஏற்பாடுகள் செய்து கொண்டு இருக்கின்றனர்.
அதோடு பழுதடைந்த இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், பழுது பார்க்கும் பணியும் நடைபெற்று வருகிறது. விமானத்தில் ஏற்பட்ட இயந்திரக் கோளாறை விமானி, தகுந்த நேரத்தில் கண்டுபிடித்து எடுத்த துரித நடவடிக்கை காரணமாக, ஆபத்து தவிர்க்கப்பட்டு, விமானத்திலிருந்த 70 பயணிகள் உட்பட 75 பேர், நல்வாய்ப்பாக உயிர்த்தப்பினர். இந்த சம்பவம் சென்னை விமான நிலையத்தில் இன்று காலை பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.