முரசொலி தலையங்கம் (14-05-2025)
போர் மேகங்களுக்குள் புகையும் மர்மங்கள்!
பயங்கரவாத - தீவிரவாதச் செயல்களுக்கு பின்னணியாக மட்டுமல்ல முன்னணியாகவும் இருக்கும் பாகிஸ்தான் மீது இந்திய ராணுவம் நடத்திய தாக்குதல் குறித்த தகவல்களை ராணுவம் தரப்பில் இருந்து வெளியிட்டுள்ளார்கள்.
“இந்திய ராணுவத்தின் திறன்களை வெற்றிகரமாக வெளிப்படுத்தும் வகையில் ஆபரேஷன் சிந்தூர்' அமைந்தது. இந்தியாவின் நோக்கங்களை அடைய பல்வேறு துல்லியமான ராணுவ நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. தீவிரவாதிகளின் 9 தளங்கள் மீது ஒருங்கிணைந்த துல்லியமான ஏவுகணைத் தாக்குதல்கள் நடத்தப்பட்டன. பாகிஸ்தானில் 4 தீவிரவாத முகாம்கள், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் 5 தீவிரவாத முகாம்கள் தாக்கி அழிக்கப்பட்டன. லாகூர் உட்பட, பாகிஸ்தான் முழுவதும் உள்ள வான் பாதுகாப்பு அமைப்புகளை அழிக்க காமிகேஸ் ட்ரோன்கள் ஏவப்பட்டன” என்று இந்திய ராணுவம் கூறியிருக்கிறது. இவை அனைத்தும் வரவேற்கத்தக்க நடவடிக்கையே.
பயங்கரவாத அமைப்புகள் தனித்துச் செயல்பட்டாலும், ஏதாவது ஒரு நாட்டின் பின்னணியில் இருந்து செயல்பட்டாலும் அவர்கள் மீது தாக்குதல் நடத்தி பாடம் கற்பிக்க வேண்டியது கடமையாகும். அத்தகைய கம்பீரமான செயலை இந்திய ராணுவம் செய்துள்ளது.
பயங்கரவாதிகளை ஒழிக்கும் நடவடிக்கைக்குப் பின்னால், பயங்கரவாதச் செயல்களை ஆதரிக்கும் பாகிஸ்தான் மீது போர் தொடுக்கும் செயல்களை இங்கு யாரும் விமர்சிக்கவில்லை. ஆனால் இந்த போருக்குப் பின்னால் வெளிவரும் செய்திகள் சர்ச்சைக்குரியதாக இருப்பதை மறுப்பதற்கு இல்லை.
ஏனென்றால் இந்தியா - பாகிஸ்தான் ஆகிய இருநாடுகளுக்கு இடையிலான போர் நிறுத்தப்படுகிறது என்பதை இந்தியா அறிவிப்பதற்கு முன்னால், பாகிஸ்தான் சொல்வதற்கு முன்னால் அமெரிக்க அதிபர் டிரம்ப் சொல்லி விட்டார். இது இந்தியாவுக்கு பெருமை தரும் செயல் அல்ல.
குஜராத் முதலமைச்சராக இருந்த போது மோடி ஒரு பேட்டி அளித்திருக்கிறார்.“பாகிஸ்தான் நம்மைத் தாக்கிவிட்டுச் சென்று விட்டது. பாகிஸ்தான் மும்பையில் ஒரு தாக்குதல் நடத்தியது. உடனே நமது அமைச்சர் அமெரிக்கா போய் அழ ஆரம்பித்து விட்டார். “ஒபாமா! ஒபாமா! அவர்கள் எங்களைத் தாக்கிவிட்டுப் போய்விட்டார்கள். காப்பாற்றுங்கள். காப்பாற்றுங்கள்' என்று. இது என்ன மாதிரியான செயல்? பக்கத்து நாட்டுக்காரன் தாக்கிவிட்டுப் போனால் நீ அமெரிக்கா போவதா? பாகிஸ்தானுக்குப் போயேன்” என்று சொன்னவர் அன்றைய மோடி. ஆனால் இன்று அவரது ஆட்சி காலத்தில் என்ன நடந்திருக்கிறது? அமெரிக்க அதிபர் என்ன சொல்கிறார்?
“நாங்கள் இந்தியா - பாகிஸ்தான் இடையேயான அணுசக்தி மோதலை நிறுத்தினோம். அது ஒரு மோசமான அணுசக்தி போராக இருந்திருக்கலாம் என்று கருதுகிறேன். அப்படி நடந்திருந்தால் மில்லியன் கணக்கான மக்கள் இறந்திருக்கலாம். நீங்கள் இருவரும் போரை நிறுத்தவில்லை என்றால், நாங்கள் எந்த வர்த்தகத்தையும் செய்யப்போவதில்லை என்று நான் கூறினேன்”என்று சொல்லி இருக்கிறார் டிரம்ப்.
