தமிழ்நாடு

”இரக்கமற்ற ஒன்றிய அரசு” : வக்ஃப் மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து பேசிய திருச்சி சிவா MP!

ஒட்டுமொத்த வக்ஃப் மசோதாவை தி.மு.க எதிர்க்கிறது என மாநிலங்களவையில் திருச்சி சிவா MP உறுதியுடன் தெரிவித்துள்ளார்.

”இரக்கமற்ற ஒன்றிய அரசு” : வக்ஃப் மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து பேசிய திருச்சி சிவா MP!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

மக்களவையில் எதிர்க்கட்சிகளின் எதிர்ப்புகளை மீறி இஸ்லாமிய மக்களுக்கு எதிரான வக்ஃப் சட்டத் திருத்த மசோதாவை தாக்கல் செய்து ஒன்றிய பா.ஜ.க அரசு நேற்று நிறைவேற்றியுள்ளது. இன்று மாநிலங்களவையில் இம்மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதன் மீது விவாதம் நடைபெற்று வருகிறது.

மாநிலங்களவையில் இம்மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவிதது பேசிய தி.மு.க MP திருச்சி சிவா, ”வக்ஃப் சட்டத் திருத்த மசோதா மோசடியானது. அரசியல் சாசனத்திற்கு எதிரானது. இம்மசோதாவை முழுமையாக நிராகரிக்க வேண்டும் என வலியுறுத்தி தமிழ்நாடு சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அரசியல் சாசனத்திற்கு எதிரான, மதச்சார்பின்மைக்கு எதிரான இந்த மசோதாவை உச்ச நீதிமன்றம் நிச்சயம் ரத்து செய்யும்.

நாடாளுமன்றத்தின் கூட்டு நடவடிக்கைக்குழுவில் எதிர்க்கட்சிகளின் கருத்துக்கள் எதுவும் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. எத்தனை நாட்கள் இப்படியே செயல்படுவார்கள்? இதற்கெல்லாம் ஒரு நாள் முடிவு கிடைக்கும்.தமிழ்நாட்டில் விநாயகர் சதுர்த்தி அன்று ஊர்வலம் போகும் இந்துக்களுக்கு இஸ்லாமியர்கள் தண்ணீர் வழங்கி உபசரிப்பார்கள். தமிழ்நாடு, கேரளா, மேற்குவங்கம், தெலங்கானா போன்ற மாநிலங்களில் இந்துக்களும், இஸ்லாமியர்களும் ஒற்றுமையுடன் பண்டிகைகளை கொண்டாடுகின்றனர். ஆனால் ஹரியானாவில் ரம்ஜான் பண்டிகை அன்று விடுமுறை ரத்து செய்யப்பட்டுள்ளது. மீண்டும் மீண்டும் மதச்சார்பின்மைக்கு ஆபத்து ஏற்பட்டு வருகிறது.

வக்ஃப் நிர்வாகத்தையே கைப்பற்றுவதற்காகத்தான் வக்ஃப் திருத்த மசோதா கொண்டு வரப்படுகிறது. மெஜாரிட்டி இருப்பதால் சிறுபான்மையினருக்கு எதிராக செயல்படக் கூடாது. ஒட்டுமொத்த வக்ஃப் மசோதாவை தி.மு.க எதிர்க்கிறது.

ஒன்றிய அரசிற்கு காதுகள் இருக்கிறது. ஆனால் எதிர்க்கட்சிகளின் குரலுக்கு அது செவிமடுக்காது. கண்கள் இருக்கிறது. ஆனால் பாதிக்கப்பட்டவர்கள் மீது அதன் பார்வை படாது. வாய் இருக்கிறது. அது அவதூறுகளை மட்டுமே பரப்பும்.கைகள் இருக்கிறது. அது தன் அதிகாரத்தை கொண்டு பாதிக்கப்பட்டவர்களை ஒடுக்க மட்டுமே செய்கிறது.” என தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories