ஒன்றியத்தில் பாஜக ஆட்சிக்கு வந்ததில் இருந்தே மக்களுக்கு விரோதமான செயல்களில் ஈடுபட்டு வருகிறது. இஸ்லாமியர்கள், விவசாயிகள் என பலரையும் வஞ்சித்து வரும் பாஜக அரசு, தற்போது பல ஆண்டுகளுக்கு பிறகு இந்தி திணிப்பை கையில் எடுத்துள்ளது. இந்தி மொழி திணிப்பு என்பது சுமார் 60 ஆண்டுகளுக்கு முன்பே தொடங்கியது.
அப்போது அனைத்து மாநிலத்தவரும் இந்தி கற்றுக்கொள்ள வேண்டும் என்று அப்போதைய அரசு வலியுறுத்திய நிலையில், திராவிட கட்சிகள், தமிழ்நாட்டு மக்கள் இதற்கு எதிராக மாபெரும் போராட்டத்தை கையில் எடுத்தது. மேலும் ஒரு சில தங்கள் உயிரையும் தியாகம் செய்தனர். இப்படி பல போராட்டங்களை நடத்திய பின்னரே, தமிழ்நாட்டின் மக்களின் கோரிக்கைக்கு இணங்க, இந்தி திணிப்பை பின் வாங்கியது அப்போதைய ஒன்றிய அரசு.
இந்த சூழலில் தற்போது பல ஆண்டுகளுக்கு பிறகு மும்மொழிக் கொள்கையை வலியுறுத்தும் தேசிய கல்விக் கொள்கையில் கையெழுத்திட்டால்தான் தமிழ்நாட்டுக்கான கல்வி நிதி ரூ.2 ஆயிரம் கோடி தரப்படும் என்று வெளிப்படையாக ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதான் மிரட்டல் விடுத்தார். அரசியல் சாசனப்படி அவரது இந்த பகிரங்க மிரட்டல் தவறு என்பதால் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
தற்போது நாடு முழுவதும் இந்தி திணிப்பால், தங்கள் தாய் மொழிகள் அழிந்து போனதை, போவதை உணர்ந்த பலரும் தமிழ்நாட்டின் இருமொழிக் கொள்கை நிலைப்பாட்டுக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். மகாராஷ்டிராவில் உள்ள மராத்தி தற்போது மறைந்து வருகிறது. அதற்கு மகாராஷ்டிராவில் உள்ள மக்கள் இந்தி பேசுவதே முதன்மையான காரணமாக கருதப்படுகிறது.
இதுபோன்றே ராஜஸ்தான், பீகார், உத்தர பிரதேசம், அசாம் உள்ளிட்ட பல வட மாநிலங்களில் தங்கள் தாய் மொழிகளை பேசாமல் இந்தி மொழிகளை பேசிவருவதால், அவர்கள் தாய் மொழி அழிந்துள்ளது. இந்த நிலைமை தமிழ்நாட்டுக்கும் வரக்கூடாது என்பதால், தமிழ்நாடு அரசு இந்தி திணிப்புக்கு எதிராக தொடர்ந்து குரல் எழுப்பி வருகிறது.
இதனிடையே பாஜக ஆளும் மகாராஷ்டிராவில், மராத்தி மொழியை அனைத்து அரசு அதிகாரிகளும் தெரிந்திருக்க வேண்டும் என்றும், அதுவே அலுவல் மொழியாக பயன்படுத்த வேண்டும் என்றும் சுற்றறிக்கை வெளியிட்டிருந்தார். இப்படியாக மொழி பிரச்னை அண்மைக் காலமாக நாடு முழுவதும் பெரிதாக உருவெடுத்துள்ள நிலையில், தற்போது மும்பையின் மொழி மராத்தி அல்ல என்று ஆர்.எஸ்.எஸ். தலைவர் பேசியுள்ளது கண்டனங்களை எழுப்பியுள்ளது.
மகாராஷ்டிராவின் கட்கோபர் (Ghatkopar) என்ற இடத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ஆர்.எஸ்.எஸ். நிர்வாகி சுரேஷ் பையாஜி ஜோஷி, “மராத்தி, மும்பையின் மொழி அல்ல; மும்பையின் வெவ்வேறு பகுதிகளில் வெவ்வேறு மொழிகள் பேசப்படுகின்றன. எனவே மும்பைக்கு வருபவர்கள் மராத்தியை கற்றுக் கொள்ளவோ, புரிந்து கொள்ளவோ தேவை இல்லை.” என்று பேசியிருந்தார். ஆர்.எஸ்.எஸ். நிர்வாகியின் இந்த பேச்சு பலர் மத்தியிலும் கண்டனங்களை எழுப்பியுள்ளது.
இந்த நிலையில், "தமிழ்நாடு சென்று தமிழ் அவர்கள் மொழி இல்லை என்றும், கொல்கத்தா சென்று வங்க மொழி அவர்களின் மொழி இல்லை என்றும் பையாஜி ஜோஷி கூற முடியுமா? இல்லை அப்படி பேசிவிட்டுதான் திரும்ப முடியுமா? மராத்தி மொழி குறித்து பேசிய அவர் மீது தேசத்துரக வழக்கு பதிவு செய்ய வேண்டும்" என்று மகாராஷ்டிரா முன்னாள் முதல்வரும், சிவசேனா (உத்தவ்) கட்சியின் தலைவருமான உத்தவ் தாக்கரே, ஆதித்ய தாக்கரே, சஞ்சய் ராவத் எம்.பி. உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.