திருவான்மியூர், எல் பி ரோடு, காமராஜர் நகர், தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய கட்டிடத்தின் மூன்றாவது மாடியில் முதல் முறையாக நவீன வசதியுடன் கூடிய மாதிரி சார்பதிவாளர் அலுவலகம் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்பட்டது.
மாதிரி சார்பதிவாளர் அலுவலகத்தில் குளிரூட்டப்பட்ட காத்திருப்பு அறைகள், இருக்கை வசதிகள், wifi இணைய வசதிகள், மொபைல் சார்ஜிங் யூனிட், நூலக வசதி, தூய்மையான குடிநீர் வசதி, மாற்றுத்திறனாளிகள் மற்றும் மூத்த குடிமக்களுக்கான சிறப்பு வசதிகள், தூய்மையான கழிவறைகள், மின் தூக்கி, வாகன நிறுத்துமிடங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மின்னணு நுழைவு அட்டை அடிப்படையில் பதிவு அறைக்கு இடையூறு ஏற்படாத வகையில் அதிகபட்சம் 10 நபர்கள் மட்டும் அனுமதிக்கப்படும் வகையில் சிறப்பு கட்டமைப்பு அறிமுக படுத்த பட்டுள்ளது.
இந்த நிகழ்ச்சியில் நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன், வேளச்சேரி சட்டமன்ற உறுப்பினர் அசன் மௌலானா, சோழிங்கநல்லூர் திமுக சட்டமன்ற உறுப்பினர் அரவிந்த் ரமேஷ் கலந்து கொண்டனர்.
மாடல் சார்பதிவாளர் அலுவலகத்தை திறந்து வைத்த பிறகு செய்தியாளர்களை சந்தித்த பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி, “பதிவுத்துறையில் கடந்த ஆண்டை விட ரூ. 2,200 கோடி அதிக வருவாய் கிடைத்துள்ளது. அதனைத் தொடர்ந்து துறையின் செயல்பாடுகளை மேம்படுத்தும் நோக்கில் இணையம் போன்ற கூடுதல் வசதிகளுடன் புதிய மாதிரி சார்பதிவாளர் அலுவலகம் தற்போது திறக்கப்பட்டிருக்கிறது” என தெரிவித்தார்.