
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் ‘வெல்லும் தமிழ்ப் பெண்கள்’ – கழக மகளிரணியின் மேற்கு மண்டல மாநாடு 1.50 லட்சம் மகளிரின் வருகையுடன் எழுச்சியோடு நடந்து முடிந்துள்ளது.
இம்மாநாட்டிற்கு கழக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி தலைமை வகிக்க, கழகத் தலைவர், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்புரையாற்றினார்.
இதில் கலந்துகொண்டு கழக இளைஞரணிச் செயலாளர், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியது பின்வருமாறு,
“வெல்லும் தமிழ்ப் பெண்கள்’ மாநாட்டில் கடல் போல் கூடியிருக்கும் மகளிரணியினரை பார்த்த பிறகு, அடுத்த 10 நாட்களுக்கு சங்கிக் கூட்டத்திற்கும், அடிமை கூட்டத்திற்கும் தூக்கமே வராது.

மொழி உரிமை, மாநில உரிமை, பெண் உரிமை என்று வந்துவிட்டால் காஷ்மீரில் உள்ளவர்களுக்கு கூட தமிழ்நாட்டின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெயர்தான் முதலில் நியாபகம் வரும்.
அதற்கு சான்றாக, “தாய்மொழி பேசக்கூடாது என்று என்னை சொல்பவர்கள், தமிழ்நாட்டிற்கு சென்று சகோதரர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களிடம் அதே கருத்தை சொல்ல தைரியம் உள்ளதா?” என முன்னாள் ஜம்மு - காஷ்மீர் முதல்வர் மெஹபூபா முஃப்தி, அண்மையில் ஊடகவியலாளருக்கு பதிலடி கொடுத்துள்ளார்.
வைக்கம் போராட்டத்தில் தந்தை பெரியார் கைது செய்யப்பட்டபோது, அவரது மனைவி அன்னை நாகம்மையார் போராட்டத்தை முன்னின்று நடத்திக்காட்டினார்கள். இவ்வாறு, திராவிட இயக்கத்தின் தொடக்கம் முதலே மகளிர் பெரும் பங்காற்றி வருகின்றனர். அதன் தொடர்ச்சியாகதான், இன்றைய ‘வெல்லும் தமிழ்ப் பெண்கள்’ மாநாடு அமைந்துள்ளது.

அதிலும் குறிப்பாக, தற்போதைய திராவிட மாடல் ஆட்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செயல்படுத்தி வரும் மகளிர் நலன் காக்கும் திட்டங்களான கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம், விடியல் பயணம், புதுமைப்பெண் உள்ளிட்டவை முதல் பாகம் மட்டும்தான். திராவிட மாடல் 2.O-ல் மேலும் பல திட்டங்கள் செயல்படுத்தப்பட இருக்கின்றன.
மகளிர் நலன்களுக்காக மட்டுமல்லாது - மகளிர் உரிமைக்காகவும் பல்வேறு திட்டங்களையும் சட்டங்களையும் கொண்டு வந்த பெருமை நமது தி.மு.கழகத்திற்கு உண்டு.
பாசிச சக்திகளுக்கு சலாம் போட்டு தமிழ்நாட்டின் கதவுகளை திறந்து விட நாம் அண்ணா தி.மு.க கிடையாது. இது, அண்ணா உருவாக்கிய திராவிட முன்னேற்றக் கழகம், கலைஞர் வளர்த்தெடுத்த திராவிட முன்னேற்றக் கழகம். தலைவர், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களால் வழிநடத்தப்படுகின்ற திராவிட முன்னேற்றக் கழகம்!
சுயமரியாதைமிக்க தமிழ்நாட்டு மகளிர் ஒன்றிணைந்து பாசிஸ்ட்டுகளையும் அடிமைக் கூட்டத்தையும் வீழ்த்தப்போவது உறுதி!”






