சென்னையில் இருந்து ஐக்கிய அரபு நாடான அபுதாபிக்கு செல்லும் எத்தியார்ட் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், இன்று அதிகாலை 4 மணிக்கு சென்னை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து புறப்பட தயாரானது. அந்த விமானத்தில் 168 பயணிகள் 10 விமான ஊழியர்கள் உட்பட 178 பேர் பயணத்தற்கு தயாராக இருந்தனர்.
பின்னர், விமானம் புறப்பட்டு ஓடுபாதையில் சென்று கொண்டிருந்தது. அப்போது விமானத்தில் திடீரென இயந்திர கோளாறு ஏற்பட்டுள்ளதை, விமானி கண்டுபிடித்துள்ளார். உடனே விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
அடுத்த சில நிமிடத்திலேயே விமானம் ஓடுபாதையில் நின்றது. பிறகு, இழுவை வண்டிகள் மூலம் ஓடுபாதையில் பழுதடைந்து நின்ற விமானத்தை, இழுத்து வந்து, விமான நிலையத்தில் ஒதுக்குப்புறமான இடத்தில் நிறுத்தப்பட்டது. இதையடுத்து விமான பொறியாளர்கள் குழு, விமானத்தில் ஏற்பட்டுள்ள இயந்திர கோளாறை சரி செய்யும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
தற்போது வரை இயந்திர கோளாறு சரி செய்யப்படவில்லை. இதனால் பயணிகள் அனைவரும் விமான நிலைய ஓய்வறையில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து பழுது நீக்கும் பணி நடைபெற்று வருகிறது.
விமானத்தில் ஏற்பட்டுள்ள இயந்திரக் கோளாறு சரி செய்யப்பட்டால், விமானம் இன்று தாமதமாக புறப்பட்டு செல்லும். இல்லை என்றால் விமானம் ரத்து செய்யப்பட்டு, பயணிகள் சென்னை நகரில் உள்ள ஹோட்டல்களில் தங்க வைக்கப்படுவார்கள். விமானம் இன்று இரவு அல்லது நாளை அதிகாலையில், புறப்பட்டு செல்லும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
விமானத்தில் ஏற்பட்டுள்ள இயந்திர கோளாறை விமானி, தகுந்த நேரத்தில் கண்டுபிடித்து எடுத்த, உடனடி நடவடிக்கை காரணமாக, விமானம் விபத்தில் இருந்த 178 பேர் நல்வாய்ப்பாக உயிர் தப்பினர். இந்த சம்பவம் சென்னை விமான நிலையத்தில் இன்று அதிகாலையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.