தமிழ்நாடு

”அரசின் நிவாரண உதவிகள் 100% சென்றடைய வேண்டும்” : 4 மாவட்ட அதிகாரிகளுக்கு முதலமைச்சர் அறிவுறுத்தல்!

அரசின் நிவாரண உதவிகள் 100% சென்றடைய வேண்டும் என அதிகாரிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.

”அரசின் நிவாரண உதவிகள் 100% சென்றடைய வேண்டும்” : 4 மாவட்ட அதிகாரிகளுக்கு முதலமைச்சர் அறிவுறுத்தல்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் டிச 17,18ம் தேதி வரலாறு காணாத அளவு அதி கனமழை பெய்தது. அதன்காரணமாக, திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களின் பல வட்டங்களில் மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். தாமிரபரணி ஆற்றிலும், அதனைச் சுற்றியிருக்கக்கூடிய பகுதிகளிலும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளதால் ஸ்ரீவைகுண்டம், ஏரல், தூத்துக்குடி நகரங்களில் நிலைமை மிகவும் மோசமானது.

உடனே மக்களைக் காப்பாற்றும் பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் துரிதப்படுத்தினார். மேலும் 10 அமைச்சர்கள், 10 இந்திய ஆட்சிப் பணி அலுவலர்கள் அங்கே மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்கு அனுப்பிவைத்தார். இராணுவ வீரர்கள் 168 பேர் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டனர். முன்னெச்சரிக்கையாக, 12 ஆயிரத்து 653 பேர் மீட்கப்பட்டு, 141 நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டு, உணவு, குடிநீர், மருத்துவ வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் அளிக்கப்பட்டது.

இதையடுத்து கடந்த டிச.21ம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கனமழையால் பாதிக்கப்பட்ட திருநெல்வேலி, தூத்துக்குடி பகுதிகளை ஆய்வு செய்தார். பிறகு தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.6000 வழங்கப்படும் என அறிவித்தார். மேலும் கன்னியாகுமரி, தென்காசி ஆகிய மாவட்டங்களிலும் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதைக் கருத்தில் கொண்டு அங்குள்ள அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் 1000 ரூபாய் வழங்கப்படும் எனவும் அறிவித்தார். பின்னர் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் இன்று தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களில் நிவாரணப் பணிகளை மேற்கொள்வது தொடர்பாக அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் உடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்தினார். அப்போது, "வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் அரசின் நிவாரண உதவிகள் 100% பொதுமக்களைச் சென்றடைவதை உறுதி செய்ய வேண்டும்" என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

banner

Related Stories

Related Stories