அமெரிக்க அதிபர் டிரம்ப் வெளியிட்ட தகவல்களுக்கு ஒன்றிய பா.ஜ.க. அரசுதான் விளக்கம் அளிக்க வேண்டும். ஆனால் அமெரிக்க தலையீடு குறித்து தனது உரையில் பிரதமர் மோடி விளக்கம் அளிக்கவே இல்லை. 'நான் சொல்லித்தான் போர் நிறுத்தம் செய்யப்பட்டது' என்று டிரம்ப் சொன்னதற்கும் பதில் சொல்லவில்லை. ‘மூன்றாவது நாட்டின் தலையீடு' குறித்தும் மறுத்துப் பேசவில்லை. 'காஷ்மீர் விவகாரத்தில் மத்தியஸ்தம் செய்யத் தயார்' என டிரம்ப் கூறியதை பிரதமர் மோடி மறுத்திருக்க வேண்டாமா? தனது 25 நிமிட உரையில் அமெரிக்க தலையீடு குறித்து பேசுவதை தவிர்த்தார். எதிர்க்கட்சிகளின் சந்தேகங்கள், கேள்விகளுக்கும் பிரதமர் மோடியின் உரையில் விளக்கம் தரப்படவில்லை. போர் நிறுத்தத்தில் மூன்றாவது நாட்டின் தலையீடு இருந்ததா என்பதற்கும் பிரதமர் மோடி விளக்கம் தரவில்லை.
போர் நிறுத்தமாவது முறையாக நடக்கிறதா என்றால் அதுவும் இல்லை. 18 ஆம் தேதியன்று மாலை 5 மணிக்கு போர் நிறுத்தம் என அறிவிக்கப்பட்டது. ஆனால் அன்றைய இரவும் பாகிஸ்தான் தனது தாக்குதலைத் தொடர்ந்தது. 12 ஆம் தேதியன்று இந்தியா - பாகிஸ்தான் இராணுவ அதிகாரிகள் பேச்சுவார்த்தை தொடங்கியது என்று மதியம் 12 மணிக்கு தகவல்கள் சொல்லப்படுகிறது. இந்தியா - பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகள் இடையே ஹாட்லைன் மூலம் பேச்சுவார்த்தை தொடங்கியது என்றும், இரு தரப்பிலிருந்தும், ராணுவ நடவடிக்கைகளுக்கான தலைமை இயக்குநர்கள் (DGMO) பேச்சுவார்த்தை நடத்துகிறார்கள் என்றும் செய்திகள் அதிகாரப் பூர்வமாகச் சொல்லப்பட்டன.
இரவு 8 மணிக்கு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் நாட்டு மக்களுக்கு உரையாற்றுகிறார் . ஆனால் இரவில் என்ன நடந்தது? எல்லையில் பாகிஸ்தான் மீண்டும் அத்துமீறல் செய்தது. சம்பா மாவட்டத்தில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.ஜம்மு, காஷ்மீருக்குள் ஊடுருவ முயன்ற பாகிஸ்தான் ட்ரோன்களை, பாதுகாப்புப்படையினர் சுட்டு வீழ்த்தி இருக்கிறார்கள். போர் நிறுத்தம் செய்யப்பட்டதாக இந்தியப் பிரதமர் அதிகாரப்பூர்வமாக விளக்கம் அளித்த பிறகு, பாகிஸ்தான் எப்படி அத்துமீறல் செய்கிறது? அப்படியானால் போரை இருதரப்பும் இல்லாமல், ஒரு தரப்பு மட்டுமே செய்ததா?
‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கைக்குப் பிறகு 12 ஆம் தேதி இரவு 8 மணிக்கு முதன்முறையாக நாட்டு மக்களுக்கு உரையாற்றினார் பிரதமர் மோடி. “அடி தாங்க முடியாமல் பாகிஸ்தானியர்கள் நம்மை தொடர்பு கொண்டு பேசினார்கள். இந்தியா அடித்து நொறுக்கியதால் போர் நிறுத்தத்திற்கு பாகிஸ்தான் கெஞ்ச வேண்டிய சூழல் ஏற்பட்டது. பாகிஸ்தான் டி.ஜி.எம்.ஓ. நமது ராணுவத்தை தொடர்பு கொண்டு போர் நிறுத்த கோரிக்கை வைத்தார். பயங்கரவாதத்திற்கு எதிரான இந்தியாவின் அடியால் தாக்குதலை நிறுத்துவதாக பாகிஸ்தான் ஒப்புக்கொண்ட பின் நாம் போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டோம். போர் நிறுத்தம் தற்காலிகமானதுதான். நமது படைகள் பாகிஸ்தானை கண்காணிக்கின்றன. இனிமேல் அவர்கள் அத்துமீறினால் முகத்திலேயே தாக்குவோம்” என்றார் பிரதமர் மோடி.
அவர்கள் போர் நிறுத்தத்துக்கு முன்வந்தார்கள் என்றால், மீண்டும் ஏன் தாக்குதல் நடத்துகிறார்கள்? போரில் முதலில் மரணிப்பது உண்மைதான் என்பார்கள். உண்மை மறைகிறது. மர்மம் உயிர்வாழ்கிறது.