அகமதாபாத்தில் ஏற்பட்ட விமான விபத்தை அடுத்து, அனைத்து விமானங்களும் உரிய பாதுகாப்பு சோதனைகள் நடத்தப்பட்டு வருகிறது. இருந்தும் அடிக்கடி விமானங்களில் தொழில்நுட்ப கோளாறுகள் ஏற்பட்டு வருகிறது. நேற்று மட்டும் 6 ஏர் இந்தியா விமானங்கள் பல்வேறு காரணங்களால் ரத்து செய்யப்பட்டது.
இந்நிலையில் இன்று சென்னை விமான நிலையத்தில் 2 ஏர் இந்திய விமானங்களின் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. டெல்லியில் இருந்து இன்று மாலை 4.15 மணிக்கு, புறப்பட்டு இரவு 7.10 மணிக்கு, சென்னை உள்நாட்டு விமான நிலையத்திற்கு வர வேண்டிய ஏர் இந்தியா பயணிகள் விமானமும், அதேபோல் சென்னையில் இருந்து இரவு 8.40 மணிக்கு புறப்பட்டு இரவு 11.25 மணிக்கு, டெல்லி சென்றடையும் ஏர் இந்தியா பயணிகள் விமானமும் இன்று ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதோடு, இன்று அதிகாலை 5 மணிக்கு சென்னையில் இருந்து சிங்கப்பூர் செல்ல வேண்டிய, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் பயணிகள் விமானம் 6 மணி நேரம் தாமதமாக புறப்பட்டு சென்றது. இந்த விமானம் 6 மணி நேரம் தாமதம் குறித்து அதிகாரிகள் தரப்பில், சவுதி அரேபியாவின் தமாமிலிருந்து, அதிகாலை 3.25 மணிக்கு, சென்னைக்கு வரும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் பயணிகள் விமானம் தான், அதிகாலை 5 மணிக்கு மீண்டும் சென்னையில் இருந்து சிங்கப்பூர் புறப்பட்டு செல்லும். ஆனால் இன்று அந்த விமானம் சுமார் 6 மணி நேரம் தாமதமாக, காலை 9.25 மணிக்கு தான், சென்னைக்கு வந்தது. எனவே சென்னையிலிருந்து சிங்கப்பூர் செல்ல வேண்டிய தாமதமாக புறப்பட்டு சென்றது என தெரியவந்துள்ளது.
சென்னை - டெல்லி மற்றும் டெல்லி - சென்னை 2 ஏர் இந்தியா பயணிகள் விமானம், நிர்வாக காரணங்களால் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளது. பயணிகளுக்கு அது குறித்து தகவல் தகவல்கள் தெரிவிக்கப்பட்டு, அவர்களுக்கு மாற்று ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக விமான நிலைய அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.